English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Joshua Chapters

Joshua 3 Verses

1 மறுநாள் காலையில் யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்களும் எழுந்து, அகாசியாவை (சித்தீமை) விட்டு புறப்பட்டு யோர்தான் நதிக்கரைக்கு வந்தார்கள். அவர்கள் நதியைக் கடக்கும் முன்னர், அங்கே நதிக்கரையில் முகாமிட்டார்கள்.
2 மூன்று நாட்களுக்குப் பிறகு, தலைவர்கள் முகாமிற்குள் சுற்றிப் பார்த்தார்கள்.
3 அவர்கள் ஜனங்களிடம், “உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆசாரியரும், லேவியரும் சுமந்து செல்வதைக் காண்பீர்கள். அப்போது, நீங்கள் அவர்களைப் பின்தொடர வேண்டும்.
4 ஆனால் மிகவும் நெருங்கிச் செல்லாதீர்கள். 2,000 முழ தூரத்தில் அவர்களைப் பின் தொடர்ந்து செல்லுங்கள். நீங்கள் இதற்கு முன் ஒருபோதும் இவ்வழியாக வந்ததில்லை. ஆனால் அவர்களைப் பின் தொடர்ந்தால், எங்கு செல்வதென்பதை அறிவீர்கள்” என்று ஆணைகள் கொடுத்தார்கள்.
5 அப்போது யோசுவா ஜனங்களிடம், “நீங்கள் உங்களைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள். நாளை கர்த்தர் அதிசயமான காரியங்களைச் செய்வார்” என்றான்.
6 பின் யோசுவா ஆசாரியர்களை நோக்கி, “உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு ஜனங்களுக்கு முன்பாக நதியைக் கடந்து செல்லுங்கள்” என்றான். அவ்வாறே ஆசாரியர்களும் பெட்டியைச் சுமந்தவாறு ஜனங்களுக்கு முன்பாகச் சென்றார்கள்.
7 அப்போது கர்த்தர் யோசுவாவிடம், “இன்று இஸ்ரவேலின் எல்லா ஜனங்களும் பார்க்கும்படியாக உன்னை உயர்ந்த மனிதனாக்கினேன். அப்போது, நான் மோசேயோடு இருந்ததுபோலவே உன்னோடும் இருக்கிறேன் என்பதை ஜனங்கள் அறிவார்கள்.
8 உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து செல்கிற ஆசாரியர்களிடம், ‘யோர்தான் நதியின் கரைவரைக்கும் நடந்து தண்ணீரினுள் இறங்கும் முன்பாக அங்கு சற்று நில்லுங்கள் என்று சொல்’ ” என்றார்.
9 அப்போது யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, “உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளை வந்து கேளுங்கள்.
10 உயிருள்ள தேவன் உங்களோடிருக்கிறார் என்பதற்கும், அவர் பகைவரைத் தோற்கடிப்பார் என்பதற்கும் சான்றாக கானானியரையும், ஏத்தியரையும், ஏவியரையும், பெரிசியரையும், கிர்காசியரையும், எமோரியரையும், எபூசியரையும் அவர் தோற்கடித்து இத்தேசத்தை விட்டுப் போகுமாறு செய்வார்.
11 இதுவே அதற்கு சான்று. முழு உலகத்துக்கும் ஆண்டவராயிருப்பவரின் உடன்படிக்கைப் பெட்டி, நீங்கள் யோர்தான் நதியைத் தாண்டும்போது, உங்களுக்கு முன்னே செல்லும்.
12 இப்போது, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் இருந்தும், குழுவுக்கு ஒருவர் வீதம் பன்னிரண்டு மனிதரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
13 கர்த்தருடைய பெட்டியை ஆசாரியர் சுமந்து செல்வார்கள். உலகத்தின் ஆண்டவர் கர்த்தரே. அவர்கள் அப்பெட்டியை உங்களுக்கு முன்பாக யோர்தான் நதியில் சுமந்து செல்வார்கள். அவர்கள் தண்ணீருக்குள் கால் வைத்ததும், யோர்தான் நதியில் தண்ணீர் ஓடாமல் நின்று, அணைபோல் தேங்கியிருக்கும்” என்றான்.
14 உடன்படிக்கைப் பெட்டியை ஆசாரியர் சுமந்து சென்றனர். முகாமிட்டிருந்த இடத்திலிருந்து ஜனங்கள் புறப்பட்டு, யோர்தான் நதியைக் கடக்க ஆரம்பித்தனர்.
15 (அறுவடைக் காலத்தில் யோர்தான் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். எனவே நதியில் தண்ணீர் பெருகியிருந்தது.) பெட்டியைச் சுமந்து வந்த ஆசாரியர்கள் நதிக்கரையை அடைந்தனர். அவர்கள் கரையோரத்தில் தண்ணீரில் கால் வைத்தனர்.
16 உடனே, தண்ணீர் ஓடாமல் நின்று ஒரு அணைபோல் தேங்கிக்கொண்டது. (யோர்தான் அருகிலுள்ள ஊராகிய) ஆதாம் வரைக்கும் நதியின் தண்ணீர் குவிந்து நின்றது. எரிகோ அருகே ஜனங்கள் நதியைக் கடந்தனர்.
17 அவ்விடத்தில் நிலம் வறண்டது, ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்தவாறே நதியின் நடுப்பகுதிவரைக்கும் சென்று அங்கே நின்றனர். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் யோர்தான் நதியை உலர்ந்த நிலத்தின் வழியாக கடக்கும் மட்டும் ஆசாரியர்கள் அங்கேயே நின்றனர்.
×

Alert

×