இவைகளெல்லாம் முடிந்தபின்பு, வந்திருந்த இஸ்ரவேலர்கள் எல்லோரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீன் எங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலும் இருந்த சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் இடித்துப்போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் சொந்த இருப்பிடத்திற்குத் திரும்பினார்கள்.
இந்த வார்த்தை பிரபலமானபோது, இஸ்ரவேல் மக்கள் தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரவிலும் முதற்பலன்களைத் திரளாகக் கொண்டுவந்து, சகலத்திலும் தசமபாகத்தைப் பரிபூரணமாகக் கொடுத்தார்கள்.
சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தோம்; இன்னும் மீதம் இருக்கிறது; யெகோவா தம்முடைய மக்களை ஆசீர்வதித்ததால் இந்தத் திரளான தானியக் குவியல் மீந்திருக்கிறது என்றான்.
அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்செய்யப்பட்டவைகளையும் உண்மையாக எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாக இருந்தான்.
வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத்தவிர, யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் குழுக்களின்படியே, தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாக அநுதின சம்பளம் கொடுக்கப்பட்டது.
தங்கள் முன்னோர்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் குழுக்களின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும்,
அவர்களுடைய எல்லாக் கூட்டத்தின் அட்டவணையிலும் எழுதப்பட்ட அவர்களுடைய எல்லாக் குழந்தைகளுக்கும், மனைவிகளுக்கும், மகன்களுக்கும், மகள்களுக்கும் பங்கு கொடுத்தார்கள்; அவர்கள் பரிசுத்தமானதை உண்மையின்படி பரிசுத்தமாக விசாரித்தார்கள்.
ஆசாரியர்களில் அனைத்து ஆண்பிள்ளைகளுக்கும் லேவியர்களுக்குள்ளே அட்டவணையில் எழுதப்பட்டவர்கள் எல்லோருக்கும் சம்பளம் கொடுக்க, ஆசாரியர்களுடைய ஒவ்வொரு பட்டணத்தைச்சார்ந்த வெளிநிலங்களிலும் ஆரோன் வம்சத்தாரில் பேர்பேராகக் குறிக்கப்பட்ட மனிதர்கள் இருந்தார்கள்.
அவன் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலும், தன் தேவனைத் தேடும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் அடுத்த காரியத்திலும் என்ன செய்யத் தொடங்கினானோ, அதையெல்லாம் தன் முழு இருதயத்தோடும் செய்து வெற்றிபெற்றான்.