1
|
பஸ்கா பண்டிகைக்கு இன்னும் ஆறு நாட்கள் இருந்தன. இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கே லாசரு வாழ்ந்து வந்தான். (இவன் இறந்த பின்னரும் இயேசுவால் உயிர் பெற்று எழுந்தவன்) |
2
|
பெத்தானியாவில் இயேசுவுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்தனர். மார்த்தாள் உணவு பரிமாறினாள். இயேசுவோடு லாசருவும் இன்னும் பலரும் விருந்தில் கலந்துகொண்டனர். |
3
|
மரியாள் சுத்தமான நளதம் என்னும் விலை உயர்ந்த வாசனைத் தைலத்தை ஒரு இராத்தல் கொண்டு வந்தாள். அவள் அதனை இயேசுவின் பாதங்களில் ஊற்றினாள். பிறகு அதனைத் தன் தலை மயிரால் துடைத்தாள். வீடு முழுவதும் தைலத்தின் வாசனை நிறைந்துவிட்டது. |
4
|
யூதாஸ்காரியோத்தும் அங்கிருந்தான். (யூதாஸ் இயேசுவின் சீஷரில் ஒருவன். இவன் தான் பிறகு இயேசுவிற்கு எதிரானவன்.) மரியாள் செய்தவற்றை இவன் விரும்பவில்லை. |
5
|
அவன் இத்தைலம் முந்நூறு வெள்ளிகாசுகள் மதிப்பு உடையது. இதனை விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம் என்றான். |
6
|
ஆனால் உண்மையில் அவனுக்கு ஏழைகளின் மீது அக்கறையில்லை. அவன் ஒரு திருடனானபடியால் இவ்வாறு சொன்னான். இவன் தான் இயேசுவின் சீஷர்களுள் பணப்பையை வைத்திருந்தவன். இவன் அவ்வப்போது பணப் பையிலிருந்து பணம் திருடி வந்தான். |
7
|
இயேசு அவனிடம், அவளைத் தடை செய்யாதீர்கள். என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதைச் சேமித்து வைத்திருந்தாள். |
8
|
ஏழை மக்கள் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்கள். நானோ எப்பொழுதும் உங்களோடு இருப்ப தில்லை என்றார். |
9
|
யூதர்களில் பலர், இயேசு பெத்தானியாவில் இருப்பதாக அறிந்தனர். ஆகையால் அவர்கள் அங்கே சென்றனர். அவர்கள் இயேசுவை மட்டுமல்லாமல் லாசருவையும் பார்க்க எண்ணினர். லாசரு இயேசுவால் மரணத்துக்குப் பின்னும் உயிரோடு எழுப்பப்பட்டவன். |
10
|
ஆகவே, தலைமை ஆசாரியர்களும் இயேசுவோடு லாசருவையும் கொல்லத் திட்டமிட்டார்கள். |
11
|
ஏனென்றால் லாசருவின் நிமித்தம் ஏராளமான யூதர்கள் தங்கள் தலைவர்களை விட்டுவிட்டு இயேசுவை நம்பத் தொடங்கினர். அதனால்தான் யூதத் தலைவர்கள் லாசருவையும் கொலை செய்ய விரும்பினர். |
12
|
மறுநாள் இயேசு வருவதாக எருசலேமிலுள்ள பெருங்கூட்ட மக்கள் கேள்விப்பட்டனர். இம்மக்கள் பஸ்கா பண்டிகைக்காக வந்தவர்கள். |
13
|
அந்த மக்கள் குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு இயேசுவைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள்: அவரைப் புகழ்வோம்! வருக! தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவரே கர்த்தரின் பேரால் வருகிறவரே! தேவன் இஸ்ரவேலின் இராஜாவை ஆசீர் வதிப்பாராக! என்று முழங்கினர். சங்கீதம் 118:25-26 |
14
|
இயேசு ஒரு கழுதையைக் கண்டு அதன் மேல் ஏறிக்கொண்டார். |
15
|
சீயோன் நகரமே! அஞ்சவேண்டாம். பார். உன் அரசர் வந்து கொண்டிருக்கிறார். அவர் இளங்கழுதைமேல் சவாரி செய்து வருகிறார் சகரியா 9:9 என்றும்Ԕமக்கள் ஆரவாரம் செய்தனர். |
16
|
இயேசுவின் சீஷர்கள் இவற்றை முதலில் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இயேசு மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, அவர்கள் இவை ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறதே என்று உணர்ந்து கொண்டனர். அத்துடன் அவருக்காகத் தாங்கள் செய்த செய்கைகளையும் நினைவு கூர்ந்தனர். |
17
|
மரணத்திலிருந்து லாசருவை இயேசு எழுப்பி கல்லறையை விட்டு வெளியே வா என்று சொன்னபோது இயேசுவுடன் பலர் இருந்தனர். இப்பொழுது அவர்கள் மற்றவர்களிடம் இயேசு செய்தவற்றைப் பற்றிக் கூறினர். |
18
|
இயேசு இந்த அற்புதத்தைச் செய்ததைக் கேள்விப்பட்ட ஏராளமான மக்கள் இயேசுவை வரவேற்பதற்காகத் திரண்டனர். |
19
|
அதனால் பரிசேயர்கள் தங்களுக்குள், பாருங்கள், நமது திட்டம் நன்மையைத் தரவில்லை. எல்லா மக்களும் அவரைப் பின் தொடர்கிறார்கள் என்று பேசிக்கொண்டனர். |
20
|
அங்கே கிரேக்க நாட்டு மக்களில் சிலரும் இருந்தனர். இவர்கள் பஸ்கா பண்டிகையில் வழிபாடு செய்ய எருசலேமுக்கு வந்திருந்தனர். |
21
|
இவர்கள் பிலிப்புவிடம் சென்று (கலிலேயாவிலுள்ள பெத்சாய்தாவில் இருந்து வந்தவன் பிலிப்பு) ஐயா, நாங்கள் இயேசுவைச் சந்திக்க விரும்புகிறோம் என்றனர். |
22
|
பிலிப்பு அந்திரேயாவிடம் சொன்னான். பிறகு இருவரும் இயேசுவிடம் சொன்னார்கள். |
23
|
இயேசு அவர்களிடம், மனிதகுமாரன் மகிமை பெறுகிற நேரம் வந்துவிட்டது. |
24
|
நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒரு கோதுமை விதை தரையில் விழுந்து (இறக்க) அழிய வேண்டும். பிறகுதான் அது வளர்ந்து ஏராளமாகக் கோதுமையைத் தரும். ஆனால் அது அழியாவிட்டால், அது தனி விதையாகவே இருக்கும். |
25
|
தனக்குச் சொந்தமான வாழ்வை நேசிக்கிறவன் அதனை இழப்பான். இவ்வுலகில் தன் வாழ்வின் மீது வெறுப்பு கொண்டவன் என்றென்றைக்கும் அதைக் காத்துக்கொள்வான். அவன் நிரந்தர வாழ்வைப் பெறுவான். |
26
|
எனக்குப் பணிவிடை செய்கிறவன் என்னைப் பின்பற்றவேண்டும். நான் எங்கெங்கே இருக்கிறேனோ அங்கெல்லாம் என் பணியாளனும் இருப்பான். எனக்குப் பணி செய்கிறவர்களை என் பிதாவும் பெருமைப்படுத்துவார். |
27
|
நான் இப்போது கலக்கத்தில் இருக்கிறேன். நான் என்ன சொல்வது? ԅபிதாவே, என்னை இந்தத் துன்ப காலத்தில் இருந்து காப்பாற்றுங்கள் என்று சொல்லலாமா? இல்லை, துன்பப்படுவதற்காகவே இத்தருணத்தில் வந்தேன். |
28
|
பிதாவே, உங்கள் பெயருக்கே மகிமையை தேடித்தருக! என்றார். அப்போது வானில் இருந்து ஒரு குரல் வந்து, நான் என் பெயருக்கு மகிமை கொண்டு வந்திருக்கிறேன். நான் அதை மீண்டும் செய்வேன் என்றது. |
29
|
அங்கே நின்றிருந்த மக்கள் அக்குரலைக் கேட்டார்கள். அவர்களில் சிலர் அதனை இடி முழக்கம் என்றனர். வேறு சிலரோ ஒரு தேவதூதன் இயேசுவிடம் பேசினான் என்றனர். |
30
|
மக்களிடம் இயேசு, இந்தக் குரல் எனக்காக அல்ல. உங்களுக்காக. |
31
|
உலகம் நியாயம் தீர்க்கப்படுவதற்கான தருணம் இதுதான். இப்பொழுது உலகை ஆண்டு கொண்டிருக்கும் சாத்தான் தூக்கி எறியப்படுவான். |
32
|
நான் பூமியில் இருந்து உயர்த்தப்படுவேன். இது நடைபெறும்போது எல்லா மக்களையும் என்னோடு சேர்த்துக் கொள்வேன் என்றார். |
33
|
தான் எவ்வாறு இறந்து போவேன் என்பதைக் காட்டவே இவ்வாறு கூறினார். |
34
|
ஆனால் மக்களோ, கிறிஸ்து என்றென்றும் வாழ்வார் என்று நமது சட்டங்கள் கூறுகின்றனவே. அப்படியிருக்க மனித குமாரன் உயர்த்தப்படுவார் என்று ஏன் கூறுகின்றீர்? யார் இந்த மனித குமாரன்? எனக் கேட்டனர். |
35
|
பிறகு இயேசு, இன்னும் சிறிது காலம் உங்களோடு ஒளி இருக்கும். எனவே, ஒளி இருக்கும்போதே நடந்துவிடுங்கள். அப்போது தான் இருட்டாகிய பாவம் உங்களைப் பிடித்துக்கொள்ளாது. இருட்டிலே நடந்து போகிறவனுக்குத் தான் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் இருக்கும். |
36
|
ஆகவே, ஒளி இருக்கும்போதே அதன் மீது நம்பிக்கை வையுங்கள். அப்பொழுது நீங்கள் ஒளியின் பிள்ளைகள் ஆவீர்கள் என்றார். இயேசு இவற்றையெல்லாம் சொல்லி முடித்தபின் அவ்விடத்தை விட்டுப் போனார். அவர் போய் அவர்களிடமிருந்து தன்னை மறைத்துக் கொண்டார். |
37
|
இயேசு இவ்வாறு ஏராளமான அற்புதங்களைச் செய்தார். மக்கள் அவற்றைப் பார்த்தனர். எனினும் அவர்மீது அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை. |
38
|
தீர்க்கதரிசி ஏசாயா சொன்னது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது. கர்த்தாவே, நாங்கள் சொன்னதைக் கேட்டு நம்பிக்கை வைத்தவர்கள் யார்? தேவனின் வல்லமையைக் கண்டு கொண்டவர்கள் யார்? ஏசாயா 53:1 |
39
|
இதனால்தான் மக்கள் நம்பவில்லை. ஏனென்றால் ஏசாயா மேலும், |
40
|
தேவன் மக்களைக் குருடாக்கினார். தேவன் அவர்களின் மனதை மூடினார். அவர்கள் கண்களினால் பாராமலும் மனதின் மூலம் அறியாமலும் இருக்க வேண்டும் என்றே தேவன் இதைச் செய்தார். அதன்பின் அவர்களை நான் குணப்படுத்துவேன். ஏசாயா 6:10 |
41
|
இயேசுவின் மகிமையை ஏசாயா அறிந்திருந்தபடியால் அவர் இவ்வாறு சொன்னார். எனவே ஏசாயா இயேசுவைப்பற்றிப் பேசினார். |
42
|
ஆனால் ஏராளமான மக்கள் இயேசுவை நம்பினார்கள். ஏராளமான யூதத்தலைவர்கள் கூட இயேசுவை நம்பினார்கள். ஆனால் அவர்கள் பரிசேயர்களுக்குப் பயந்தனர். எனவே, அவர்கள் இயேசுவை நம்புவதாக வெளிப்படையாகக் கூறவில்லை. தாம் ஜெப ஆலயத்திற்குப் புறம்பாக்கப்படுவோமோ என்று அவர்கள் பயந்தனர். |
43
|
அவர்கள் தேவனால் வரும் பாராட்டைவிட மனிதரால் வரும் பாராட்டை விரும்பினர். |
44
|
பிறகு இயேசு உரத்த குரலில், என்னில் விசுவாசம் வைக்கிறவன் எவனோ அவன், என்னை அனுப்பிய தேவனிடமும் விசுவாசம் வைப்பான். |
45
|
என்னைப் பார்க்கிறவன் எவனோ, அவனே, என்னை அனுப்பிய தேவனையும் பார்க்கிறவனாகிறான். |
46
|
நானே ஒளி, நான் இந்த உலகத்துக்கு வந்திருக்கிறேன். ஆகவே, என்னில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவனும் இருளில் தங்கமாட்டான். |
47
|
நான் மக்களுக்குத் தீர்ப்பளிப்பதற்காக இந்த உலகத்துக்கு வரவில்லை. உலகத்தில் உள்ள மக்களைப் பாதுகாக்கவே வந்திருக்கிறேன். எனவே, என் வார்த்தைகளைக் கேட்டும் என்னை நம்பாமல் போகிறவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை. |
48
|
என்னை நம்ப மறுக்கிறவர்களையும் நான் சொல்பவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்களையும் நியாயந்தீர்க்க ஒரு நீதிபதி உண்டு. அதுதான் நான் சொன்ன உபதேசங்கள். அவை இறுதி நாளில் அவர்களை நியாயம் தீர்க்கும். |
49
|
ஏனென்றால் நான் சொன்ன உபதேசங்கள் என்னிடமிருந்து வந்தவையல்ல. நான் சொன்னவையும் உபதேசித்தவையும் என்னை அனுப்பிய என் பிதாவாகிய தேவன் எனக்குச் சொன்னவையாகும். |
50
|
என் பிதாவின் கட்டளைகள் நித்திய ஜீவனுக்குரியவை என்பதை அறிவேன். ஆகையால் நான் சொல்கிறவைகளை என் பிதா எனக்குச் சொன்னபடியே சொல்கிறேன் என்றார். |
John 12:35 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...