ஏராளமான மக்கள் அவரை நோக்கி வருவதை இயேசு கண்களை ஏறெடுத்து நோக்கினார். பிலிப்பு விடம் இயேசு, “இவர்களெல்லாம் உண்பதற்கு நாம் அப்பத்தை எங்கே வாங்குவது?” என்று கேட்டார்.
அந்திரேயா இயேசுவிடம், “இங்கே ஒரு சிறுவன் வாற்கோதுமையால் ஆன ஐந்து அப்பத் துண்டுகளையும், இரண்டு சிறு மீன்களையும் வைத்திருக்கிறான். ஆனால் அவை இவ்வளவு மிகுதியான மக்களுக்குப் போதுமானதல்ல” என்றான்.
பிறகு இயேசு அப்பத் துண்டுகளை எடுத்தார். அவர் தேவனுக்கு நன்றி சொன்னார். அதை அங்கு அமர்ந்திருந்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கச் செய்தார். அவர் மீனையும் அதைப்போலவே பகிர்ந்தளிக்கச் செய்தார். இயேசு அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு வேண்டியமட்டும் கொடுத்தார்.
அனைத்து மக்களும் வேண்டிய மட்டும் உண்டனர். அவர்கள் உண்டு முடித்ததும் இயேசு தன் சீஷர்களிடம் “உண்ணப்படாத அப்பத்துண்டுகளையும் மீன் துண்டுகளையும் சேகரியுங்கள். எதையும் வீணாக்க வேண்டாம்” என்றார்.
எனவே சீஷர்கள் அவற்றைச் சேகரித்தனர். மக்கள் ஐந்து அப்பத்துண்டுகளிலிருந்தே உண்ண ஆரம்பித்தனர். ஆனால் உண்டு பிறகு மீதியிருந்த துணுக்குகளோ பன்னிரண்டு கூடைகளில் நிரப்பப்பட்டன.
அவரை மக்கள் அரசராக்கவேண்டும் என விரும்பினர். இதனை இயேசு அறிந்தார். மக்கள் தங்கள் எண்ணத்தைத் திட்டமாக்கிச் செயல்படுத்த விரும்பினர். எனவே இயேசு அவர்களை விட்டுத் தனியாக மலையில் ஏறினார். (மத். 14:22-27; மாற். 6:45-52)
அப்பொழுது இருட்ட ஆரம்பித்தது. எனினும் இயேசு அவர்களிடம் திரும்பி வரவில்லை. இயேசுவின் சீஷர்கள் படகில் ஏறிக் கடலைக் கடந்து கப்பர்நகூமிற்குச் செல்லத்தொடங்கினர்.
அவர்கள் மூன்று நான்கு மைல் தூரத்திற்குப் படகைச் செலுத்தினர். அதன் பின்பு அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர் தண்ணீர்மேல் நடந்துவந்துகொண்டிருந்தார். அவர் படகை நெருங்கி வந்தார். அவரது சீஷர்கள் அஞ்சினர்.
மறுநாள் வந்தது. கடலின் அக்கரையில் சில மக்கள் தங்கியிருந்தனர். இயேசு தன் சீஷர்களோடு படகில் செல்லவில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இயேசுவின் சீஷர்கள் இயேசு இல்லாமல் தனியாகச் சென்றதை அவர்கள் தெரிந்திருந்தனர். அங்கிருந்து செல்ல அந்த ஒரு படகு மட்டும்தான் உண்டு என்பதையும் அவர்கள் தெரிந்துகொண்டனர்.
இயேசுவும் அவரது சீஷர்களும் அங்கே இல்லை என்பதை மக்கள் அறிந்துகொண்டனர். ஆகையால் அவர்கள் படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்குச் சென்றனர். அவர்கள் இயேசுவைக் காண விரும்பினர்.
“ஏன் என்னைத் தேடுகிறீர்கள்? எனது வல்லமையை வெளிப்படுத்தும் எனது அற்புதங்களைப் பார்த்தீர்கள். அதற்காகவா என்னைத் தேடுகிறீர்கள்? இல்லை. நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அப்பத்தை உண்டீர்கள், திருப்தியாக உண்டீர்கள், அதனால் என்னைத் தேடுகிறீர்கள்.
பூமியிலுள்ள உணவுகள் கெட்டு அழிந்துபோகும். ஆகையால் அத்தகைய உணவுக்காக நீங்கள் வேலை செய்யவேண்டாம். ஆனால் எப்பொழுதும் நன்மையையும் நித்திய வாழ்வையும் தருகிற உணவுக்காக வேலை செய்யுங்கள். மனித குமாரனே உங்களுக்கு அத்தகைய உணவினைத் தருவார். தேவனாகிய பிதா, தான் மனித குமாரனோடு இருப்பதைக் காட்டிவிட்டார்” என்று இயேசு கூறினார்.
“தேவனால் அனுப்பப்பட்டவர் நீர்தான் என்பதை நிரூபிக்க என்ன அற்புதத்தை நீர் செய்யப் போகிறீர். நீர் செய்யும் அற்புதத்தைப் பார்க்க முடியுமெனில், அதற்குப் பின்னர் நாங்கள் உம்மை நம்புவோம். என்ன செய்யப் போகிறீர்?
நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் தேவன் கொடுத்த மன்னாவை (உணவு) உண்டார்கள். இது ‘தேவன் பரலோகத்தில் இருந்து அவர்களுக்கு உண்பதற்கு அப்பத்தைக் கொடுத்தார்,’ [✡சங்கீதம் 78:24-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.] என்று எழுதப்பட்டிருக்கிறது” என்று மக்கள் கேட்டனர்.
“நான் உண்மையைச் சொல்லுகிறேன். பரலோகத்திலிருந்து அப்பத்தை உங்களுக்கு கொடுத்தது மோசே அல்ல. ஆனால் என்னுடைய பிதா பரலோகத்திலிருந்து உண்மையான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார்.
“நான்தான் உங்களுக்கு ஜீவனளிக்கும் அப்பம். என்னிடம் வருகிற மனிதன் என்றென்றைக்கும் பசியோடு இருப்பதில்லை. என்மீது நம்பிக்கை வைக்கிற எவனும் எப்பொழுதும் தாகமாய் இருப்பதில்லை.
நான் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அதைச் செய்வதற்காக நான் பரலோகத்தில் இருந்து வந்திருக்கிறேன். நான் விரும்புவதைச் செய்வதற்கு வரவில்லை.
தேவன் கொடுத்த மக்களில் எவரையும் நான் இழக்கக்கூடாது. நான் இறுதி நாளில் அவர்களையெல்லாம் எழுப்புவேன். என்னை அனுப்பினவர் நான் செய்யவேண்டும் என்று விரும்புவதும் இதைத்தான்.
குமாரனைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அவரில் நம்பிக்கை வைத்து நித்திய ஜீவனைப் பெறுகின்றனர். நான் அந்த மனிதர்களை இறுதி நாளில் எழுப்புவேன். இதுதான் எனது பிதாவின் விருப்பமும் ஆகும்” என்றார் இயேசு.
அதற்கு யூதர்கள், “இவர் இயேசு. நாங்கள் இவரது தந்தையையும் தாயையும் அறிவோம். இயேசு யோசேப்பின் மகன். அவர் எப்படி நான் பரலோகத்திலிருந்து வந்தேன் என்று சொல்லலாம்?” என்று கேட்டனர்.
என்னை அனுப்பியவர் அந்தப் பிதாதான். அவரே மக்களை என்னிடம் அழைத்து வருகிறவர். நான் இறுதி நாளில் அவர்களை எழுப்புவேன். என் பிதா என்னிடம் மக்களை அழைத்து வராவிட்டால், எவரும் என்னிடம் வர முடிவதில்லை.
இது தீர்க்கதரிசிகளின் மூலம் எழுதப்பட்டிருக்கிறது, ‘தேவன் எல்லா மக்களுக்கும் கற்றுத் தருவார்.’ [✡ஏசாயா 54:13-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.] மக்கள் அப்பிதாவைக் கவனிக்கிறார்கள். கற்றுக்கொள்கிறார்கள். பிறகு அவர்கள் என்னிடம் வருகிறார்கள்.
“நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் மனித குமாரனின் சரீரத்தை உண்ணவேண்டும். அவரது இரத்தத்தை அருந்த வேண்டும். இதனை நீங்கள் செய்யாவிட்டால், உங்களுக்கு உண்மையான வாழ்க்கை கிடைக்காது.
நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் புசித்த அப்பத்தைப்போல் அல்ல நான். அவர்கள் அந்த அப்பத்தை உண்டார்கள். ஆனால், மற்றவர்களைப்போன்று அவர்கள் இறந்துபோயினர். நானோ பரலோகத்திலிருந்து இறங்கி வந்த அப்பம். இதனை உண்ணுகிற எவனும் நித்திய ஜீவனைப் பெறுவான்” என்றார் இயேசு.
ஒரு மனிதனுக்கு அவனது சரீரம் மட்டுமே வாழ்வு அளிப்பது இல்லை. அவனது ஆவியே ஜீவனைத் தருகிறது. நான் உங்களுக்குச் சொன்ன வசனங்கள் யாவும் ஆவியே. இவையே ஜீவனைத் தருவன.
ஆனால் உங்களில் சிலர் விசுவாசம் இல்லாமல் இருக்கிறீர்கள்” என்றார். (தன்னை விசுவாசிக்காதவர்களை இயேசு புரிந்துகொண்டார். இதனை அவர் துவக்கம் முதலே புரிந்துகொண்டார். தனக்கு எதிராகத் திரும்புகிறவனையும் இயேசு அறிந்திருந்தார்.)
இயேசு யூதாஸைப்பற்றியே இவ்வாறு கூறினார். அவன் சீமோன் ஸ்காரியோத்தின் மகன். பன்னிருவரில் ஒருவன். ஆனால் பிற்காலத்தில் யூதாஸ் இயேசுவிற்கு எதிராகத் திரும்பிவிட்டான்.