Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

2 Kings Chapters

2 Kings 4 Verses

1 {விதவையும் எண்ணையும்} [PS] தீர்க்கதரிசிகளுடைய கூட்டத்தாரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு பெண் எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் கணவன் இறந்துபோனான்; உமது அடியான் யெகோவாவுக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு மகன்களையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள்.
2 எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெயைத் தவிர உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள்.
3 அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அண்டைவீட்டுக்காரர்கள் எல்லோரிடத்திலும் அநேகம் காலியான பாத்திரங்களைக் கேட்டுவாங்கி,
4 நீயும் உன் பிள்ளைகளும் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் ஊற்றி, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.
5 அவள் அவனிடத்திலிருந்துபோய், கதவைப் பூட்டிக்கொண்டு, மகன்கள் அவளிடத்தில் பாத்திரங்களை கொடுக்க, அவள் அவைகளில் ஊற்றினாள்.
6 அந்தப் பாத்திரங்கள் நிறைந்தபின்பு, அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறு பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்றுபோனது.
7 அவள் போய் தேவனுடைய மனிதனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீதம் இருக்கிறதைக்கொண்டு நீயும் உன் மகன்களும் வாழக்கையை நடத்துங்கள் என்றான். [PS]
8 {சூனேமியாளின் மகன் உயிர்ப்பிக்கப்படுதல்} [PS] பின்பு ஒரு நாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு பெண் அவனை சாப்பிட வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பிரயாணமாக வருகிறபோதெல்லாம் சாப்பிடுவதற்காக அங்கே வந்து தங்குவான்.
9 அவள் தன் கணவனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனிதனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.
10 நாம் மேல்மாடியில் ஒரு சிறிய அறையைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.
11 ஒரு நாள் அவன் அங்கே வந்து, அந்த அறையிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான்.
12 அவன் தன்னுடைய வேலைக்காரனாகிய கேயாசியை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனுக்கு முன்பாக நின்றாள்.
13 அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல கரிசனையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும் என்றும் ராஜாவிடமாவது சேனாதிபதியிடமாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்றும் அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் மக்களின் நடுவே நான் சுகமாகக் குடியிருக்கிறேன் என்றாள்.
14 அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குக் குழந்தை இல்லை, அவளுடைய கணவனும் அதிக வயதுள்ளவன் என்றான்.
15 அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள்.
16 அப்பொழுது அவன்: ஒரு கர்ப்பகாலத்திட்டத்தில் ஒரு மகனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: இல்லை, தேவனுடைய மனிதனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு பொய் சொல்லவேண்டாம் என்றாள்.
17 அந்த பெண் கர்ப்பவதியாகி, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு கர்ப்பகாலத்திட்டத்தில் ஒரு மகனைப் பெற்றாள்.
18 அந்த மகன் வளர்ந்தான், ஒரு நாள் அவன் அறுப்பறுக்கிறவர்களிடத்திலிருந்த தன் தகப்பனிடம் போயிருக்கும்போது,
19 தன் தகப்பனைப் பார்த்து: என் தலை வலிக்கிறது, என் தலை வலிக்கிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய் விடு என்றான்.
20 அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானம்வரை அவள் மடியில் இருந்து இறந்துபோனான்.
21 அப்பொழுது அவள் மாடிக்கு ஏறிப்போய், அவனை தேவனுடைய மனிதனின் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிவிட்டு போய்,
22 தன் கணவனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாக தேவனுடைய மனிதன் இருக்கும் இடம்வரை போய்வருவதற்கு; வேலைக்காரர்களில் ஒருவனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்.
23 அப்பொழுது அவன்: இது அமாவாசையும் அல்ல ஓய்வு நாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்திற்கு ஏன் போகவேண்டும் என்று கேட்கச் சொன்னான். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போகவேண்டியிருக்கிறது என்று சொல்லியனுப்பி,
24 கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய, போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,
25 கர்மேல் மலையிலிருக்கிற தேவனுடைய மனிதனிடத்திற்குப் போனாள்; தேவனுடைய மனிதன் தூரத்திலே அவளை வரக்கண்டு, தன் வேலைக்காரனாகிய கேயாசியைப் பார்த்து: அதோ சூனேமியாள் வருகிறாள்.
26 நீ அவளுக்கு எதிர்கொண்டு ஓடி, நீ சுகமாயிருக்கிறாயா, உன் கணவன் சுகமாயிருக்கிறானா, அந்தப் பிள்ளை சுகமாயிருக்கிறதா என்று அவளிடத்தில் கேள் என்றான். அவள்: சுகம்தான் என்று சொல்லி,
27 மலையில் இருக்கிற தேவனுடைய மனிதனிடத்தில் வந்து, அவனுடைய காலைப் பிடித்துக்கொண்டாள்; அப்பொழுது கேயாசி அவளை விலக்கிவிட வந்தான்; தேவனுடைய மனிதன்: அவளைத் தடுக்காதே; அவளுடைய ஆத்துமா துக்கமாயிருக்கிறது; யெகோவா அதை எனக்கு அறிவிக்காமல் மறைத்துவைத்தார் என்றான்.
28 அப்பொழுது அவள், என் ஆண்டவனே எனக்கு ஒரு மகன் வேண்டும் என்று நான் உம்மிடத்தில் கேட்டேனா? என்னை ஏமாற்றவேண்டாம் என்று நான் சொல்லவில்லையா என்றாள்.
29 அப்பொழுது அவன் கேயாசியைப் பார்த்து: நீ உன் பயணத்திற்கான உடையை அணிந்துகொண்டு, என் தடியை உன் கையில் பிடித்துக்கொண்டு, வழியில் யாரைச் சந்தித்தாலும் அவனைக் கேள்வி கேட்காமலும், உன்னை ஒருவன் கேள்வி கேட்டாலும் அவனுக்கு பதில் சொல்லாமலும் போய், என் தடியை அந்தச் சிறுவனின் முகத்தின்மேல் வை என்றான்.
30 சிறுவனின் தாயோ: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான்.
31 கேயாசி அவர்களுக்கு முன்னே போய், அந்தத் தடியைச் சிறுவனின் முகத்தின்மேல் வைத்தான்; ஆனாலும் சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை; ஆகையால் அவன் திரும்பி அவனுக்கு எதிர்கொண்டு வந்து: சிறுவன் கண் விழிக்கவில்லை என்று அவனுக்கு அறிவித்தான்.
32 எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, இந்தச் சிறுவன் அவனுடைய கட்டிலின்மேல் இறந்துகிடந்தான்.
33 உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப்பூட்டி, யெகோவாவை நோக்கி வேண்டுதல்செய்து,
34 அருகில்போய், தன் வாய் சிறுவனின் வாயின்மேலும், தன் கண்கள் அவனுடைய கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவனுடைய உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக்கொண்டான்; அப்பொழுது சிறுவனின் உடலில் சூடு ஏற்பட்டது.
35 அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பவும் அருகில்போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தச் சிறுவன் ஏழுமுறை தும்மி தன் கண்களைத் திறந்தான்.
36 அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது; அவன், உன் மகனை எடுத்துக்கொண்டுபோ என்றான்.
37 அப்பொழுது அவள் உள்ளே போய், அவனுடைய பாதத்திலே விழுந்து, தரைவரை பணிந்து, தன் மகனை எடுத்துக்கொண்டு வெளியே போனாள். [PS]
38 {பானையிலிருந்த விஷம் நீங்குதல்} [PS] எலிசா கில்காலுக்குத் திரும்பி வந்தான். தேசத்திலே பஞ்சம் உண்டானது; தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார், அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்; அவன் தன் வேலைக்காரனை நோக்கி: நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாருக்குக் கூழ் காய்ச்சு என்றான்.
39 ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலேபோய், ஒரு கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதின் காய்களை மடிநிறைய அறுத்துவந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாமலிருந்தது.
40 சாப்பிட அதைக் கூட்டத்தாருக்குக் கொடுத்தார்கள்; அவர்கள் அந்தக் கூழை எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடமுடியாமல்: தேவனுடைய மனிதனே, பானையில் விஷம் இருக்கிறது என்று சத்தமிட்டார்கள்.
41 அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, கூட்டத்தார் சாப்பிடும்படி அவர்களுக்கு கொடு என்றான்; அப்புறம் பானையிலே விஷம் இல்லாமல்போனது. [PS]
42 {நூறுபேருக்கு உணவளித்தல்} [PS] பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனிதன் தேவனுடைய மனிதனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் கதிர்த்தட்டுகளையும் கொண்டுவந்தான்; அப்பொழுது அவன்: கூட்டத்தாருக்குச் சாப்பிடக்கொடு என்றான்.
43 அதற்கு அவனுடைய வேலைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அதற்கு அவன்: அதைக் கூட்டத்தாருக்குச் சாப்பிடக்கொடு; சாப்பிட்டப் பிறகு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
44 அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான்; யெகோவாவுடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமல்லாமல் மீதியும் இருந்தது. [PE]
×

Alert

×