English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

2 Kings Chapters

2 Kings 15 Verses

1 இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருட ஆட்சியில், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் மகன் அசரியா ராஜாவானான்.
2 அவன் ராஜாவாகிறபோது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருடங்கள் எருசலேமிலே ஆட்சிசெய்தான்; எருசலேம் நகரத்தைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் எக்கோலியாள்.
3 அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
4 மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள்.
5 யெகோவா இந்த ராஜாவை வாதித்ததால், அவன் தன் மரணநாள்வரை தொழுநோயாளியாக இருந்து, தனித்து ஒரு வீட்டிலே குடியிருந்தான்; ராஜாவின் மகனாகிய யோதாம் அரண்மனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் மக்களை நியாயம் விசாரித்தான்.
6 அசரியாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
7 அசரியா இறந்தபின், அவனைத் தாவீதின் நகரத்திலே அவனுடைய முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோதாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
8 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருட ஆட்சியில் யெரொபெயாமின் மகனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறு மாதங்கள் ஆட்சிசெய்து,
9 தன் முன்னோர்கள் செய்ததுபோல, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை.
10 யாபேசின் மகனாகிய சல்லூம் அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, மக்களுக்கு முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
11 சகரியாவின் மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
12 உன் மகன்கள் நான்காம் தலைமுறைவரை இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்கள் என்று யெகோவா யெகூவோடே சொன்ன வார்த்தை இதுதான்; அப்படியே நிறைவேறியது.
13 யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருட ஆட்சியில் யாபேசின் மகனாகிய சல்லூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் ஆட்சிசெய்தான்.
14 காதியின் மகனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் மகனாகிய சல்லூமை சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
15 சல்லூமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த சதித்திட்டமும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
16 அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும், திர்சா தொடங்கி அதின் எல்லைகளையும் தாக்கினான்; அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லையென்று அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளின் கர்ப்பங்களையெல்லாம் கிழித்துப்போட்டான்.
17 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தொன்பதாம் ஆளுகை வருடத்தில், காதியின் மகனாகிய மெனாகேம் இஸ்ரவேல்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பத்துவருடங்கள் அரசாட்சிசெய்து, அவன் தன் நாட்களிலெல்லாம் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
18 இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு விலகாதிருந்தான்.
19 அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாக வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் அரசாட்சியை தன் கையில் பலப்படுத்துவதற்காக, அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான்.
20 இந்தப் பணத்தை அசீரியாவின் ராஜாவிற்குக் கொடுக்கும்படி, மெனாகேம் இஸ்ரவேலில் பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது வெள்ளிச் சேக்கல் சுமத்தினான்; அப்படியே அசீரியாவின் ராஜா தேசத்திலே நிற்காமல் திரும்பிப்போனான்.
21 மெனாகேமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
22 மெனாகேம் இறந்தபின், அவனுடைய மகனாகிய பெக்காகியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
23 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருட ஆட்சியில், மெனாகேமின் மகனாகிய பெக்காகியா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டுவருடங்கள் அரசாட்சிசெய்து,
24 யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு விலகவில்லை.
25 ஆனாலும் ரெமலியாவின் மகனாகிய பெக்கா என்னும் அவனுடைய அதிகாரி அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, கீலேயாத் மனிதர்களில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆரியேயையும் ராஜாவின் வீடாகிய அரண்மனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
26 பெக்காகியாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
27 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருட, ரெமலியாவின் மகனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இருபதுவருடங்கள் அரசாட்சிசெய்து,
28 யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை.
29 இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிமக்களைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.
30 ஏலாவின் மகனாகிய ஓசெயா ரெமலியாவின் மகனாகிய பெக்காவுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, அவனை உசியாவின் மகனாகிய யோதாமின் இருபதாம் வருடத்தில் வெட்டிக்கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
31 பெக்காவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
32 இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் மகன் பெக்காவின் இரண்டாம் வருட ஆட்சியில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் மகன் யோதாம் ராஜாவானான்.
33 அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருடங்கள் ஆட்சிசெய்தான்; சாதோக்கின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் எருசாள்.
34 அவன் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான்.
35 மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள்; இவன் யெகோவாவுடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான்.
36 யோதாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
37 அந்நாட்களிலே யெகோவா சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் மகனாகிய பெக்காவையும் யூதாவுக்கு விரோதமாக அனுப்பத்தொடங்கினார்.
38 யோதாம் இறந்தபின். தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் முன்னோர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஆகாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
×

Alert

×