மீகா தன் தாயை நோக்கி, “உன்னிடமிருந்து 28 பவுண்டு வெள்ளியை யாரோ திருடிச் சென்றது உனக்கு நினைவிருக்கிறதா? நீ அதைக் குறித்து சாபமிட்டதை நான் கேட்டேன். என்னிடம் அந்த வெள்ளி உள்ளது, நான்தான் அதை எடுத்தேன்” என்றான். அவன் தாய், “எனது மகனே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்றாள்.
மீகா 28 பவுண்டு வெள்ளியையும் தன் தாயிடம் திருப்பிக் கொடுத்தான். அப்போது அவள், “நான் இந்த வெள்ளியைக் கர்த்தருக்கு விசேஷ அன்பளிப்பாகச் செலுத்துவேன். என் மகன் ஒரு விக்கிரகத்தைச் செய்து அதை வெள்ளியால் பூசும்படியாக இதைக் கொடுப்பேன். மகனே, எனவே இப்போதே அந்த வெள்ளியை உனக்கு நான் கொடுக்கிறேன்” என்றாள்.
ஆனால் மீகா வெள்ளியைத் தாயிடமே கொடுத்துவிட்டான். அவள் அதில் 5 பவுண்டு வெள்ளியை எடுத்து அதைப் பொற்கொல்லனிடம் கொடுத்தாள். வெள்ளி முலாம் பூசிய விக்கிரகத்தைப் பொற்கொல்லன் அந்த வெள்ளியால் உருக்கினான். அந்த விக்கிரகம் மீகாவின் வீட்டில் இருந்தது.
விக்கிரகங்களைத் தொழுதுகொள்ளும் கோயில் ஒன்று மீகாவுக்கு இருந்தது. அவன் ஒரு ஏபோத்தையும் சில வீட்டு விக்கிரகங்களையும் செய்தான். மீகா தன் மகன்களில் ஒருவனைப் பூஜை செய்வதற்கு நியமித்தான்.
அந்த இளைஞன் யூதாவிலுள்ள பெத்லகேமிலிருந்து சென்றபின் வாழ்வதற்கு மற்றோர் இடம் தேடிக்கொண்டிருந்தான். அவன் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது, மீகாவின் வீட்டிற்கு வந்தான். எப்பிராயீமின் மலை நாட்டில் மீகாவின் வீடு இருந்தது.
மீகா அவனிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டான். இளைஞன் அதற்கு, “நான் யூதாவிலுள்ள பெத்லேகேமைச் சேர்ந்த ஒரு லேவியன். நான் வசிப்பதற்கு ஒரு இடம் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று பதில் கூறினான்.
அப்போது மீகா அவனிடம், “என்னோடு தங்கியிருந்து, எனது தந்தையாகவும், போதகனாகவும் இரு. ஒவ்வொரு ஆண்டும் உனக்கு 4 ஆழாக்கு வெள்ளியைத் தருவேன். மேலும் உனக்கு உடையும் உணவும் தருவேன்” என்றான். மீகா சொன்னபடியே லேவியன் செய்தான்.