பின்பு தாவீது படைகளில் மூன்றில் ஒரு பிரிவை யோவாபின் கையிலும், மூன்றில் ஒரு பிரிவைச் செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் கையிலும், மூன்றில் ஒரு பிரிவைக் கித்தியனான ஈத்தாயின் கையிலுமாக அனுப்பி: நானும் உங்களோடு புறப்பட்டு வருவேன் என்று ராஜா இராணுவங்களுக்குச் சொன்னான்.
மக்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் ஓடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒரு பொருட்டாக நினைக்கமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் இறந்துபோனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பத்தாயிரம்பேருக்கு சமமானவர்; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவி செய்கிறது எங்களுக்கு நலமாக இருக்கும் என்றார்கள்.
அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாகத் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா நகர வாசலின் ஓரத்திலே நின்றான்; மக்கள் எல்லோரும் நூறு நூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள்.
ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: வாலிபனான அப்சலோமை எனக்காக மெதுவாக நடத்துங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக் குறித்து தலைவர்களுக்கெல்லாம் கட்டளையிட்டதை மக்கள் எல்லோரும் கேட்டிருந்தார்கள்.
அப்சலோம் தாவீதின் வீரர்களை சந்திக்க நேர்ந்தது; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின்கீழ் வந்ததினால், அவனுடைய தலை கர்வாலி மரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்திற்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை தள்ளிப்போனது.
அப்பொழுது யோவாப் தனக்கு அதை அறிவித்தவனை நோக்கி: நீ அதைப் பார்த்தாயே; பின்பு ஏன் அவனை அங்கேயே வெட்டி, நிலத்தில் விழும்படி செய்யவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக்காசையும் ஒரு வாரையும் கொடுக்கக் கடமையுள்ளவனாக இருப்பேனே என்றான்.
அந்த மனிதன் யோவாபை நோக்கி: என்னுடைய கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய மகன்மேல் என்னுடைய கையை நீட்டமாட்டேன்; வாலிபனான அப்சலோமை நீங்களே காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள் கேட்கக் கட்டளையிட்டாரே.
பின்பு யோவாப்: நான் இப்படி உன்னோடு பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன்னுடைய கையிலே மூன்று ஈட்டிகளை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலி மரத்தின் நடுவிலே உயிரோடு தொங்கிக்கொண்டிருக்கும்போது, அவனுடைய மார்பிலே குத்தினான்.
அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மிகப் பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீடுகளுக்கு ஓடிப்போனார்கள்.
அப்சலோம் உயிரோடு இருக்கும்போது: என்னுடைய பெயரை நினைக்கச்செய்யும்படியாக எனக்கு மகன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்குத் தன்னுடைய பெயரை சூட்டினான்; அது இந்த நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.
சாதோக்கின் மகனான அகிமாஸ்: யெகோவா ராஜாவை அவர்களுடைய எதிரிகளின் கைக்கு விலக்கி நியாயம் செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் வேகமாக ஓடட்டும் என்றான்.
யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக்கூடாது; இன்னொரு நாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் மகன் இறந்ததால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி,
சாதோக்கின் மகனான அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பின்பாக நானும் ஓடுகிறேன் என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படி உனக்கு நல்ல செய்தி இல்லாதிருக்கும்போது, நீ ஓடவேண்டியது என்ன என்றான்.
தாவீது உள் மற்றும் வெளி வாசலின் நடுவாக உட்கார்ந்திருந்தான்; இரவு காவலன் மதில் வாசலின் மேற்கூரையின்மேல் நடந்து, தன்னுடைய கண்களை உயர்த்தி, இதோ, ஒரு மனிதன் தனியே ஓடிவருகிறதைப் பார்த்து,
இரவு காவலன், வேறொருவன் ஓடிவருகிறதைப் பார்த்து: அதோ இன்னொரு மனிதன் தனியே ஓடிவருகிறான் என்று வாயிற்காவலனைக் கூப்பிட்டுச் சொன்னான்; அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
மேலும் இரவு காவலன்; முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசுடைய ஓட்டம்போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனிதன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.
அப்பொழுது ராஜா: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரனையும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒரு பெரிய குழப்பம் இருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான்.
அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்த வாலிபனுக்கு நடந்ததுபோல, ராஜாவான என் ஆண்டவனுடைய எதிரிகளுக்கும், தீங்கு செய்ய உமக்கு விரோதமாக எழும்புகிற யாவருக்கும் நடக்கட்டும் என்றான்.
அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, நகர வாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகும்போது: என் மகனான அப்சலோமே, என் மகனே, என் மகனான அப்சலோமே, நான் உனக்குப் பதிலாக இறந்துபோனால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.