யோசுவா அவர்களை நோக்கி, “மோசே கர்த்தருடைய ஊழியன். மோசே செய்யும்படி கூறியவற்றிற்கு நீங்கள் கீழ்ப்படிந்தீர்கள். எனது எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடந்தீர்கள்.
இஸ்ரவேலருக்கு அமைதி வழங்குவதாக உங்கள் தேவனாகிய கர்த்தர் வாக்களித்தார். இப்போது, கர்த்தர் தமது வாக்குறுதியை நிறைவேற்றினார். இப்போது உங்கள் வீடுகளுக்கு திரும்பிப் போகலாம். யோர்தான் நதியின் கிழக்குப் புறத்திலுள்ள நிலத்தை கர்த்தருடைய ஊழியனாகிய மோசே உங்களுக்குக் கொடுத்தார். அந்நிலத்தை உங்கள் இருப்பிடமாகக் கொண்டு நீங்கள் போகலாம்.
ஆனால் மோசே கொடுத்த சட்டத்தைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென்பதை நினைவில் வையுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நேசித்து அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். அவரைப் பின்பற்றி முழு இதயத்துடனும் முழு ஆத்துமாவுடனும் சிறப்பாக அவருக்கு சேவை செய்வதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்” என்றான்.
பாசான் தேசத்தை, மோசே மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குக் கொடுத்திருந்தான். யோர்தான் நதியின் மேற்குப் பகுதியிலுள்ள தேசத்தை யோசுவா மனாசே கோத்திரத்தின் மற்ற பாதிக் குடும்பங்களுக்கு கொடுத்தான். யோசுவா அவர்களை ஆசீர்வதித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பினான்.
அவன், “நீங்கள் செல்வந்தர்கள் ஆனீர்கள். உங்களுக்கு மிருக ஜீவன்கள் பல உள்ளன. உங்களிடம் பொன்னும், வெள்ளியும், விலையுயர்ந்த நகைகளும் உள்ளன. உங்களிடம் அழகிய ஆடைகள் இருக்கின்றன. உங்கள் எதிரிகளிடமிருந்து பல பொருட்களைக் கொள்ளையடித்திருக்கிறீர்கள். உங்கள் இருப்பிடத்திற்குச் சென்று அவற்றை உங்கள் சகோதரரோடே பங்கிட்டுக் கொள்ளுங்கள்” என்றான்.
எனவே ரூபன், காத், மனாசே கோத்திரத்தினரும் பிற இஸ்ரவேலரைப் பிரிந்து சென்றனர். அவர்கள் கானானிலுள்ள சீலோவில் இருந்தனர். அவர்கள் அவ்விடத்தை விட்டு கீலேயாத்திற்குத் திரும்பிச் சென்றார்கள். மோசே அவர்களுக்குக் கொடுத்த அவர்கள் சொந்த இடத்திற்குப் போனார்கள். இந்நிலத்தை அவர்களுக்குக் கொடுக்கும்படியாக கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தார்.
ரூபன், காத், மனாசே கோத்திரத்தினரும் கீலேயாத் என்னும் இடத்திற்குச் சென்றார்கள். இந்த இடம் கானான் தேசத்தில் யோர்தான் நதிக்கு அருகே இருந்தது. அவ்விடத்தில் ஜனங்கள் ஓர் அழகிய பலிபீடத்தைக் கட்டினார்கள்.
இந்த மூன்று கோத்திரங்களும் கட்டிய பலிபீடத்தைக் குறித்து சீலோவிலுள்ள பிற இஸ்ரவேலர் கேள்விப்பட்டனர். கானானின் எல்லையில் கீலேயாத் என்னுமிடத்தில் அப்பலிபீடம் இருந்தது என்பதை அறிந்தனர். அப்பலிபீடம் இஸ்ரவேலரின் நாட்டில் யோர்தான் நதிக்கருகே இருந்தது.
அவர்கள் கோத்திரத்தின் தலைவர்கள் பத்து பேரை அவனோடே கூட அனுப்பினார்கள். சீலோவிலிருந்த இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்து ஒவ்வொன்றிற்கும் ஒரு மனிதன் வீதம் சென்றான்.
“இஸ்ரவேலரின் தேவனுக்கெதிராக இக்காரியத்தை ஏன் செய்தீர்கள்? கர்த்தருக்கு எதிராக ஏன் திரும்பினீர்கள்? உங்களுக்காக ஏன் ஒரு பலி பீடத்தைக் கட்டினீர்கள்? இது தேவனின் போதனைக்கு எதிரானது என்பதை நீங்கள் அறிவீர்கள்!
பேயோரில் என்ன நேர்ந்தது என்பதை நினைத்துப்பாருங்கள். அப்பாவத்தால் நாம் இன்றும் துன்புறுகிறோம். அப்பெரும் பாவத்தால் இஸ்ரவேலரில் பலர் நோயுறுமாறு தேவன் செய்தார். அந்நோயால் இன்றும் நாம் துன்புறுகிறோம்,
இப்போது நீங்களும் அதையே செய்கிறீர்கள்! கர்த்தருக்கு எதிராகத் திரும்புகிறீர்கள்! கர்த்தரை பின்பற்ற மறுப்பீர்களா? நீங்கள் செய்வதை நிறுத்தாவிட்டால், கர்த்தர் இஸ்ரவேல் ஜனம் முழுவதின் மேலும் கோபம்கொள்வார்.
“உங்கள் நிலம் ஆராதனைக்குச் சிறந்ததல்ல வென்றால், எங்கள் நிலத்திற்குள் வாருங்கள். கர்த்தருடைய கூடாரம் எங்கள் நிலத்தில் உள்ளது. எங்கள் நிலத்தில் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு இங்கு வாழலாம். ஆனால் கர்த்தருக்கு எதிராகத் திரும்பாதீர்கள். இன்னொரு பலிபீடம் கட்டாதீர்கள். ஆசரிப்புக் கூடாரத்தினருகே கர்த்தருடைய பலிபீடம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது.
“சேராவின் மகனாகிய ஆகான் என்ற மனிதனை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அழிக்கப் படவேண்டிய பொருட்களைப் பற்றிய கட்டளைக்குக் கீழ்ப்படிய அவன் மறுத்தான். அந்த ஒரு மனிதன் தேவனின் கட்டளையை மீறினான், ஆனால் இஸ்ரவேலர் எல்லோரும் தண்டிக்கப்பட்டனர். ஆகான் தன் பாவத்திற்காக மரித்தான். ஆனால் மற்றும் பலரும் மரிக்க நேரிட்டது” என்று எல்லா இஸ்ரவேலரும் உங்களிடம் கேட்கிறார்கள் என்றனர்.
“கர்த்தர் எங்கள் தேவன்! கர்த்தரே எங்கள் தேவன் என்று மீண்டும் சொல்கிறோம்! நாங்கள் இதைச் செய்த காரணத்தையும் தேவன் அறிவார். நீங்களும் அதை அறிய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் செய்ததை நீங்கள் நியாயந்தீர்க்கலாம். நாங்கள் தவறேனும் செய்ததாக நீங்கள் நம்பினால், நீங்கள் எங்களைக் கொல்லலாம்.
தகன பலி, தானிய காணிக்கை, சமாதான பலி ஆகியவற்றைக் கொடுப்பதற்காக நாங்கள் இந்தப் பலிபீடத்தைக் கட்டியதாக நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை! அதற்காக நாங்கள் இதைக் கட்டவில்லை. நாங்கள் ஏன் இந்தப் பலிபீடத்தைக் கட்டினோம்? உங்கள் தேசத்தின் ஜனங்கள் எதிர்காலத்தில் எங்களை இஸ்ரவேலின் ஒரே பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்களோ என்று எண்ணி பயந்தோம். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாங்கள் ஆராதிக்கக் கூடாது என்று உங்கள் ஜனங்கள் கூறுவார்கள் என நினைத்து பயந்தோம்.
யோர்தான் நதிக்கு மறு பக்கத்தில் தேவன் எங்களுக்கு நிலத்தைக் கொடுத்தார். யோர்தான் நதி நம்மைப் பிரிக்கிறது. உங்கள் பிள்ளைகள் வளர்ந்து தேசத்தை ஆளும்போது, நாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அவர்கள் எண்ணமாட்டார்கள். அவர்கள் எங்களை நோக்கி, ‘ரூபன், காத் ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அல்ல!’ என்று சொல்லக்கூடும். அப்போது எங்கள் பிள்ளைகள் கர்த்தரை ஆராதிக்க உங்கள் பிள்ளைகள் தடை செய்யக்கூடும்.
நீங்கள் ஆராதிக்கும் தேவனையே நாங்களும் ஆராதிக்கிறோம் என்பதை எங்கள் ஜனங்களுக்கு உணர்த்துவதே இப்பலிபீடத்தைக் கட்டியதன் உண்மையான காரணமாகும். கர்த்தரை நாம் ஆராதிக்கிறோம் என்பதற்குச் சான்றாக உங்களுக்கும் எங்களுக்கும், எதிர்காலத்தில் நம் பிள்ளைகளுக்கும், இப்பலிபீடம் அமையும். நமது பலிகள், தானிய காணிக்கைகள், சமாதான பலிகள் ஆகியவற்றைக் கர்த்தருக்கே கொடுப்போம். உங்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது நாங்களும் உங்களைப் போலவே இஸ்ரவேல் ஜனங்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம்.
வருங்காலத்தில், உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளைப் பார்த்து. அவர்கள் இஸ்ரவேலரல்ல என்று கூறினால், அப்போது எங்கள் பிள்ளைகள், ‘பாருங்கள்! எங்கள் பிதாக்கள் ஒரு பலிபீடத்தைக் கட்டியிருக்கிறார்கள். பரிசுத்த கூடாரத்தின் அருகேயுள்ள கர்த்தருடைய பலிபீடத்தைப் போலவே இப்பலிபீடமும் அமைந்துள்ளது. நாங்கள் இப்பலிபீடத்தைப் பலி செலுத்துவதற்குப் பயன்படுத்துவதில்லை. நாங்களும் இஸ்ரவேலரில் ஒரு பங்குடையவர்கள் என்பதற்கு இது சான்றாகும்!’ என்று சொல்லமுடியும்.
“உண்மையாகவே, கர்த்தருக்கு எதிராக இருப்பதற்கு எங்களுக்கு விருப்பமில்லை. அவரைப் பின்பற்றுவதை நிறுத்தும் விருப்பமும் இப்போது எங்களுக்குக் கிடையாது. பரிசுத்த கூடாரத்தின் முன்னே இருப்பது மட்டுமே உண்மையான பலிபீடம் என்பதை நாங்கள் அறிவோம். அப்பலிபீடம் நமது தேவனாகிய கர்த்தருக்கு உரியது” என்றார்கள்.
ரூபன், காத், மனாசே கோத்திரத்தினர் கூறியவற்றை ஆசாரியனாகிய பினெகாசும் அவனோடு வந்த தலைவர்களும் கேட்டார்கள். அந்த ஜனங்கள் உண்மையே கூறுகிறார்கள் என்று அவர்கள் திருப்தி அடைந்தார்கள்.
எனவே ஆசாரியனாகிய பினெகாஸ், “கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்பதை அறிகிறோம். அவருக்கு எதிராக நீங்கள் திரும்பவில்லை என்பதையும் நாங்கள் அறிகிறோம். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களைக் தண்டிக்கமாட்டார், என்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்கள்.
பிறகு பினெகாசும், தலைவர்களும் அங்கிருந்துԔ தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றனர். ரூபன், காத் ஜனங்களைக் கீலேயாத் தேசத்தில் விட்டு கானானுக்குப் போனார்கள் இஸ்ரவேல் ஜனங்களிடம் அவர்கள் திரும்பிப் போய் நடந்தவற்றைக் கூறினார்கள்.
இஸ்ரவேல் ஜனங்களும் திருப்தி கொண்டனர். அவர்கள் சந்தோஷமடைந்து தேவனுக்கு நன்றி தெரிவித்தனர். ரூபன், காத், மனாசே ஆகிய ஜனங்களுக்குக் கெதிராகப் போர் செய்ய வேண்டாமென முடிவெடுத்தனர். அந்த ஜனங்கள் வாழும் இடத்தை அழிக்க வேண்டாம் எனவும் முடிவு செய்தனர்.