அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த அப்பகுதி ஜனங்கள் இவர்கள். முன்பு, பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சார் இவர்களைப் பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோயிருந்தான். இவர்கள் இப்போது எருசலேம் மற்றும் யூதாவிற்குத் திரும்பி வந்தார்கள். ஒவ்வொருவரும் தமது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார்கள்.
எருசலேமிற்குச் சில ஜனங்கள் தெல்மெலாக், தெல்அர்சாவி, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய இடங்களில் இருந்து வந்தனர். ஆனால் இந்த ஜனங்களால் தங்களுடைய குடும்பங்கள் இஸ்ரவேல் குடும்பத்திலிருந்து வந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
ஆசாரியர்களின் குடும்பங்களில் இருந்து வரும் சந்ததியினரின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: அபாயா, கோஸ், பர்சிலாய் (ஒருவன் பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டான். அவனும் பர்சிலாயின் சந்ததியினரோடு சேர்த்து எண்ணப்பட்டான்.)
இந்த ஜனங்கள் தங்கள் குடும்ப வரலாற்றைத் தேடினார்கள், ஆனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தங்கள் முற்பிதாக்கள் ஆசாரியர்கள், என்பதை நிரூபிக்க முடியவில்லை. எனவே, ஆசாரியர்களாகச் சேவைசெய்ய முடியவில்லை. ஆசாரியர்களின் ஜனங்கள் பட்டியலில், இவர்கள் இடம்பெற முடியவில்லை.
இவர்கள் பரிசுத்தமான உணவுப் பொருட்கள் எதையும் உண்ணக்கூடாது என்று ஆளுநர் கட்டளையிட்டார். ஓர் ஆசாரியன் ஊரீமையும் தும்மீமையும் பயன்படுத்தி, தேவனிடம் என்ன செய்யவேண்டும் என்பதைக் கேட்கும் வரைக்கும் அவர்களால் அந்த உணவு எதையும் உண்ண முடியவில்லை.
(64-65) ஆக மொத்தம், 42,360 பேர் திரும்பி வந்த குழுவில் இருந்தார்கள். அவர்களின் வேலைக்காரர்களான 7,337 ஆண்கள் மற்றும் பெண்களையும் சேர்க்கவில்லை. அவர்களோடு 200 பாடகர்கள், ஆண்களும் பெண்களுமாய் இருந்தனர்.
இக்கூட்டம் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய்ச் சேர்ந்தது. பிறகு குடும்பத் தலைவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்காக அன்பளிப்புகளைக் கொடுத்தனர். ஆலயம் அழிக்கப்பட்ட இடத்திலேயே புதிய ஆலயத்தைக் கட்ட எண்ணினார்கள்.
எனவே ஆசாரியர்களும், வேலையாட்களும், மற்றும் பலரும் எருசலேமிலும் அதைச் சுற்றிய இடங்களுக்கும் போனார்கள். இவர்களோடு ஆலயப் பாடகர்களும், வாயில் காவலர்களும், ஆலயப் பணியாளர்களும் இருந்தனர். இஸ்ரவேலின் மற்ற ஜனங்கள் தங்கள் சொந்த நகரங்களில் தங்கினார்கள்.