உனது நண்பன் சில நேரங்களில் உன்னைப் புண்படுத்தலாம். ஆனால் அதை விரும்பிச் செய்யவில்லை. எதிரியோ வித்தியாசமானவன். அவன் உன்னிடம் கருணையோடு இருந்தாலும் காயப்படுத்தவே விரும்புவான்.
நீ உனது நண்பர்களையும் உனது தந்தையின் நண்பர்களையும் மறந்துவிடாதே. உனக்குத் துன்பம் நேரும்போது, உதவிக்காகத் தூரத்தில் உள்ள உன் சகோதரனை நாடிப்போகாதே. தூரத்தில் உள்ள உன் சகோதரனைத் தேடிப்போவதைவிட அருகில் உள்ளவனிடம் சென்று உதவி கேட்பது நல்லது.
நீ உனது அயலானை உரத்த குரலில், “காலை வணக்கம்” கூறி எழுப்பாதே. இது அவனை எரிச்சல்படுத்தும். அவன் இதனை வாழ்த்தாக எடுத்துக்கொள்ளாமல் சாபமாக எடுத்துக்கொள்வான்.
இரும்புக் கத்தியைக் கூராக்க ஜனங்கள் இரும்பையே பயன்படுத்துவார்கள். இதே விதத்தில் ஒருவரிடமிருந்து ஒருவர் அறிந்துகொள்வதன் மூலம், இருவருமே கூர்மை அடையமுடியும்.
அத்திமரத்தை வளர்ப்பவன் அதன் பழத்தை உண்பான். இதுபோலவே, தன் எஜமானனைக் கவனிக்கிறவனும் அதனால் பல்வேறு பயன்களைப் பெறுவான். எஜமானனும் அவனைக் கவனித்துக் கொள்வான்.
ஜனங்கள் ஏறக்குறைய சவக்குழியைப் போன்றவர்கள். சாவுக்கும் அழிவுக்கும் இடமாக விளங்கும் சவக்குழியைப் போன்ற ஜனங்கள் எப்போதும் மேலும் மேலும் ஆசையுடையவர்களாக இருப்பார்கள்.
தங்கத்தையும் வெள்ளியையும் சுத்தப்படுத்த ஜனங்கள் நெருப்பைப் பயன்படுத்துகின்றனர். இது போலவே மனிதனும் ஜனங்கள் தனக்கு அளிக்கும் புகழ்ச்சியால் சோதிக்கப்படுகிறான்.