யுத்தத்திற்கு ஒத்தாசை செய்த வில்வீரர்களும், கவண்கல் எறிவதற்கும் வில்லினால் அம்பு எய்வதற்கும் வலது இடது கை பழக்கமான பலசாலிகளான மற்ற மனிதர்களுமாவன: சவுலின் சகோதரர்களாகிய பென்யமீன் கோத்திரத்தில்,
காத்தியர்களில் கேடகமும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம் போன்ற முகமும், மலைகளில் இருக்கிற வெளிமான் வேகம் போன்ற வேகமும் உள்ளவர்களாக இருந்து, யுத்தவீரர்களான பலசாலிகள் சிலரும் வனாந்திரத்திலுள்ள பாதுகாப்பான இடத்தில் இருக்கிற தாவீதுக்கு ஆதரவாக சேர்ந்தார்கள்.
யோர்தான் கரைபுரண்டு போயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து, கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற அனைவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே.
தாவீது புறப்பட்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களை சந்தித்து: நீங்கள் எனக்கு உதவி செய்ய சமாதானமாக என்னிடம் வந்தீர்களானால், என்னுடைய இருதயம் உங்களோடு இணைந்திருக்கும்; என்னுடைய கைகளில் கொடுமை இல்லாமலிருக்க, என்னை என்னுடைய எதிரிகளுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களென்றால், நம்முடைய முற்பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான்.
அப்பொழுது அதிபதிகளுக்குத் தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கியதால், அவன்: “தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் மகனே, உமக்கு ஆதரவாக இருப்போம்; உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவி செய்கிறவர்களுக்கும் சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார்” என்றான்; அப்பொழுது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை படைகளுக்குத் தலைவர்களாக்கினான்.
சவுலின்மேல் யுத்தம்செய்யப்போகிற பெலிஸ்தர்களுடனே தாவீது வருகிறபோது, மனாசேயிலும் சிலர் அவனுக்கு ஆதரவாகச் சேர்ந்தார்கள்; பெலிஸ்தர்களின் பிரபுக்கள் யோசனைசெய்து, அவன் நம்முடைய தலைகளுக்கு மோசமாகத் தன்னுடைய ஆண்டவனாகிய சவுலிற்கு ஆதரவாகப் போவான் என்று அவனை அனுப்பிவிட்டார்கள்; அதனால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவில்லை.
அப்படியே அவன் சிக்லாகுக்குத் திரும்பிப்போகும்போது, மனாசேயில் அதனாக், யோசபாத், யெதியாயேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி என்னும் மனாசே கோத்திரத்தார்களின் ஆயிரம்பேர்களுக்கு தலைவர்கள் அவனுக்கு ஆதரவாக வந்தார்கள்.
இசக்கார் கோத்திரத்தில், இஸ்ரவேலர்கள் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லா சகோதரர்களுமே.
தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்க, இந்த யுத்தமனிதர்கள் எல்லோரும் அணி அணியாய் வைக்கப்பட்டவர்களாக, உத்தம இதயத்தோடு எப்ரோனுக்கு வந்தார்கள்; இஸ்ரவேலில் மற்ற அனைவரும் தாவீதை ராஜாவாக்க ஒருமனப்பட்டிருந்தார்கள்.