Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Judges Chapters

Judges 8 Verses

Bible Versions

Books

Judges Chapters

Judges 8 Verses

1 எப்பிராயீம் மனிதர்கள் கிதியோனிடம் கோபப்பட்டனர். எப்பிராயீம் மனிதர்கள் கிதியோனைச் சந்தித்தபோது, அவர்கள், "ஏன் எங்களை இப்படி நடத்தினீர்கள்? மீதியானியரை எதிர்த்து நீங்கள் போராடச் சென்றபோது ஏன் எங்களை அழைக்கவில்லை?" என்று கேட்டார்கள்.
2 ஆனால் கிதியோன் எப்பிராயீம் ஆட்களைப் பார்த்து, நீங்கள் சாதித்த அளவுக்கு நான் எதையும் செய்யவில்லை. எனது குடும்பத்தாராகிய அபியேஸரின் குடும்பத்தைக் காட்டிலும் எப்பிராயீம் ஜனங்களாகிய நீங்கள் சிறப்பாக அறுவடை செய்கிறீர்கள். அறுவடைக் காலத்தில் எங்கள் குடும்பத்தினர் சேகரிப்பதைக் காட்டிலும் நீங்கள் உங்கள் வயல்களில் அதிகமான திராட்சைக் கனிகளைவிட்டு வைக்கிறீர்கள். அது உண்மை அல்லவா?
3 அதுபோலவே, உங்களுக்கு இப்போதும் சிறந்த அறுவடை வாய்த்துள்ளது. தேவன் உங்களை மீதியானியரின் தலைவர்களாகிய ஓரேபையும் சேபையும் சிறைப்பிடிக்கச் செய்தார். நீங்கள் செய்வதோடு என் வெற்றியை நான் எவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்க முடியும்?" என்றான். எப்பிராயீமின் ஆட்கள் கிதியோனின் பதிலைக் கேட்டபோது, அவர்கள் கோபம் அடங்கியது.
4 கிதியோனும் அவனது 300 ஆட்களும் யோர்தான் நதியருகே வந்து மறுகரைக்குக் கடந்து சென்றனர். அவர்கள் களைப்புற்றுப் பசியோடு காணப்பட்டனர்.
5 கிதியோன் சுக்கோத் நகரத்தின் மனிதர்களைப் பார்த்து, "எனது வீரர்கள் உண்பதற்கு ஏதாவது கொடுங்கள். அவர்கள் களைப்புற்றிருக்கிறார்கள். நாங்கள் மீதியானியரின் அரசர்களாகிய சேபாவையும் சல்முனாவையும் துரத்திக் கொண்டிருக்கிறோம்" என்றான்.
6 ஆனால் சுக்கோத் நகரத்தின் தலைவர்கள் கிதியோனைப் பார்த்து, "ஏன் நாங்கள் உமது வீரர்களுக்கு சாப்பிட உணவு கொடுக்க வேண்டும்? நீங்கள் இன்னும் சேபாவையும் சல்முனாவையும் பிடிக்கவில்லை" என்றார்கள்.
7 அப்போது கிதியோன், "நீங்கள் எங்களுக்கு உணவு தரமாட்டீர்கள். சேபாவையும் சல்முனாவையும் பிடிப்பதற்கு கர்த்தர் எனக்கு உதவுவார். அதன் பின்னர் நான் மீண்டும் இங்கு வருவேன். அப்போது பாலை வனத்திலுள்ள முட்களாலும் நெருஞ்சிகளாலும் அடித்து உங்கள் தோலைக் கிழித்துவிடுவேன்" என்றான்.
8 சுக்கோத் நகரை விட்டு வெளியேறிய கிதியோன் பெனூவேல் நகரத்திற்குச் சென்றான். கிதியோன் பெனூவேலின் ஆட்களிடமும் உணவு கேட்டான். சுக்கோத்தின் மனிதர்களைப் போலவே பெனூவேலின் ஆட்களும் கிதியோனுக்குப் பதில் கூறினார்கள்.
9 எனவே கிதியோன் பெனூவேலின் மனிதர்களிடம், "நான் வெற்றி பெற்றபின் இங்குத் திரும்பி வந்து கோபுரத்தைத் தரைமட்டம் ஆக்குவேன்" என்றான்.
10 சேபாவும், சல்முனாவும், அவர்களது சேனைகளும் கர்கோர் நகரத்தில் இருந்தார்கள். அவர்களது சேனையில் 15,000 வீரர்கள் இருந்தனர். இவர்கள் கிழக்கிலிருந்து வந்த ஜனங்களின் சேனையில் மீதியிருந்த படை வீரர்களாவர். அவர்கள் சேனையின் 1,20,000 வலிமைமிக்க படைவீரர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டனர்.
11 கிதியோனும் அவனது மனிதர்களும் கூடாரங்களில் வாழ்வோரின் பாதை வழியாகச் சென்றனர். நோபாகு, யொகிபெயா ஆகிய நகரங்களின் கிழக்கில் அப்பாதை இருந்தது. கிதியோன் கர்கோர் நகரம் வரைக்கும் வந்து, பகைவரைத் தாக்கினான். எதிரிகளின் சேனை அந்தத் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.
12 மிதியானியரின் அரசர்களாகிய சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனர்கள். ஆனால் கிதியோன் அவர்களைத் துரத்திப் பிடித்தான். கிதியோனும் அவனது ஆட்களும் பகைவரின் படையைத் தோற்கடித்தனர்.
13 பின், யோவாஸின் மகனான கிதியோன் போரிலிருந்து திரும்பினான். ஏரேஸ் கணவாய் வழியாகக் கிதியோனும் அவனது ஆட்களும் திரும்பினார்கள்.
14 கிதியோன் சுக்கோத் நகரத்து இளைஞன் ஒருவனைப் பிடித்தான். கிதியோன் அந்த இளைஞனைச் சில கேள்விகள் கேட்டான். அந்த இளைஞன் சுக்கோத் நகரத்துத் தலைவர்கள் மற்றும் மூப்பர்களது பெயர்களை எழுதினான். அவன் 77 மனிதர்களின் பெயர்களைத் தந்தான்.
15 பின் கிதியோன் சுக்கோத் நகரத்திற்கு வந்தான். அவன் அந்நகரத்து மனிதர்களைப் பார்த்து, "சேபாவையும், சல்முனாவையும் இதோ பிடித்திருக்கிறோம். நீங்கள் எங்களைப் பார்த்துக் கிண்டலாக, ‘ஏன் உங்கள் களைத்த வீரர்களுக்கு உணவளிக்க வேண்டும்?’ நீங்கள் இன்னும் சேபாவையும் சல்முனாவையும் பிடிக்கவில்லை’ என்றீர்கள்" என்றான்.
16 கிதியோன் சுக்கோத் நகரத்தின் தலைவர்களை அழைத்து வந்து, பாலைவனத்தின் முட்களாலும் நெருஞ்சில்களாலும் அவர்களை அடித்தான்.
17 பெனூவேல் நகரத்தின் கோபுரத்தையும் கிதியோன் தரைமட்டம் ஆக்கி, அந்நகரின் மனிதர்களைக் கொன்றான்.
18 பின் கிதியோன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி, "தாபோர் மலையில் நீங்கள் சில மனிதர்களைக் கொன்றீர்கள், அவர்கள் யாரைப் போன்றிருந்தார்கள்?" என்று கேட்டான். சேபாவும் சல்முனாவும், "அவர்கள் உங்களைப் போன்றிருந்தார்கள். ஒவ்வொருவனும் ஒரு இராஜ குமாரனைப் போல் காணப்பட்டான்" என்று பதில் கூறினார்கள்.
19 கிதியோன், "அவர்கள் என் சகோதரர்கள்! என் தாயின் ஜனங்கள்! கர்த்தர் ஜீவித்திருக்கிறபடியால், நீங்கள் அவர்களைக் கொல்லாமல் விட்டிருந்தால், நானும் இப்போது உங்களைக் கொல்லாமல் விட்டிருப்பேன்" என்றான்.
20 பின்பு கிதியோன் யெத்தேரை ஏறிட்டுப் பார்த்தான். யெத்தேர் கிதியோனின் மூத்த மகன். கிதியோன் அவனை நோக்கி, "இந்த அரசர்களைக் கொன்றுவிடு" என்றான். ஆனால் யெத்தேர் பயம்Ԕநிறைந்த ஒரு பையனாக இருந்தான். எனவே அவன் தன் வாளை உருவவில்லை.
21 அப்போது சேபாவும் சல்முனாவும் கிதியோனை நோக்கி, "நீர் எழுந்து எங்களைக் கொன்றுபோடும். இதை நிறைவேற்றும் வலிமை உம்மிடமே உண்டு" என்றனர். எனவே கிதியோன் எழுந்து சேபாவையும் சல்முனாவையும் கொன்றான். பின்பு அவர்களது ஒட்டகங்களின் கழுத்துக்களிலிருந்தச் சந்திரனைப் போன்ற அலங்காரங்களை எடுத்துக்கொண்டான்.
22 இஸ்ரவேலர் கிதியோனை நோக்கி, "நீர் எங்களை மீதியானியரிடமிருந்து காப்பாற்றினீர். எனவே எங்களை நீரே ஆட்சி செய்யும். நீரும், உமது மகனும், உமது பேரனும் எங்களை ஆளவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்" என்றனர்.
23 ஆனால் கிதியோன் இஸ்ரவேலரை நோக்கி, "கர்த்தர் தாமே உங்கள் அரசராக இருப்பார். நான் உங்களை ஆளமாட்டேன், எனது மகனும் உங்களை ஆளமாட்டான்" என்றான்.
24 இஸ்ரவேலர் வென்ற ஜனங்களில் இஸ் மவேலரும் இருந்தனர். இஸ்மவேலரில் ஆண்கள் பொன்னாலாகிய காதணிகளை அணிந்திருந்தனர். எனவே கிதியோன் இஸ்ரவேலரை நோக்கி, "நான் கேட்கும் இந்த காரியத்தை நீங்கள் எனக்குச் செய்ய வேண்டும். போரில் நீங்கள் எடுத்துக்கொண்ட பொருள்களிலிருந்து ஒவ்வொருவரும் ஒரு பொன் காதணியை எனக்குத் தரவேண்டும்! என்று விரும்புகிறேன்" என்றான்.
25 அதற்கு இஸ்ரவேலர் கிதியோனை நோக்கி, "நீர் கேட்பதை நாங்கள் மகிழ்ச்சியோடு தருவோம்" என்றனர். அவர்கள் ஓர் மேலாடையைக் கீழே விரித்தனர். ஒவ்வொருவனும் அதன் மீது ஒரு காதணியைப் போட்டான்.
26 அக்காதணிகளைச் சேர்த்து எடைபோட்டபோது 43 பவுண்டு எடையுள்ளதாய் இருந்தது. இஸ்ரவேலர் கிதியோனுக்குக் கொடுத்த மற்றப் பரிசுகள் இங்கு சேர்க்கப்படவில்லை. பிறையைப் போன்றும், மழைத் துளிகளைப் போன்றும் வடிவமைந்த அணிகலன்களையும் அவர்கள் அவனுக்குக் கொடுத்தனர். அவனுக்கு ஊதா நிற அங்கியையும் கொடுத்தனர். மீதியானியரின் அரசர்கள் அவற்றை அணிந்திருந்தனர். மீதியானிய அரசர்களின் ஒட்டகங்களிலுள்ள சங்கிலிகளையும் அவர்கள் அவனுக்குக் கொடுத்தனர்.
27 கிதியோன் ஒரு ஏபோத்தைச் செய்ய, இப்பொன்னைப் பயன்படுத்தினான். ஒப்ரா என்னும் அவனது சொந்த ஊரிலேயே ஏபோத்தை வைத்தான். இஸ்ரவேலர் எல்லோரும் ஏபோத்தை வழிப்பட்டனர். இவ்விதமாக இஸ்ரவேல் ஜனங்கள் தேவனிடம் அவநம்பிக்கைகொண்டு ஏபோத்தை வழிபட்டனர். கிதியோனும் அவனது குடும்பத்தினரும் பாவம் செய்யும்படியான கண்ணியாக இந்த ஏபோத் அமைந்தது.
28 இஸ்ரவேலரின் ஆளுகையின் கீழ் மீதியானியர் வந்தனர். மீதியானியர் இஸ்ரவேலருக்கு எந்தப் பிரச்சனையும் மேற்கொண்டு தரவில்லை. கிதியோன் உயிரோடு இருந்தவரைக்கும் தேசம் 40 ஆண்டுகள் அமைதியாக இருந்தது.
29 யோவாஸின் மகனாகிய யெருபாகால் (கிதியோன்) தன் வீட்டிற்குச் சென்றான்.
30 கிதியோனுக்கு 70 மகன்கள் இருந்தனர். அவனுக்குப் பல மனைவியர் இருந்ததால் அத்தனை மகன்கள் இருந்தனர்.
31 கிதியோனின் வேலைக்காரி சீகேமில் வாழ்ந்து வந்தாள். கிதியோனுக்கு அவள் மூலமாக பிறந்த மகன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் அபிமெலேக்கு.
32 யோவாஸின் மகனாகிய கிதியோன் மிக முதிர்ந்த வயதில் மரித்தான். யோவாஸின் கல்லறையில் கிதியோன் அடக்கம்பண்ணப்பட்டான். அபியேஸர் குடும்பம் வாழும் ஓப்ரா நகரில் அந்தக் கல்லறை இருக்கிறது.
33 கிதியோன் மரித்ததும், இஸ்ரவேலர் தேவனிடம் நம்பிக்கை வைக்காமல் பாகாலைப் பின்பற்றினார்கள். அவர்கள் பாகால் பேரீத்தைத் தேவனாக்கினார்கள்.
34 சுற்றி வாழ்ந்த பகைவர்களிடம் இருந்தெல்லாம் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றியும் கூட, இஸ்ரவேலர்கள் தமது தேவனாகிய கர்த்தரை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
35 எவ்வளவோ நன்மைகளைச் செய்திருந்தும்கூட யெருபாகாலின் (கிதியோன்) குடும்பத்தினருக்கு இஸ்ரவேலர் விசுவாசமுடையவர்களாய் இருக்கவில்லை.

Judges 8:25 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×