Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Exodus Chapters

Exodus 8 Verses

1 கர்த்தர் மோசேயை நோக்கி, "பார்வோனிடம் போய், ‘எனது ஜனங்கள் என்னைத் தொழுதுகொள்ள செல்வதற்கு அனுமதிகொடு!
2 எனது ஜனங்கள் போக நீ அனுமதிக்காவிட்டால், நான் எகிப்தைத் தவளைகளால் நிரப்புவேன்.
3 நைல் நதி தவளைகளால் நிரம்பும், அவை நதியை விட்டு வெளியேறி உங்கள் வீடுகளுக்குள் நுழையும். அந்தத் தவளைகள் உங்கள் படுக்கையறைகளிலும், படுக்கைகளிலும் இருக்கும். உங்கள் அதிகாரிகளின் வீடுகளிலும், உங்கள் சமையல் அடுப்புகளிலும் தண்ணீர் ஜாடிகளிலும் இருக்கும்.
4 தவளைகள் உன் மீதும், உன் ஜனங்கள் மீதும், உன் அதிகாரிகள் மீதும் இருக்கும்’ என்று கர்த்தர் சொல்கிறார்" என்று சொல்லுமாறு கூறினார்.
5 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, "கால்வாய்கள், நதிகள், ஏரிகள் ஆகியவற்றின் மீது அவனது கைத்தடியைப் பிடிக்குமாறு ஆரோனுக்குக் கூறு, அப்போது எகிப்து தேசமெங்கும் தவளைகள் வெளியில் வந்துசேரும்" என்றார்.
6 எனவே ஆரோன் எகிப்தின் தண்ணீர் நிலைகள் அனைத்தின்மீதும் தனது கையைத் தூக்கினான். தவளைகள் தண்ணீரிலிருந்து வெளியேறிவர ஆரம்பித்து எகிப்து தேசமெங்கும் நிறைந்தன.
7 மந்திரவாதிகளும் அதே காரியத்தைச் செய்வதற்குத் தங்கள் உபாயங்களைப் பயன்படுத்தினர். எனவே, இன்னும் அதிகமான தவளைகள் எகிப்து தேசத்திற்குள் வந்தன!
8 பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அழைத்து, "என்னிடமிருந்தும், எனது ஜனங்களிடமிருந்தும் தவளைகளை அப்புறப்படுத்தும்படியாக கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள், நான் கர்த்தருக்குப் பலிகளைச் செலுத்துவதற்கு ஜனங்களைப் போக அனுமதிப்பேன்" என்றான்.
9 மோசே பார்வோனை நோக்கி, "தவளைகளை எப்போது அப்புறப்படுத்தலாமென்பதை எனக்குக் கூறு. நான் உனக்காகவும் உனது ஜனங்களுக்காவும் உனது அதிகாரிகளுக்காகவும் வேண்டிக்கொள்வேன். அப்போது தவளைகள் உங்களையும் உங்கள் வீடுகளையயும் விட்டுச்செல்லும், நதியில் மட்டுமே அவை வாழும். எப்போது தவளைகள் போக வேண்டுமென நீ விரும்புகிறாய்?" என்றான்.
10 பார்வோன், "நாளைக்கு" என்றான். மோசே, "நீ சொல்வதுபோல் நடக்கும். இதன் மூலமாக எங்கள் தேவனாகிய கர்த்தரைப் போல வேறே தேவன் இல்லை என்பதை நீ அறிவாய்.
11 தவளைகள் உன்னையும், உன் வீட்டையும், உன் அதிகாரிகளையும், உன் ஜனங்களையும் விட்டுநீங்கும். ஆற்றில் மட்டுமே தவளைகள் தங்கும்" என்றான்.
12 மோசேயும், ஆரோனும் பார்வோனிடமிருந்து சென்றனர். பார்வோனுக்கு எதிராகக் கர்த்தர் அனுப்பிய தவளைகளைக் குறித்து மோசே அவரை நோக்கி ஜெபம் செய்தான்.
13 மோசே கேட்டபடியே கர்த்தர் செய்தார். வீடுகளிலும், வெளிகளிலும், வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போயின.
14 தவளைகள் குவியலாக சேர்க்கப்பட்டன. அவை அழுகிப்போனதால், நாடெங்கும் துர்நாற்றம் வீசியது.
15 தவளைகளின் தொல்லை இல்லாததைக் கண்ட பார்வோன் மேலும் பிடிவாதம் கொண்டான். மோசேயும் ஆரோனும் கேட்டுக் கொண்டதை பார்வோன் செய்யவில்லை. கர்த்தர் கூறியபடியே இது நடந்தது.
16 கர்த்தர் மோசேயை நோக்கி, "ஆரோனிடம் அவனது தடியை உயர்த்தி, பூமியின் மீதுள்ள தூசியை அடிக்கும்படிகூறு, அப்போது எகிப்து தேசத்தின் எல்லா இடங்களிலும் தூசியெல்லாம் பேன்களாகும்" என்றார்.
17 அவர்கள் அவ்வாறே செய்தார்கள். ஆரோன் அவனது கையிலுள்ள தடியை உயர்த்தி, பூமியின் மீதுள்ள தூசியில் அடித்தான். எகிப்து முழுவதுமிருந்த தூசி பேன்களாயிற்று. மிருகங்களின் மீதும், ஜனங்களின் மீதும் அவை புகுந்தன.
18 மந்திரவாதிகளும் தங்கள் உபாயங்களைப் பயன்படுத்தி அவ்வாறே செய்ய முயன்றனர். தூசியிலிருந்து பேன்கள் வரும்படியாகச் செய்ய மந்திரவாதிகளால் முடியவில்லை. பேன்கள் மிருகங்களின் மீதும், ஜனங்களின் மீதும் தங்கின.
19 தேவனின் வல்லமையால் இவ்வாறு நிகழ்ந்தது என்று மந்திரவாதிகள் பார்வோனுக்குக் கூறினார்கள். ஆனால் பார்வோன் தன் மனதைக் கடினமாக்கி அவர்கள் கூறியதைக் கேட்க மறுத்தான். கர்த்தர் கூறியபடியே இது நடந்தது.
20 கர்த்தர் மோசேயை நோக்கி, "காலையில் எழுந்து பார்வோனிடம் போ. பார்வோன் நதிக்குப் போவான். அவனிடம், ‘எனது ஜனங்கள் போய், என்னைத் தொழுதுகொள்ள அனுமதி.
21 எனது ஜனங்களைப் போக அனுமதிக்காவிட்டால் ஈக்கள் உங்கள் வீட்டிற்குள்ளும், உன்மீதும், உன் அதிகாரிகள் மீதும் மிகுதியாய் வரும், உன் தேசமெங்கும் ஈக்கள் நிரம்பியிருக்கும்!
22 எகிப்திய ஜனகங்களுக்கு செய்ததுபோல, நான் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் செய்யமாட்டேன். என் ஜனங்கள் வாழும் கோசேனில் ஈக்கள் இராது. இதன் மூலம் இந்த ஜனங்களின் கர்த்தர் நான் என்பதை நீ அறிவாய்.
23 எனவே நாளைக்கு எனது ஜனங்களை உன் ஜனங்களைக் காட்டிலும் வேறுவிதமாக நடத்துவேன். அதுவே எனது அடையாளமாக அமையும்’ என்று கூறு" என்றார்.
24 பிறகு கர்த்தர் தான் சொன்னபடியே செய்து காட்டினார். மிகுதியான ஈக்கள் எகிப்து தேசமெங்கும் பார்வோன் வீட்டினுள்ளும் அவன் அதிகாரிகளின் வீட்டினுள்ளும் நிரம்பியிருந்தன. ஈக்கள் தேசத்தை அழித்துக் கொண்டிருந்தன.
25 எனவே பார்வோன் மோசேக்கும், ஆரோனுக்கும் சொல்லியனுப்பினான். பார்வோன் அவர்களை நோக்கி, "இந்தத் தேசத்திலேயே உங்கள் தேவனுக்குப் பலிகளைக் கொடுங்கள்" என்றான்.
26 ஆனால் மோசே, "அவ்வாறு செய்வது சரியாக இருக்காது. எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடுவதற்காக மிருகங்களைக் கொல்வது கொடிய காரியம் என்று எகிப்தியர்கள் நினைக்கிறார்கள். இதை நாங்கள் இங்குச் செய்தால் எகிப்தியர் எங்களைக் கண்டு, எங்கள் மீது கற்களை வீசிக் கொன்றுவிடுவார்கள்.
27 மூன்று நாட்கள் பாலைவனத்திற்குப் போய் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலி செலுத்த அனுமதிக்கவும். நாங்கள் செய்யும்படியாகக் கர்த்தர் கூறியதும் இதுதான்" என்றான்.
28 அதற்குப் பார்வோன், "பாலைவனத்திற்கு நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பலிகளைச் செலுத்துவதற்கு உங்களை அனுமதிப்பேன். ஆனால் வெகு தூரம் பயணம் செய்யக் கூடாது. இப்போது போய் எனக்காக ஜெபம் செய்யுங்கள்" என்றான்.
29 மோசே, "பார், நான் போய் உன்னிடமிருந்தும், உன் ஜனங்களிடமிருந்தும், உன் அதிகாரிகளிடமிருந்தும், ஈக்களை நீக்குவதற்காக கர்த்தரைக் கேட்டுக்கொள்வேன். ஆனால் கர்த்தருக்கு ஜனங்கள் பலி செலுத்துவதை நீ தடுக்கக் கூடாது" என்றான்.
30 பின் மோசே பார்வோனிடமிருந்து சென்று கர்த்தரிடம் ஜெபம் செய்தான்.
31 மோசே கேட்டபடியே கர்த்தர் செய்தார். பார்வோன், அவன் அதிகாரிகள், ஜனங்கள் ஆகியோரிடமிருந்தும் ஈக்களை அகற்றினார். எல்லா ஈக்களும் அகன்றன.
32 ஆனால் பார்வோன் மீண்டும் பிடிவாதம் மிகுந்தவனாய் ஜனங்களைப் போக அனுமதிக்கவில்லை.
×

Alert

×