என் அன்பே! நீ அழகானவள். ஓ நீ அழகானவள். உன் முக்காட்டின் நடுவே உனது கண்கள் புறாக்களின் கண்களைப் போன்றுள்ளன. உன் நீண்ட கூந்தல் கீலேயாத் மலைச்சரிவில் நடன மாடிக்கொண்டிருக்கும் வெள்ளாட்டு மந்தை போல அசைந்துகொண்டிருக்கிறது.
உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போன்றுள்ளன. அவை இரட்டைக் குட்டிகள் போட்டு எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப்போன்றுள்ளன.
என் அன்பே, என் மணமகளே, உன் அன்பு மிக அழகானது. உன் அன்பு திராட்சை ரசத்தைவிடச் சிறந்தது. உன் பரிமள தைலங்களின் மணம் சகல சுகந்தவர்க்கங்களின் மணத்தைவிடச் சிறந்தது.
என் அன்பே! என் மணமகளே! நீ சுத்தமானவள். நீ பூட்டப்பட்ட தோட்டத்தைப் போன்றும், பூட்டிவைக்கப்பட்ட குளத்தைப் போன்றும், அடைக்கப்பட்ட நீரூற்றைப்போன்றும் இருக்கிறாய்.
வாடைக் காற்றே எழும்பு. தென்றலே வா. என் தோட்டத்தில் வீசு. உன் இனிய மணத்தைப் பரப்பு. என் அன்பரைத் தன் தோட்டத்திற்குள் நுழையவிடு. அவர் இனிய பழங்களைச் சாப்பிடட்டும்.