English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Joshua Chapters

Joshua 4 Verses

1 எல்லா ஜனங்களும் யோர்தான் நதியைக் கடந்ததும் கர்த்தர் யோசுவாவை நோக்கி,
2 “பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்துக்கொள். ஒவ்வொரு கோத்திரத்தில் இருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடு.
3 ஆசாரியர்கள் நின்ற இடத்தில் நதியினுள்ளே தேடி அங்கிருந்து பன்னிரண்டு கற்களை எடுத்து வருமாறு கூறு. இன்றிரவு தங்குமிடத்தில் அந்தப் பன்னிரண்டு கற்களையும் வை” என்றார்.
4 எனவே யோசுவா ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். பின் அவன் பன்னிரண்டு பேரையும் ஒன்றுகூட்டி,
5 அம்மனிதரை நோக்கி, “நதியில் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய பரிசுத்த பெட்டியிருக்கும் இடத்திற்குச் செல்லுங்கள். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு கல் இருக்க வேண்டும். அக்கல்லை உங்கள் தோள்களில் சுமந்து வாருங்கள்.
6 இக்கற்கள் உங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும். எதிர்காலத்தில், உங்கள் பிள்ளைகள் ‘இந்தக் கற்கள் எதற்காக?’ என்று உங்களிடம் கேட்கும்போது,
7 யோர்தான் நதியின் தண்ணீரைக் கர்த்தர் ஓடாமல் நிறுத்தியதை அவர்களுக்குக் கூறுவீர்கள். கர்த்தருடைய பரிசுத்த உடன்படிக்கைப் பெட்டி நதியைக் கடந்தபோது, தண்ணீர் அசையாமல் நின்றது. இந்நிகழ்ச்சியை என்றென்றைக்கும் இஸ்ரவேல் ஜனங்கள் நினைவுகூருவதற்கு இக்கற்கள் உதவும்” என்றார்.
8 இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவாவுக்குக் கீழ்ப்படிந்தனர். யோர்தான் நதியின் மத்தியிலிருந்து அவர்கள் பன்னிரண்டு கற்களை எடுத்து வந்தனர். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தினருக்கும் ஒவ்வொரு கல் இருந்தது. கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் இதைச் செய்தனர். அம்மனிதர்கள் கற்களைச் சுமந்து வந்து, அவர்கள் முகாமிட்டிருந்த இடத்தில் அக்கற்களை நாட்டினர்.
9 (யோசுவா நதியின் மத்தியில் பன்னிரண்டு கற்களை வைத்தான். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை ஆசாரியர் சுமந்து வந்து நின்ற இடத்தில் அவன் அவற்றை வைத்தான். அக்கற்கள் இன்றைக்கும் அவ்விடத்திலேயே உள்ளன.)
10 ஜனங்கள் செய்ய வேண்டியவற்றை அவர்களுக்குக் கூறும்படி கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டார். யோசுவா செய்ய வேண்டியவையாக மோசே யோசுவாவுக்குக் கூறிய காரியங்களே அவையாகும். பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து வந்த ஆசாரியர்கள் இக்காரியங்கள் எல்லாவற்றையும் செய்து முடிக்கும்வரைக்கும் நதியின் மத்தியிலேயே நின்றுகொண்டிருந்தனர். ஜனங்கள் நதியை வேகமாகத் தாண்டினார்கள்.
11 ஜனங்கள் நதியைக் கடந்த பின்னர், ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டியை அவர்களுக்கு முன்பாகச் சுமந்து சென்றனர்.
12 ரூபன், காத் கோத்திரத்திலுள்ள ஆண்களும், மனாசே கோத்திரத்தில் பாதி ஆண்களும் மோசே சொல்லியிருந்தபடியே கீழ்ப்படிந்தனர். பிறருக்கு முன்பாக அவர்கள் நதியைக் கடந்தனர். அவர்கள் போருக்கு ஆயத்தமாயினர். தேவன் இஸ்ரவேலருக்கு வாக்களித்த தேசத்தைப் பெறுவதற்கு மீதி ஜனங்களுக்கு உதவுவதற்காகச் சென்றனர்.
13 ஏறத்தாழ 40,000 பேர், போருக்குத் தயாராகி, எரிகோவின் சமவெளிக்கு நேராக கர்த்தருக்கு முன்பாக அணியணியாய் சென்றார்கள்.
14 இஸ்ரவேலின் எல்லா ஜனங்களுக்கும் உயர்ந்தவனாக யோசுவாவை கர்த்தர் அந்த நாளில் மேன்மைப்படுத்தினார். அப்போதிலிருந்து ஜனங்கள் யோசுவாவை மதித்தனர். மோசேயை அவர்கள் மதித்தபடியே, யோசுவாவையும் அவன் வாழ்க்கை முழுவதும் ஜனங்கள் மதித்தனர்.
15 பெட்டியைச் சுமந்த ஆசாரியர்கள் நதியில் நின்றுகொண்டிருக்கும்போதே, கர்த்தர் யோசுவாவை நோக்கி,
16 “ஆசாரியர்களை நதியினின்று வெளியே வரும்படிக் கட்டளையிடு” என்றார்.
17 எனவே யோசுவா ஆசாரியர்களிடம், “யோர்தான் நதியிலிருந்து வெளியேறுங்கள்” என்று கட்டளையிட்டான்.
18 ஆசாரியர்கள் யோசுவாவுக்குக் கீழ்ப்படிந்து பெட்டியைச் சுமந்தபடி நதியிலிருந்து கரைக்கு வந்தனர். ஆசாரியர்களின் கால்கள் தரையில் பட்டதும், நதியின் தண்ணீர் ஓட ஆரம்பித்தது. ஜனங்கள் கடக்கும் முன்னர் இருந்ததுபோலவே தண்ணீர் கரைபுரண்டோடத் தொடங்கிற்று.
19 முதலாம் மாதத்தின் பத்தாவது நாள், ஜனங்கள் யோர்தான் நதியைத் தாண்டினார்கள். எரிகோவின் கிழக்கிலுள்ள கில்காலில், ஜனங்கள் முகாமிட்டனர்.
20 யோர்தான் நதியில் எடுத்த பன்னிரண்டு கற்களையும் ஜனங்கள் சுமந்து வந்தனர். கில்காலில் யோசுவா அக்கற்களை நாட்டினான்.
21 யோசுவா ஜனங்களை நோக்கி, “வருங்காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை நோக்கி, ‘இக்கற்கள் எதைக் குறிக்கின்றன?’ எனக் கேட்பார்கள்.
22 நீங்கள் பிள்ளைகளுக்கு, ‘உலர்ந்த நிலத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்ததை இக்கற்கள் நினைவூட்ட உதவுகின்றன.’
23 உங்கள் தேவனாகிய கர்த்தர் செங்கடலைப் போலவே யோர்தான் நதியின் தண்ணீரை ஓடாதவாறு நிறுத்தினார். ஜனங்கள் உலர்ந்த தரையில் கடந்து செல்லும் வரைக்கும் செங்கடலின் தண்ணீரைத் தடுத்து நிறுத்தியதை நினைவுகூருங்கள்.
24 கர்த்தர் மிகுந்த வல்லமை வாய்ந்தவர் என்பதை இந்நாட்டின் ஜனங்கள் எல்லோரும் அறிந்துகொள்வதற்காகக் கர்த்தர் இதைச் செய்தார். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அவர்கள் எப்போதும் அஞ்சுவார்கள் என்று கூறுங்கள்” என்றான்.
×

Alert

×