பிறகு மனாசேயின் கோத்திரத்தினருக்கு நிலம் வழங்கப்பட்டது. மனாசே யோசேப்பின் முதல் மகன், கிலேயாத்தின் தந்தையாகிய மாகீர் மனாசேயின் முதல் மகன். மாகீர் சிறந்த வீரன், எனவே கீலேயாத், பாசான் ஆகிய பகுதிகள் அவனுக்குத் தரப்பட்டன.
மனாசே கோத்திரத்தின் பிற குடும்பங்களுக்கும் தேசம் கொடுக்கப்பட்டது. அவை அபியேசர், ஏலேக், அஸ்ரியேல்,செகேம், எப்பேர், செமீதா ஆகியோரின் குடும்பங்கள் ஆகும். இவர்கள் மனாசேயின் பிற மகன்கள். இவர்களின் குடும்பங்கள் தேசத்தில் பங்கைப் பெற்றன.
எப்பேரின் மகன் செலொப்பியாத். கிலேயாத்தின் மகன் எப்பேர். மாகீரின் மகன் கிலேயாத், மனாசேயின் மகன் மாகீர், செலோப்பியாத்திற்கு மகன்கள் இருக்கவில்லை, அவனுக்கு ஐந்து பெண்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் ஆகியவை ஆகும்.
ஆசாரியனாகிய எலெயாசாரிடமும் நூனின் மகனாகிய யோசுவாவிடமும், எல்லாத் தலைவர்களிடமும் அப்பெண்கள் சென்று “ஆண்களைப் போலவே எங்களுக்கும் நிலத்தைத் தரும்படியாக கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார்” என்றனர். எலெயாசார் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அப்பெண்களுக்கும் கொஞ்சம் நிலம் கொடுத்தான். எனவே ஆண்களைப் போன்றே இந்த மகள்களும் நிலத்தைப் பெற்றார்கள்.
தப்புவாவைச் சூழ்ந்த பகுதி மனாசேக்கு உரியதாயிற்று. ஆனால் அவ்வூர் அவனுக்கு உரியதாகவில்லை. மனசேயின் தேசத்து எல்லையில் தப்புவா என்ற ஊர் இருந்தது. அது எப்பிராயீம் ஜனங்களுக்கு உரியதாக இருந்தது.
மனாசேயின் எல்லை தெற்கே கானா நதிவரைக்கும் தொடர்ந்தது. இப்பகுதி மனசே கோத்திரத்தினருக்கு உரியதாக இருந்தும், நகரங்கள் எப்பிராயீமுக்குச் சொந்தமாயின. நதிக்கு வடக்கே மனாசேயின் எல்லை அமைந்தது. அது மத்தியத்தரைக் கடல்வரை எட்டியது.
தெற்கேயுள்ள தேசம் எப்பிராயீமுக்குச் சொந்தமானது. வடக்கேயுள்ள தேசம் மனாசேக்குச் சொந்தமானது. மத்தியத்தரைக் கடல் மேற்கு எல்லையாக இருந்தது. அதன் எல்லை வடக்கில் ஆசேரின் தேசத்தையும், கிழக்கில் இசக்காரின் தேசத்தையும் தொட்டது.
இசக்கார், ஆசேர் ஆகியோரின் பகுதிகளிலும் மனாசே ஜனங்களின் ஊர்கள் இருந்தன. பெத்செயான், இப்லெயாம், அவற்றைச் சுற்றிலும் காணப்பட்ட சிற்றூர்கள் எல்லாம் மனாசே ஜனங்களுக்குச் சேர்ந்தன. தோர், எந்தோர், தானாக், மெகிதோ மற்றும் அவைகளைச் சுற்றியிருந்த சிறிய நகரங்களிலும் வாழ்ந்தார்கள். நாபோத்தின் மூன்று ஊர்களிலும் அவர்கள் வாழ்ந்தனர்.
இஸ்ரவேலர் வலியோராயினர். அப்போது கானானியரைத் தங்களுக்காக உழைக்கும்படி இஸ்ரவேலர் செய்தனர். ஆனால் அவர்கள் தேசத்தை விட்டுப் போகும்படியாக கானானியரை வற்புறுத்தவில்லை.
யோசேப்பின் கோத்திரத்தினர் யோசுவாவிடம், “எங்களுக்கு ஒரு பகுதி நிலம் மாத்திரமே நீங்கள் கொடுத்தீர்கள். ஆனால் நாங்களோ எண்ணிக்கையில் மிகுதியான அளவில் உள்ளோம். தம் ஜனங்களுக்காக கர்த்தர் கொடுத்த தேசத்தில் ஒரு பகுதியை மட்டும் நீங்கள் ஏன் எங்களுக்குக் கொடுத்தீர்கள்?” என்றனர்.
யோசுவா, “நீங்கள் எண்ணிக்கையில் அதிக அளவு இருந்தீர்களேயானால் மலை நாட்டுக்குச் சென்று, அந்நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்நிலம் இப்போது பெரிசியருக்கும், ரெப்பாயீமீயருக்கும் உரியதாக உள்ளது. எப்பிராயீமின் மலை நாடு உங்களுக்கு அளவில் மிகவும் சிறியதாக இருந்தால் மட்டுமே அந்நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றான்.
யோசேப்பின் ஜனங்கள், “எங்களுக்கு எப்பிராயீமின் மலைநாடு போதுமான அளவு பெரியது அல்ல. ஆனால் அங்கு வாழும் கானானியரிடம் ஆற்றல் வாய்ந்த போர்க்கருவிகள் உள்ளன. அவர்களிடம் இரும்பாலாகிய தேர்கள் இருக்கின்றன! அந்த ஜனங்களே பள்ளத்தாக்கிலும் அதிகாரம் செலுத்துகின்றனர்! யெஸ்ரேயேல் பள்ளத்தாக்கு, பெத்செயான், அங்குள்ள சிறிய ஊர்கள் ஆகியவற்றின் அதிகாரமும் அவர்களிடமே உள்ளது” என்றார்கள்.
எப்பிராயீம், மனாசே, யோசேப்பின் ஜனங்களிடம் யோசுவா, “நீங்கள் எண்ணிக்கையில் பலராயிருக்கிறீர்கள். வல்லமை மிக்கவர்கள். நிலத்தில் ஒரு பகுதியைக் காட்டிலும் அதிகம் உங்களுக்குத் தரப்பட வேண்டும்.
நீங்கள் மலை நாட்டைப் பெறுவீர்கள். அது காடு, ஆனால் மரங்களை வெட்டி, வாழ்வதற்கேற்ற இடமாக மாற்றலாம். உங்களுக்கு அது சொந்தமாகும். அங்கிருந்து கானானியரை வெளியேறச் செய்வீர்கள். அவர்கள் ஆற்றல் வாய்ந்தோராய், சிறந்த போர்க் கருவிகளை வைத்திருந்தாலும் அவர்களை நீங்கள் தோற்கடிப்பீர்கள்” என்றான்.