எருசலேமின் குடிமக்கள், அவனுடைய இளையமகனாகிய அகசியாவை அவனுடைய இடத்தில் ராஜாவாக்கினார்கள்; அரபியரோடு கூடவந்து முகாமிட்ட படையிலிருந்தவர்கள், மூத்தமகன்கள் அனைவரையும் கொன்றுபோட்டார்கள்; இந்தவிதமாக அகசியா என்னும் யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் ஆட்சிசெய்தான்.
அவன் ஆகாபின் குடும்பத்தாரைப்போல் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவனுடைய தகப்பன் இறந்தபிறகு, அவர்கள் அவனுடைய அழிவிற்கு ஆலோசனைக்காரர்களாக இருந்தார்கள்.
அப்பொழுது, தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு போர்செய்யும்போது, தன்னை அவர்கள் ராமாவிலே வெட்டின காயங்களை யெஸ்ரெயேலிலே ஆற்றிக்கொள்ள அவன் திரும்பினான்; அப்பொழுது ஆகாபின் மகனாகிய யோராம் வியாதியாயிருந்ததால் யூதாவின் ராஜாவாகிய யோராமின் மகன் அகசியா, யெஸ்ரெயேலிலிருக்கிற அவனைப் பார்க்கப் போனான்.
அகசியா யோராமிடத்திற்கு வந்தது அவனுக்கு தேவனால் உண்டான கேடாக மாறினது; எப்படியென்றால், அவன் வந்தபோது யோராமுடனேகூட, யெகோவா ஆகாபின் குடும்பத்தாரை அழிக்க அபிஷேகம்செய்யப்பட்ட நிம்சியின் மகனாகிய யெகூவை நோக்கி வெளியே போனான்.
பின்பு, அவன் அகசியாவைத் தேடினான்; சமாரியாவில் ஒளிந்துகொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து, யெகூவினிடத்தில் கொண்டுவந்து, அவனைக் கொன்றுபோட்டு: இவன் தன் முழு இருதயத்தோடும் யெகோவாவை தேடின யோசபாத்தின் மகன் என்று சொல்லி, அவனை அடக்கம்செய்தார்கள்; அப்படியே அரசாளுகிறதற்குத் திறமையுள்ள ஒருவரும் அகசியாவின் குடும்பத்திற்கு இல்லாமற்போனது.