ஒரு நாடு அடிபணிய மறுத்தால், அது குறுகிய காலமே ஆளும் தீய தலைவர்களைப் பெறும். ஆனால் ஒரு நாட்டிற்கு நல்லவனும் ஞானவானுமாகிய ஒருவன் தலைவனாக இருந்தால், அங்கே நீண்டக் காலம் நிலைத்த ஆட்சி நடைபெறும்.
ஏழைகளை ஏமாற்றி அதிக அளவில் வட்டியை வாங்கி நீ செல்வந்தன் ஆனால், அச்செல்வத்தை நீ விரைவில் இழந்துவிடுவாய். இரக்கம் உள்ளவனிடம் அச்செல்வம் போய்ச் சேர்ந்துவிடும்.
ஒருவன் தன் பாவங்களை மறைக்க முயன்றால் அவனால் வெற்றிபெற இயலாது. ஆனால் ஒருவன் தன் பாவங்களுக்கு வருந்தி, தன் பாவங்களை ஒப்புக்கொண்டு தவறு செய்வதை நிறுத்திவிட்டால், தேவனும், மற்ற எல்லா ஜனங்களும் அவனுக்கு இரக்கம் காண்பிப்பார்கள்.
ஒருவன் எப்பொழுதும் கர்த்தருக்கு மரியாதை செய்தால், அவன் ஆசீர்வதிக்கப்படுவான். ஆனால் ஒருவன் பிடிவாதமாக கர்த்தருக்கு மரியாதை தர மறுத்தால், பிறகு அவனுக்குத் துன்பங்களே ஏற்படும்.
ஆட்சி செய்பவன் ஞானமுள்ளவனாக இல்லாவிட்டால், தனக்குக் கீழுள்ள ஜனங்களைத் துன்புறுத்துவான். ஆனால் நேர்மையாய் ஆட்சி செய்து, ஜனங்களை ஏமாற்றுவதை வெறுக்கிறவன் நீண்டகாலம் ஆட்சி செய்வான்.
ஒரு நீதிபதி நேர்மையானவனாக இருக்க வேண்டும். ஒருவன் இன்னான் என்ற காரணத்திற்காகவே அவனுக்குச் சார்பாகப் பேசக்கூடாது. ஆனால் சில நியாயாதிபதிகள் தனக்குத் தரப்படும் சிறு தொகைகளுக்காகக்கூட தங்கள் முடிவுகளை மாற்றிக்கொள்கின்றனர்.
ஒருவன் செய்கிற தவறைச் சுட்டிக் காட்டி அவனுக்கு உதவிசெய்தால் பிற்காலத்தில் உன்னோடு மகிழ்ச்சியாக இருப்பான். எப்பொழுதும் மென்மையான வார்த்தைகளையே பேசுவதைவிட இது நல்லது.
சிலர் தம் தந்தையிடமிருந்தும் தாயிடமிருந்தும் திருடிக்கொள்கின்றனர். அவர்கள் “இது தவறில்லை” என்று சொல்கிறார்கள். ஆனால் அவன் வீட்டுக்குள் நுழைந்து எல்லாப் பொருட்களையும் நொறுக்கும் தீயவனைப் போன்றவன்.
தீயவன் ஒருவன் அரசாளுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவன் நாட்டு ஜனங்கள் ஒளிந்துக்கொள்வார்கள். ஆனால் தீயவன் தோற்கடிக்கப்பட்டால், நல்லவர்கள் மீண்டும் ஆள்வார்கள்.