நீங்கள் என்னில் நிலைத்திருங்கள். நானும் உங்களில் நிலைத்திருப்பேன். எந்தக் கிளையும் தனியாகக் கனிகொடுக்க இயலாது. அது செடியிலேயே தொடர்ந்து இருக்கவேண்டும். இதுபோலத்தான் நீங்களும். நீங்கள் தனியாக இருந்து கனிதர முடியாது. என்னோடு சேர்ந்தே இருக்கவேண்டும்.
“நான்தான் திராட்சைச் செடி. நீங்கள் கிளைகள். எவனொருவன் என்னிடம் நிரந்தரமாக இருக்கிறானோ, எவனொருவனிடம் நான் நிரந்தரமாக இருக்கிறேனோ, அவன் கனிதரும் கிளையாக இருப்பான். ஆனால் அவன் நான் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது.
என்னோடு இல்லாத எவனும் செடியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட கிளைபோல் ஆகிவிடுகிறான். அது காய்ந்துபோகும். மக்கள் அவற்றைப் பொறுக்கி நெருப்பிலே போட்டு எரித்துவிடுகிறார்கள்.
என்னில் நிரந்தரமாக இருங்கள், என் உபதேசங்களைக் கடைப்பிடியுங்கள். நீங்கள் இவற்றைச் செய்தால் நீங்கள் விரும்புகிற எவற்றையும் என்னிடம் கேட்கலாம். அவை உங்களுக்குக் கொடுக்கப்படும்.
நான் என் பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன். நான் அவரது அன்பில் நிலைத்திருக்கிறேன். இதைப்போலவே, நீங்களும் எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் எனது அன்பில் நிலைத்திருப்பீர்கள்.
நான் இவற்றையெல்லாம் உங்களுக்குக் கூறுகிறேன். எனவே நான் பெற்ற மகிழ்ச்சியை நீங்களும் பெறலாம். உங்கள் மகிழ்ச்சி முழுமையாக இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இனி நான் உங்களை வேலைக்காரன் என்று அழைப்பதில்லை. ஏனெனில் வேலைக்காரன் தன் எஜமானன் செய்வதை அறியமாட்டான். நான் இப்பொழுது உங்களை நண்பர்கள் என்றே அழைக்கிறேன். ஏனென்றால் என் பிதா எனக்குச் சொன்னவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
“நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. நானே உங்களைத் தேர்ந்தெடுத்தேன். நானே உங்களைக் கனிகொடுக்குமாறு ஏற்படுத்தினேன். உங்கள் வாழ்வில் இந்தக் கனி நிரந்தரமாக இருக்கவேண்டும். பிறகு என் பிதா என்பேரில் நீங்கள் கேட்கிற எதையும் உங்களுக்குத் தருவார்.
நீங்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் அது தன் மனிதர்களை நேசிப்பதுபோன்று உங்களையும் நேசிக்கும். ஆனால் நான் உங்களை உலகத்திலிருந்து தேர்ந்து எடுத்துவிட்டேன். அதனால்தான் உலகம் உங்களைப் பகைக்கிறது.
“ஒரு வேலைக்காரன் தன் எஜமானனைவிடப் பெரியவன் அல்லன் என்று நான் சொன்ன கருத்தை நினைத்துப்பாருங்கள். மக்கள் என்னைத் துன்புறுத்தினால் அவர்கள் உங்களையும் துன்புறுத்துவார்கள். மக்கள் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிந்தால் உங்கள் உபதேசத்திற்கும் கீழ்ப்படிவார்கள்.
நான் உலகத்துக்கு வந்து மக்களிடம் பேசாமல் இருந்திருந்தால் அவர்களுக்குப் பாவம் பற்றிய எண்ணம் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது நான் அவர்களிடம் பேசிவிட்டேன். எனவே அவர்கள் தம் பாவங்களுக்குச் சாக்குபோக்கு சொல்ல முடியாது.
நான், இதுவரை எவரும் செய்யாதவற்றை மக்கள் மத்தியில் செய்திருக்கிறேன். நான் அவற்றைச் செய்யாமல் இருந்திருந்தால் மக்களுக்குத் தம் பாவத்தைப் பற்றிய குற்ற உணர்வு இல்லாமல் போயிருக்கும். ஆனால் நான் செய்தவற்றையெல்லாம் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். எனினும் அவர்கள் என்னையும் என் பிதாவையும் வெறுக்கிறார்கள்.
“நான் என் பிதாவிடமிருந்து அந்த உதவியாளரை உங்களிடம் அனுப்புவேன். என் பிதாவிடமிருந்து வருகிற அவர் உண்மையின் ஆவியாக இருப்பார். அவர் வரும்போது என்னைப்பற்றிக் கூறுவார்.