ஆனால் நான் எருசலேமைக் கனமான பாறையாக்குவேன். அதனைத் எடுக்க முயல்பவன் சிதைக்கப்படுவான். அந்த ஜனங்கள் உண்மையாகவே சிதைக்கப்பட்டு சிதறடிக்கப்படுவார்கள். ஆனால், பூமியிலுள்ள அனைத்து நாடுகளும் எருசலேமிற்கு எதிராகச் சண்டையிடக் கூடுவார்கள்.
ஆனால் அந்நேரத்தில் நான் குதிரைகளையும், அதன் மேல் வீரர்களையும் மயக்கமுறச் செய்வேன். நான் பகைவர்களின் குதிரைகளையும், குதிரை வீரர்களையும் பயத்தினால் பேதலிக்கச் செய்வேன். ஆனால் என் கண்கள் திறக்கும். நான் யூதாவின் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டிருப்பேன்.
யூதாவில் உள்ள குடும்பத் தலைவர்கள் ஜனங்களை உற்சாகப்படுத்துவார்கள். அவர்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே உங்களது தேவன். அவர் நம்மை பலமுள்ளவர்களாக்குகிறார்’ என்றார்கள்.
அந்நேரத்தில், நான் யூதாவிலுள்ள குடும்பத் தலைவர்களை காட்டில் எரியும் நெருப்பாக்குவேன். அவர்கள் தம் பகைவரை வைக்கோலை எரிக்கும் நெருப்புப்போல அழிப்பார்கள். அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள பகைவர்களை எல்லாம் அழிப்பார்கள். எருசலேம் ஜனங்கள் திரும்பவும் தம் இடமாகிய எருசலேமில் ஓய்ந்திருந்து குடியிருப்பார்கள்” என்றார்.
கர்த்தர் முதலில் யூதா ஜனங்களைக் காப்பாற்றுவார். எனவே, எருசலேம் ஜனங்கள் அதிகமாகத் தற்பெருமை கொள்ள முடியாது. எருசலேமிலுள்ள தாவீதின் குடும்பமும், மற்ற ஜனங்களும் யூதாவின் ஜனங்களைவிடத் தம்மைப் பெரியவர்களாகப் புகழ்ந்துக்கொள்ள முடியாது.
நான் எருசலேமில் உள்ள தாவீதின் குடும்பத்தாரையும் மற்ற ஜனங்களையும் கருணையின் ஆவியாலும், இரக்கத்தின் ஆவியாலும் நிரப்புவேன். அவர்கள் தாங்கள் குத்தின ஒருவரான என்னைப் பார்ப்பார்கள். அவர்கள் மிகவும் துக்கமாக இருப்பார்கள். அவர்கள், ஒருவன் தன் ஒரே மகனின் மரணத்துக்காக அழுகிறவனைப் போன்றும், ஒருவன் தன் மூத்த மகனின் மரணத்துக்காக அழுகிறவனைப் போன்றும் துக்கம் கொள்வார்கள்.