இயேசு அந்த நோயாளி அங்கு படுத்துக்கிடப்பதைக் கண்டார். அவன் நீண்ட காலமாக நோயாளியாக இருப்பதை அவர் அறிந்தார். ஆகையால் அவர் அவனிடம், நீ குணமடைய விரும்புகிறாயா? என்று கேட்டார்.
ஐயா, தண்ணீர் கலங்கும்போது நான் போய் நீரில் இறங்குவதற்கு எனக்கு உதவி செய்ய யாருமில்லை. முதல் மனிதனாகப் போய் மூழ்குவதற்கு முயல்வேன். ஆனால் எனக்கு முன்னால் எவனாவது ஒருவன் முதல் மனிதனாகப் போய் மூழ்கிவிடுகிறான் என்று அந்த நோயாளி பதில் சொன்னான்.
பிறகு இயேசு அவனை ஆலயத்தில் கண்டுபிடித்தார். இயேசு அவனிடம், பார், இப்பொழுது நீ குணமாகிவிட்டாய். உனக்குக் கேடுவராதபடி மேலும் பாவம் செய்யாமல் இருப்பாயாக என்று கூறினார்.
இதைக் கேட்ட யூதர்கள் இயேசுவைக் கொன்றுவிடக் கடுமையாக முயற்சி செய்தார்கள். அவர்கள், முதலில் இயேசு ஓய்வு நாளின் சட்டத்தை உடைத்துவிட்டார். பிறகு அவர் தேவனை அவரது பிதா என்று கூறுகிறார். அவர் தன்னை தேவனுக்குச் சமமாகக் கூறி வருகிறார் என்று விளக்கம் கூறினர்.
ஆனால் இயேசுவோ, உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், இந்தக் குமாரன் தனியாக எதுவும் செய்வதில்லை. இவர் தன் பிதாவிடம் எதைப் பார்க்கிறாரோ அவற்றையே செய்து வருகிறார்.
பிதா குமாரனை நேசிக்கிறார். அவர் தான் செய்பவற்றையெல்லாம் தனது குமாரனுக்குக் காட்டி வருகிறார். இந்த மனிதன் குணமானான். இதைவிட மேலான காரியங்களைப் பிதாவானவர் தனது குமாரன் மூலம் செய்வார். பின்பு நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள்.
தேவன் இதைச் செய்தார். எனவே அனைத்து மக்களும் பிதாவுக்குச் செய்கிற மரியாதையைக் குமாரனுக்கும் செய்ய வேண்டும். ஒருவன் குமாரனுக்கு மரியாதை செய்யாவிட்டால் அவன் பிதாவையும் அவமரியாதை செய்தவனாகிறான். பிதாவே தன் குமாரனை நம்மிடம் அனுப்பியிருக்கிறார்.
நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், நான் சொல்கிறதை எவன் கேட்டு என்னை அனுப்பினவரை நம்புகிறானோ அவனுக்கு நித்தியமான வாழ்வு உண்டு. அவன் தீர்ப்புக்கு உட்படமாட்டான். அவன் ஏற்கெனவே மரணத்தை விட்டு நீங்கி ஜீவனைப் பெற்றவனாகிறான்.
உங்களுக்கு ஓர் உண்மையைக் கூறுகிறேன். முக்கியமான வேளை வரும். அவ்வேளை ஏற்கெனவே இங்கே இருக்கிறது. பாவத்தில் இறந்தவர்கள் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். குமாரனிடமிருந்து கேட்பவற்றை நம்புகிறவர்கள் நித்திய ஜீவனைப் பெறுகின்றார்கள்.
அப்போது அவர்கள் கல்லறையை விட்டு வெளியே வருவார்கள். தங்கள் வாழ்வில் நன்மையைச் செய்தவர்கள், எழுந்து நித்திய ஜீவனைப் பெறுவார்கள். தீமை செய்தவர்கள் எழுந்து தண்டனையைப் பெறுவார்கள்.
நான் தனியாக எதுவும் செய்வதில்லை. நான் எனக்குச் சொல்லியிருக்கிறபடியே தீர்ப்பளிக்கிறேன். எனவே எனது தீர்ப்பு நீதியானதே. ஏனென்றால் நான் எனக்குப் பிடித்தமானதைச் செய்வதில்லை; என்னை அனுப்பினவருக்குப் பிடித்தமானதையே செய்கிறேன்.
மக்களுக்கு என்னைப் பற்றி ஒருவன் சாட்சி சொல்லி விளக்க வேண்டும் என்ற தேவை எனக்கில்லை. ஆனால் நீங்கள் இரட்சிக்கப்படும்படியாக இவற்றை நான் உங்களுக்குக் கூறுகிறேன்.
ஆனால் நான் யோவானைவிடப் பெரியவர் என்பதற்கு என்னிடம் சாட்சி உள்ளது. நான் செய்கிற செயல்களே எனக்கு உரிய சாட்சிகளாகும். இவைகளே என் பிதா, நான் செய்யும்படியாகக் கொடுத்தவை என்பதைக் காட்டுகின்றன.
என்னை அனுப்பிய என் பிதா, என்னைப் பற்றி அவரே சாட்சி தருகிறார். ஆனால் நீங்கள் அவர் சத்தத்தை ஒருபொழுதும் கேட்டதில்லை. அவர் எப்படி இருப்பார் என்று நீங்கள் பார்த்ததும் இல்லை.
நீங்கள் வேதவாக்கியங்களைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். அவை நித்திய ஜீவனை உங்களுக்குக் கொடுக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த வாக்கியங்களே என்னைப் பற்றி கூறுகின்றன.
நான் என் பிதாவிடமிருந்து வந்திருக்கிறேன். நான் அவருக் காகப் பேசுகிறேன். ஆனால் என்னை நீங்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். வேறொருவன் வந்து அவன் தனக்காகவே பேசினால் அவனை ஏற்றுக் கொள்கிறீர்கள்.
நீங்கள் உங்களில் ஒருவரை ஒருவர் பாராட்டுவதில் விருப்பம் கொள்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய பாராட்டைப் பெற முயற்சி செய்வதில்லை. ஆகையால் நீங்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்?
நான் பிதாவின் முன்னால் நின்று உங்களைக் குற்றம் சொல்வேன் என்று நினைக்க வேண்டாம். மோசே தான் உங்கள் குறைகளைச் சொல்கிறவன். மோசே மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.