“மனுபுத்திரனே, எகிப்து அரசனான பார்வோனைப் பற்றிய இச்சோகப் பாடலைப் பாடு. அவனிடம் கூறு: “ ‘நீ நாடுகளிடையில் பெருமையோடு நடைபோட்ட பலம் வாய்ந்த இளம் சிங்கம் என்று உன்னை நினைத்தாய். ஆனால் உண்மையில் நீ ஏரிகளில் கிடக்கிற முதலையைப் போன்றவன். நீ உனது வழியை ஓடைகளில் தள்ளிச்சென்றாய். நீ உன் கால்களால் தண்ணீரைக் கலக்குகிறாய். நீ எகிப்து நதிகளை குழப்புகிறாய்.’ ”
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் பல ஜனங்களை ஒன்று கூட்டினேன். இப்போது நான் என் வலையை உன் மேல் வீசுவேன். அந்த ஜனங்கள் உன்னை உள்ளே இழுப்பார்கள்.
பிறகு நான் உன்னை வெறுந்தரையில் விடுவேன். நான் உன்னை வயலில் எறிவேன். எல்லாப் பறவைகளும் வந்து உன்னைத் உண்ணும்படிச் செய்வேன். காட்டு மிருகங்கள் எல்லா இடங்களிலுமிருந்து வந்து வயிறு நிறையும்வரை உன்னை உண்ணும்.
நான் வானத்தில் ஒளிவிடும் எல்லா விளக்குகளையும் உன்மேல் இருண்டுப்போகச் செய்வேன். நான் உன் நாடு முழுவதும் இருண்டுப்போகக் காரணம் ஆவேன். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
உன்னைப் பற்றி பல ஜனங்கள் அறிந்து திகைக்கும்படி நான் செய்வேன். அவர்களின் அரசர்கள் நான் அவர்கள் முன் வாள் வீசும்போது பயங்கரமாக அஞ்சுவார்கள். நீ விழுகின்ற நாளில் அரசர்கள் ஒவ்வொரு நிமிடமும் பயத்தால் நடுங்குவார்கள். ஒவ்வொரு அரசனும் தன் சொந்த வாழ்க்கைக்காகப் பயப்படுவான்.”
நான் அவ்வீரர்களை உன் ஜனங்களைப் போரில் கொல்லப் பயன்படுத்துவேன். அவ்வீரகள் மிகக் கொடூரமான நாடுகளிலிருந்து வருகின்றனர். அவர்கள் எகிப்து பெருமைப்பட்டுக்கொண்டிருப்பவற்றைக் கொள்ளையடிப்பார்கள். எகிப்து ஜனங்கள் அழிக்கப்படுவார்கள்.
எகிப்தில் ஆற்றங்கரையில் பல மிருகங்கள் உள்ளன. நான் அந்த மிருகங்களையும் அழிப்பேன். ஜனங்கள் இனிமேல் தங்கள் கால்களால் தண்ணீரைக் கலக்கமுடியாது. இனிமேல் பசுக்களின் குளம்புகளும் தண்ணீரைக் கலக்கமுடியாது.
எனவே நான் எகிப்தில் உள்ள தண்ணீரை அமைதிப்படுத்துவேன். நான் நதிகளை மெதுவாக ஓடச் செய்வேன். அவை எண்ணெயைப் போன்று ஓடும்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்:
“நான் எகிப்து நாட்டைக் காலி பண்ணுவேன். அத்தேசம் எல்லாவற்றையும் இழக்கும். எகிப்தில் வாழ்கிற எல்லா ஜனங்களையும் தண்டிப்பேன். பிறகு அவர்கள் நானே கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிவார்கள்!
“ஜனங்கள் எகிப்திற்காகப் பாடவேண்டிய சோகப் பாடல் இதுதான். வேறு நாடுகளில் உள்ள மகள்கள் (நகரங்கள்) எகிப்திற்காக இச்சோகப் பாடலைப் பாடுவார்கள். இது அவர்கள் எகிப்திற்காகவும் அதன் ஜனங்களுக்காகவும் பாடுகிற சோகப் பாடல்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைக் கூறினார்.
“மனுபுத்திரனே, எகிப்து ஜனங்களுக்காக புலம்பு. எகிப்தையும் அந்த மகள்களையும் பலம் வாய்ந்த நாடுகளிலிருந்து கல்லறைக்கு வழிநடத்து. அவர்களைக் கீழ் உலகத்திற்கு ஏற்கனவே ஆழமான குழிகளில் இருக்கிறவர்களோடு அனுப்பு.
“போரில் பலமும் ஆற்றலுமிக்க மனிதர்கள் கொல்லப்பட்டனர். அந்த அந்நியர்கள் மரண இடத்திற்குச் சென்றனர். அந்த இடத்திலிருந்து, அந்த மனிதர்கள் எகிப்தோடும் அதன் ஆதரவாளர்களோடும் பேசுவார்கள், அவர்களும் போரில் கொல்லப்படுவார்கள்.
(22-23) “அசூரும் அதன் படையும் மரண இடத்தில் இருக்கும். அவர்களின் கல்லறைகள் ஆழமான குழிக்குள் செல்லும். அந்த அசூரிய வீரர்கள் போரில் கொல்லப்படுவார்கள். அசூரியப் படையானது அதன் கல்லறையைச் சுற்றி உள்ளது. அவர்கள் உயிரோடிருந்த போது ஜனங்களை பயப்படுத்தினார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் அமைதியாகிவிட்டது. அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர்.
“ஏலாமும் இங்கே இருக்கிறது. அதன் படை அவள் கல்லறையைச் சுற்றியிருக்கிறது. அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். அந்த அந்நியர்கள் பூமிக்குக் கீழே போய்விட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்தபோது ஜனங்களை பயப்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் தம்மோடு அவமானத்தை எடுத்துக்கொண்டு ஆழமான குழிகளுக்குள் சென்றுவிட்டார்கள்.
அவர்கள் ஏலாமுக்கும் போரில் மரித்த அவர்களின் அனைத்து வீரர்களுக்கும் படுக்கை போட்டிருக்கிறார்கள். ஏலாமின் படை அதன் கல்லறையைச் சுற்றியிருக்கிறது. அந்த அந்நியர்கள் அனைவரும் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்தபோது, ஜனங்களை பயப்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் தம் அவமானத்தை எடுத்துக்கொண்டு ஆழமான குழிக்குள் சென்றார்கள். அவர்கள் கொல்லப்பட்ட மற்ற ஜனங்களோடு சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
“மேசேக், தூபால் மற்றும் அவற்றின் படைகளும் அங்கே உள்ளன. அவர்களின் கல்லறைகள் அதைச் சுற்றியுள்ளன. அந்த அந்நியர்களும் போரில் கொல்லப்பட்டார்கள். அவர்கள் உயிரோடு இருந்தபோது ஜனங்களை பயப்படுத்தினார்கள்.
ஆனால், இப்பொழுது நீண்ட காலத்துக்கு முன்னால் மரித்துப் போன, வல்லமையான மனிதர்களோடு படுத்துக்கிடக்கிறார்கள். அவர்கள் தம் போர்க்கருவிகளோடு புதைக்கப்பட்டார்கள். அவர்களின் வாள்கள் அவர்களின் தலைகளுக்குக் கீழ் வைக்கப்படும். ஆனால் அவர்களின் பாவங்கள் அவர்களின் எலும்பில் உள்ளன. ஏனென்றால், அவர்கள் உயிரோடு இருக்கும்போது ஜனங்களை பயப்படுத்தினார்கள்.
“ஏதோமும் அங்கே இருக்கிறது. அவனோடு அரசர்களும் மற்ற தலைவர்களும் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் பலம் பொருந்திய வீரர்களாகவும் இருந்தனர். ஆனால் இப்பொழுது போரில் கொல்லப்பட்ட மற்றவர்களோடு கிடக்கிறார்கள். அவர்கள் அந்த அந்நியர்களுடன் கிடக்கிறார்கள். அவர்கள் ஆழமான குழிக்குள் கிடக்கும் மற்ற ஜனங்களுடன் இருக்கின்றனர்.
“வடக்கில் உள்ள அரசர்கள் அனைவரும் அங்கே இருக்கின்றனர்! சீதோனில் உள்ள அனைத்து வீரர்களும் அங்கே இருக்கின்றனர். அவர்களது பலம் ஜனங்களைப் பயப்படுத்தியது. ஆனால், அவர்கள் அதனால் அவமானமடைகிறார்கள். அந்த அந்நியர்கள் போரில் கொல்லப்பட்டவர்களோடு கிடக்கிறார்கள். அவர்கள் தம் அவமானத்தோடு அக்குழிக்குள் சென்றார்கள்.
“பார்வோன் மரண இடத்திற்குச் சென்ற ஜனங்களை பார்ப்பான். அவனும் அவனோடுள்ள அனைத்து ஜனங்களும் ஆறுதல் பெறுவார்கள். ஆம், பார்வோனும் அவனது அனைத்துப் படைகளும் போரில் கொல்லப்படுவார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
“பார்வோன் உயிரோடு இருக்கும்போது, ஜனங்கள் அவனுக்குப் பயப்படும்படிச் செய்தேன். ஆனால் இப்போது, அவன் அந்த அந்நியர்களோடு விழுந்துகிடக்கிறான். பார்வோனும் அவனது படையும் ஏற்கனவே போரில் கொல்லப்பட்ட வீரர்களோடு விழுந்துகிடப்பார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.