அவன் மோவாபியர்களையும் முறியடித்து, அவர்களைத் தரையிலே படுக்கச்செய்து, அவர்கள்மேல் நூல்போட்டு அளவெடுத்து இரண்டு வரிசை மனிதர்களைக் கொன்றுபோட்டு, ஒரு வரிசை மனிதர்களை உயிரோடு வைத்தான்; இவ்விதமாக மோவாபியர்கள் தாவீதுக்குச் சேவை செய்து, அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள்.
ரேகோபின் மகனான ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜா ஐப்பிராத்து நதி அருகில் இருக்கிற இடத்தைத் திரும்பத் தனக்குக் கைப்பற்றுவதற்காகச் சென்றபோது, தாவீது அவனையும் முறியடித்து,
தமஸ்குவிற்கு அடுத்த சீரியாவிலே படைகளை வைத்தான்; சீரியர்கள் தாவீதுக்குச் சேவை செய்து, அவனுக்குக் கப்பங்கட்டினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம், யெகோவா அவனைக் காப்பாற்றினார்.
ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்செய்துகொண்டிருந்ததால், ராஜாவான தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசரோடு யுத்தம்செய்து, அவனை முறியடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும் தோயீ தன்னுடைய மகனான யோராமை ராஜாவினிடம் அனுப்பினான். மேலும் யோராம் தன்னுடைய கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான பொருட்களைக் கொண்டுவந்தான்.
அவன் கொண்டு வந்தவைகளை தாவீது ராஜா வெற்றிகண்ட சீரியர்கள், மோவாபியர்கள், அம்மோன் மக்கள், பெலிஸ்தர்கள், அமலேக்கியர்கள் என்னும் எல்லா தேசத்தார்களிடத்திலும்,
ரேகோபின் மகனான ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவினிடமும் கொள்ளையிட்டதிலும் எடுத்து, யெகோவாவுக்கு நியமித்த வெள்ளியோடும் பொன்னோடும் யெகோவாவுக்குப் பிரதிஷ்டை செய்தான்.
ஏதோமில் இராணுவ படைகளை வைத்தான்; ஏதோம் எங்கிலும் அவன் இராணுவ படைகளை வைத்ததால், ஏதோமியர்கள் எல்லோரும் தாவீதைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன எல்லா இடத்திலும் யெகோவா அவனைக் காப்பாற்றினார்.