Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Judges Chapters

Judges 2 Verses

Bible Versions

Books

Judges Chapters

Judges 2 Verses

1 கில்கால் நகரத்திலிருந்து கர்த்தருடைய தூதன் போகீம் நகரத்திற்குச் சென்றான். தூதன் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியை இஸ்ரவேலருக்குக் கூறினான். இதுவே அந்த செய்தி: "நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். உங்கள் முற் பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த தேசத்திற்கு உங்களை வழிநடத்தினேன். உங்களோடு செய்த உடன்படிக்கையை ஒருபோதும் மீறமாட்டேன் என்று உங்களுக்குக் கூறினேன்.
2 ஆனால் அதற்குப் பதிலாக, நீங்கள் அந்த நிலத்தில் வாழும் ஜனங்களோடு எந்த ஒப்பந்தமும் செய்யக் கூடாது. அவர்களின் பலிபீடங்களை நீங்கள் அழிக்க வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்லியிருந்தேன். நீங்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லை!
3 "இப்போது நான் உங்களுக்கு இதைக் கூறுகிறேன், ‘இவ்விடத்தை விட்டுப் போகும்படியாக அங்குள்ள ஜனங்களை இனிமேலும் நான் வற்புறுத்தமாட்டேன். இந்த ஜனங்கள் எப்போதும் உங்களுக்குப் பிரச்சனையாய் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு கண்ணியைப் போன்றிருப்பார்கள். உங்களைப் பிடிப்பதற்கு விரிக்கப்படும் வலையைப்போன்று அவர்களின் பொய்த் தெய்வங்கள் அமைவார்கள்".
4 கர்த்தரிடமிருந்து இந்தச் செய்தியைத் தூதன் இஸ்ரவேலருக்குக் கூறியபின், ஜனங்கள் உரத்தக்குரலில் அழுதனர்.
5 அவர்கள் அங்கே அழுதபடியால், அதனைப் போகீம் என்று அழைத்தார்கள். போகீமில் இஸ்ரவேலர் கர்த்தருக்குப் பலிகளைச் செலுத்தினார்கள்.
6 பின் யோசுவா ஜனங்களை வீட்டிற்குப் போகச் சொன்னான். எனவே ஒவ்வொரு கோத்திரத்தினரும் தேசத்தில் அவரவருக்குரிய பகுதியை வாழ்வதற்காக எடுத்துக்கொள்ளச் சென்றனர்.
7 யோசுவா உயிரோடிருக்கும்வரை இஸ்ரவேலர் கர்த்தரை சேவித்தனர். யோசுவா மரித்தபின்னரும் மூத்த தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் கர்த்தரைத் தொடர்ந்து சேவித்தனர். இஸ்ரவேல் ஜனங்களுக்காகக் கர்த்தர் செய்த எல்லா மகத்தான செயல்களையும் இந்த மூத்த மனிதர்கள் பார்த்திருந்தார்கள்.
8 நூனின் மகனும், கர்த்தருடைய தாசனுமாகிய யோசுவா 110 வயதானபோது மரணமடைந்தான்.
9 இஸ்ரவேலர் யேசுவாவை அவனுக்குக் கொடுத்திருந்த நிலத்திலேயே அடக்கம் செய்தனர். அது காயாஸ் மலைக்கு வடக்கே, எப்பிராயீம் மலை நாட்டில், திம்னாத் ஏரேஸ் என்ற இடத்தில் இருந்தது.
10 அந்தத் தலைமுறையினர் மரித்தபின், அடுத்த தலைமுறையினர் வளர்ந்து வந்தனர். புதிய தலைமுறையினர் கர்த்தரைக் குறித்தும் அவர் இஸ்ரவேலருக்குச் செய்தவற்றைக் குறித்தும் அறிந்திருக்கவில்லை.
11 எனவே இஸ்ரவேலர் தீயவற்றைச் செய்து பொய் தேவனான பாகாலை சேவிக்கத் தொடங்கினார்கள். ஜனங்கள் இந்த தீயகாரியத்தைச் செய்வதைக் கர்த்தர் கண்டார்.
12 கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வந்திருந்தார். இந்த ஜனங்களின் முற்பிதாக்கள் கர்த்தரை ஆராதித்தனர். ஆனால் இஸ்ரவேலரோ கர்த்தரைப் பின்பற்றுவதை விட்டு விலகி, தங்களைச் சுற்றிலும் வாழ்ந்த ஜனங்களின் பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். அது கர்த்தரை கோபத்திற்குள்ளாக்கிற்று.
13 இஸ்ரவேலர் கர்த்தரை ஆராதிப்பதை விட்டு விட்டுப் பாகாலையும் அஸ்தரோத்தையும் தொழுது கொள்ளத் தொடங்கினார்கள்,
14 கர்த்தர் இஸ்ரவேலரிடம் கோபங் கொண்டார். பகைவர்கள் இஸ்ரவேலரை எதிர்த்து அவர்களுடைய உடைமைகளைக் கைப்பற்றிக்கொள்ள கர்த்தர் அனுமதித்தார். பகைவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இஸ்ரவேலரால் முடியவில்லை.
15 இஸ்ரவேலர் போருக்குச் சென்ற போதெல்லாம், தோல்வியே கண்டனர். கர்த்தர் அவர்களோடு இல்லாதபடியால் அவர்கள் தோற்றனர். தங்களைச் சுற்றிலும் வாழ்கின்ற ஜனங்களின் பொய்த் தெய்வங்களைத் தொழுதால் அவர்கள் தோற்று விடுவார்கள் என்று கர்த்தர் அவர்களை ஏற்கெனவே எச்சரித்திருந்தார். இஸ்ரவேலர் மிகவும் துன்புற்றார்கள்.
16 பிறகு கர்த்தர் நியாயாதிபதிகள் என்று அழைக்கப்பட்ட தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார். இஸ்ரவேலரின் உடைமைகளைக் கைப்பற்றிக் கொண்ட பகைவர்களிடமிருந்து அவர்களை இந்தத் தலைவர்கள் மீட்டார்கள்.
17 ஆனால் நியாயாதிபதிகளின் வார்த்தைக்கு இஸ்ரவேலர்கள் கட்டுப்படவில்லை. அவர்கள் தேவனுக்கு உண்மையாக இருக்கவில்லை. அவர்கள் பிற தெய்வங்களைப் பின்பற்றினார்கள். கடந்த காலத்தில் இஸ்ரவேலரின் முற்பிதாக்கள் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தனர். இப்போதோ இஸ்ரவேலர் மனம் மாறியவர்களாய், கர்த்தருக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தினார்கள்.
18 பலமுறை இஸ்ரவேலருக்குத் தம் பகைவர்களால் தீங்கு நேர்ந்தது. எனவே இஸ்ரவேலர் உதவி வேண்டினார்கள். ஒவ்வொரு முறையும், கர்த்தர் அவர்களுக்காக மனமிரங்கினார். ஒவ்வொரு முறையும், பகைவரிடமிருந்து இஸ்ரவேலரைக் காப்பாற்ற ஒரு நியாயதிபதியை அனுப்பினார். கர்த்தர் எப்பொழுதும் அந்த நியாயதிபதிகளோடு இருந்தார். எனவே ஒவ்வொரு முறையும் இஸ்ரவேலர் பகைவர்களிடமிருந்த காப்பாற்றப்பட்டனர்.
19 ஆனால் ஒவ்வொரு நியாயாதிபதியும் மரித்தபோது இஸ்ரவேலர் மீண்டும் பாவம் செய்து, பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். இஸ்ரவேலர் பிடிவாதம் மிக்கவர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் Ԕதீய வழிகளை மாற்றிக் கொள்ளமறுத்தனர்.
20 எனவே கர்த்தர் இஸ்ரவேலர் ஜனங்களிடம் மிகவும் கோபமடைந்தார், அவர், "இத் தேசத்தின் முற்பிதாக்களுடன் நான் செய்து கொண்ட உடன்படிக்கையை இவர்கள் மீறினார்கள். இவர்கள் நான் கூறியவற்றைக் கேட்டு நடக்கவில்லை.
21 எனவே இனிமேல் நான் பிறரைத் தோற்கடித்து இஸ்ரவேலருக்கு வழியைச் சரிப்படுத்திக் கொடுக்கமாட்டேன். யோசுவா மரித்த போது அந்நிய ஜனங்கள் இந்த தேசத்திலேயே இருந்தனர். மேலும் அவர்களை இந்த தேசத்திலேயே இருக்கவிடுவேன்.
22 இஸ்ரவேலரைப் பரிசோதிப்பதற்கு அந்த ஜனங்களைப் பயன்படுத்துவேன். தங்கள் முற்பிதாக்கள் செய்ததைப்போல இஸ்ரவேலர் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்களா என்பதை நான் பார்ப்பேன்" என்றார்.
23 கர்த்தர் அந்த ஜனங்கள் அந்தத் தேசத்தில் தங்கி வாழ அனுமதித்தார். தேசத்தை விட்டு அவர்கள் சீக்கிரமாய் வெளியேற கர்த்தர் அவர்களை வற்புறுத்தவில்லை. யோசுவாவின் இராணுவம் அவர்களைத் தோற்கடிப்பதற்குக் கர்த்தர் உதவவில்லை.

Judges 2:2 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×