நான் கலக்கமடைந்தேன். ஏனென்றால், நான் சேகரிக்கப்பட்டிருக்கிற பழங்களைப் போன்றவன். பறிக்கப்பட்ட திராட்சைப் பழங்களைப் போன்றவன். உண்பதற்குத் திராட்சைகள் இல்லாமல் போகும். நான் விரும்பும் அத்திப் பழங்கள் இல்லாமல் போகும்.
நான் கூறுவது என்னவெனில் நம்பிக்கைக்குரிய ஜனங்கள் எல்லாம் போய்விட்டார்கள். நாட்டில் நல்ல ஜனங்கள் எவரும் மீதியாகவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களைக் கொல்ல காத்துக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் தம் சகோதரர்களை வலையில் பிடிக்க விரும்புகின்றனர்.
ஜனங்கள் தங்களின் இரண்டு கைகளினால் தீமை செய்ய நல்லவர்களாக இருக்கிறார்கள். அதிகாரிகள் லஞ்சத்தைக் கேட்கிறார்கள். வழக்கு மன்றத்தில் தீர்ப்பை மாற்ற நீதிபதிகள் பணம் பெறுகிறார்கள். “முக்கியமான தலைவர்கள்” நல்லதும் நேர்மையானதுமான முடிவுகளைச் செய்கிறதில்லை. அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்வார்கள்.
அவர்களில் நல்லவர் கூட முட்புதர் போன்றுள்ளனர். அவர்களில் மிகச் சிறந்தவர்கள் கூட பின்னிப் பிணைந்து கிடக்கும் முட்புதரைவிட வஞ்சகர்களாக இருக்கிறார்கள். இந்த நாள் வரும் என்று உங்களுடைய தீர்க்கதரிசிகள் சொன்னார்கள். உங்களது காவற்காரரின் நாள் வந்திருக்கிறது. இப்பொழுது நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். இப்பொழுது நீங்கள் குழம்பிப்போய் இருக்கிறீர்கள்.
ஒருவரின் எதிரிகள் அவனது சொந்த வீட்டுக்குள்ளேயே இருப்பார்கள். ஒரு மகன் அவனது தந்தையை மதிக்கமாட்டான். ஒரு மகள் தன் தாய்க்கு எதிராகத் திரும்புவாள். ஒரு மருமகள் தன் மாமியார்க்கு எதிராகத் திரும்புவாள்.
நான் விழுந்திருக்கிறேன். ஆனால் பகைவனே, என்னைப் பார்த்துச் சிரிக்காதே, நான் மீண்டும் எழுந்திருப்பேன். நான் இப்பொழுது இருளில் அமர்ந்திருக்கிறேன். ஆனால் கர்த்தர் எனக்கு ஒளியாக இருப்பார்.
நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தேன். எனவே அவர் என்னோடு கோபமாக இருந்தார். ஆனால் அவர் வழக்கு மன்றத்தில் எனக்காக வாதாடுவார். அவர் எனக்குச் சரியானவற்றை செய்வார். பின்னர் அவர் என்னை வெளிச்சத்திற்குள் கொண்டு வருவார். அவர் சரியானவர் என்று நான் பார்ப்பேன்.
என் எதிரி என்னிடம், “உன் தேவனாகிய கர்த்தர் எங்கே?” என்றாள். ஆனால் என் எதிரி இதனைப் பார்ப்பாள். அவள் அவமானம் அடைவாள். அந்த நேரத்தில் நான் அவளைப் பார்த்து சிரிப்பேன். ஜனங்கள் அவளுக்கு மேலே தெருவிலுள்ள புழுதியைப் போன்று நடப்பார்கள்.
உனது ஜனங்கள் உன் நட்டிற்க்குத் திரும்புவார்கள். அவர்கள் அசீரியாவிலிருந்தும் எகிப்தின் நகரங்களிலிருந்தும் திரும்பி வருவார்கள். உனது ஜனங்கள் எகிப்திலிருந்தும் ஐபிராத்து ஆற்றின் அடுத்தப் பக்கத்திலிருந்தும் வருவார்கள். அவர்கள் மேற்கிலுள்ள கடல் பகுதியிலிருந்தும் கிழக்கிலுள்ள மலைகளிலிருந்தும் வருவார்கள்.
எனவே உனது ஜனங்களை நீ கோலினால் ஆட்சி செய். உனக்குச் சொந்தமான உன் ஜனங்கள் கூட்டத்தை நீ ஆட்சிசெய். அக்கூட்டம் காடுகளிலும், கர்மேல் மலைகளிலும் தனியாக வாழ்கின்றது. பாசானிலும் கீலேயாத்திலும் வாழ்கிற ஜனங்கள் முன்பு மேய்ந்தது போலவே மேய்வார்களாக.
அந்நாடுகள் அந்த அற்புதங்களைப் பார்க்கும். அவர்கள் அவமானம் அடைவார்கள். அவர்களின் “வல்லமை” என்னோடு ஒப்பிட இயலாது என்பதை அவர்கள் காண்பார்கள். அவர்கள் ஆச்சரியத்தோடு தமது கைகளை வாயில் வைத்துக்கொள்வார்கள். அவர்கள் கவனிக்க மறுத்து தங்கள் காதுகளை மூடிக்கொள்வார்கள்.
அவர்கள் பாம்புகளைப்போன்று மண்ணை நக்குவார்கள். அவர்கள் பயத்தால் நடுங்குவார்கள். அவர்கள் தரையின் துவாரங்களில் உள்ள ஊர்வனவற்றைப் போன்று வெளியேவந்து தேவனாகிய கர்த்தரை அடைவார்கள். தேவனே, அவர்கள் அஞ்சி உம்மை மதிப்பார்கள்.
உம்மைப்போன்று வேறு தேவன் இல்லை. ஜனங்களின் குற்றங்களை நீர் அகற்றிவிடுகிறீர். தேவன் தமது சுதந்தரத்தில் மீதியானவர்களை மன்னிக்கிறார். தேவன் என்றென்றும் கோபத்தோடு இரார். ஏனென்றால் அவர் கருணையோடு இருப்பதில் மகிழ்கிறார்.
தேவனே, யாக்கோபுக்கு உண்மையாய் இருப்பீர். ஆபிரகாமிடம் உமது உண்மையையும், அன்பையும் காட்டுவீர். நீண்ட காலத்துக்கு முன்னால் நீர் எங்கள் முற்பிதாக்களுக்கு வாக்களித்தபடி செய்யும்.