Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

Exodus Chapters

Exodus 16 Verses

Bible Versions

Books

Exodus Chapters

Exodus 16 Verses

1 ஜனங்கள் ஏலிமை விட்டு ஏலிமுக்கும், சீனாய்க்கும் நடுவில் உள்ள சீன் பாலைவனத்திற்கு வந்தனர். எகிப்தைவிட்டுப் புறப்பட்டபின் இரண்டாவது மாதத்தில் பதினைந்தாம் நாள் அவர்கள் அந்த இடத்தை வந்தடைந்தனர்.’
2 இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் முறையிட ஆரம்பித்தனர். பாலைவனத்தில் மோசேயையும், ஆரோனையும் நோக்கி:
3 "எகிப்து தேசத்தில் கர்த்தர் எங்களைக் கொன்றிருந்தால் நலமாக இருந்திருக்கும். அங்கு உண்பதற்காவது மிகுதியான உணவு கிடைத்தது. எங்களுக்குத் தேவையான எல்லா உணவும் கிடைத்தன. ஆனால் இப்போது எங்களை நீர் பாலைவனத்திற்குள் கொண்டு வந்திருக்கிறீர். பசியால் இங்கு நாங்கள் எல்லோரும் செத்துப்போவோம்" என்றனர்.
4 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, "நான் வானத்திலிருந்து உணவுப்பொருளை விழச் செய்வேன். நீங்கள் உண்பதற்கு அது உணவாகும். ஒவ்வொரு நாளும் ஜனங்கள் வெளியே போய் அவர்களுக்கு அந்தந்த நாளுக்கு மட்டும் தேவையான உணவைச் சேகரித்துவரவேண்டும். இப்படி நான் அவர்களைச் சோதித்து, என் ஆலோசனைகளைப் பின்பற்றுகிறார்களா என்று பார்ப்பேன்.
5 ஒவ்வொரு நாளும் ஜனங்கள் அந்த நாளுக்குத் தேவையான உணவை மட்டுமே சேகரிக்கவேண்டும்: ஆனால் வெள்ளிக் கிழமையன்று, ஜனங்கள் உணவைத் தயாரிக்கும் பொழுது, இரண்டு நாட்களுக்குப் போதுமான இருமடங்கு உணவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
6 மோசேயும், ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, "இன்றிரவு நீங்கள் கர்த்தரின் வல்லமையைக் காண்பீர்கள். எகிப்திலிருந்து உங்களை அழைத்து வந்தவர் அவரே என்பதை நீங்கள் அறிவீர்கள்.
7 நீங்கள் கர்த்தரிடம் முறையிட்டபோது அவர் உங்கள் முறையீட்டைக் கேட்டார். எனவே நாளைக் காலையில் கர்த்தரின் மகிமையைக் காண்பீர்கள். நீங்கள் எங்களிடம் முறையிட்டுக் கொண்டேயிருக்கிறீர்கள். இப்போது எங்களுக்குச் சற்று ஓய்வு கிடைக்கும்" என்றார்கள்.
8 மோசே தொடர்ந்து, "நீங்கள் முறையிட்டீர்கள், கர்த்தர் உங்கள் முறையீட்டைக் கேட்டார். எனவே இன்றிரவு கர்த்தர் உங்களுக்கு மாமிசம் கிடைக்கச் செய்வார். காலையில் உங்களுக்குத் தேவையான அப்பத்தைப் பெறுவீர்கள். நீங்கள் ஆரோனிடமும் என்னிடமும் முறையிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆரோனுக்கும் எனக்கும் எதிராக அல்ல, நீங்கள் கர்த்தருக்கெதிராகவே முறையிட்டீர்கள்" என்றான்.
9 மோசே ஆரோனை நோக்கி, "இஸ்ரவேலின் ஜனங்களிடம் பேசு. அவர்களிடம், ‘கர்த்தருக்கு முன்பாக ஒருமித்து வாருங்கள். ஏனெனில் அவர் உங்கள் முறையீட்டைக் கேட்டார் என்று சொல்’" என்றான்.
10 ஆரோன் இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசினான். அவர்கள் எல்லோரும் ஓரிடத்தில் கூடியிருந்தார்கள். ஆரோன் பேசும் போது, எல்லா ஜனங்களும் திரும்பிப் பாலைவனத்தை நோக்கினார்கள். மேகத்தில் கர்த்தரின் மகிமை வெளிப்படுவதைக் கண்டார்கள்.
11 கர்த்தர் மோசேயை நோக்கி,
12 "இஸ்ரவேல் ஜனங்களின் முறையீட்டைக் கேட்டேன். எனவே அவர்களிடம் ‘இன்றிரவு நீங்கள் இறைச்சி உண்பீர்கள், காலையில் உங்களுக்கு வேண்டிய ரொட்டி கிடைக்கும். பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்பலாம் என்று அறிவீர்கள்’ என்று சொல்லுங்கள்" என்றார்.
13 அன்றிரவு, காடைப் பறவைகள் அவர்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிலும் வந்து விழுந்தன. ஜனங்கள் இறைச்சிக்காக அவற்றைப் பிடித்தனர். காலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே பனிபடர்ந்திருந்தது.
14 பனி மறைந்ததும் மெல்லிய அப்பம் போன்ற ஒரு பொருள் நிலத்தின் மேல் காணப்பட்டது.
15 இஸ்ரவேல் ஜனங்கள் ஒருவரையொருவர் நோக்கி, "இது என்ன?" என்றனர். அப்பொருள் என்ன என்று அவர்களுக்குத் தெரியாததினால், ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். மோசே அவர்களை நோக்கி, "கர்த்தர் உங்களுக்கு உணவாகக் கொடுப்பது இதுவே.
16 "ஒவ்வொருவனும் அவனவனுக்குத் தேவையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவனுக்கும் எட்டு கிண்ண அளவின்படி எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று சொல்லுகிறார்" என்றான்.
17 எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அவ்வாறே செய்தார்கள். ஒவ்வொருவனும் இந்த உணவைச் சேகரித்துக் கொண்டான். சிலர் மற்றவர்களை விட அதிகமாக எடுத்துக் கொண்டனர்.
18 ஜனங்கள் இந்த உணவைக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். உணவை அளந்தபோது ஒவ்வொருவருக்கும் போதுமான அளவு இருந்தது. ஆனால் ஒருபோதும் அதிகப்படியான உணவு இருந்ததில்லை. ஒவ்வொருவனும் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் தேவையான உணவை மாத்திரம் சேகரித்துக் கொண்டான்.
19 மோசே அவர்களை நோக்கி, "மறுநாள் உண்பதற்காக உணவை வைக்காதீர்கள்" என்றான்.
20 ஆனால் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படியவில்லை. சிலர் அடுத்த நாளுக்காகச் சிறிது உணவை எடுத்து வைத்தார்கள். அந்த உணவைப் புழுக்கள் அரித்தபடியால் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இவ்வாறு செய்தவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்.
21 ஒவ்வொரு நாள் காலையிலும் உணவைச் சேகரித்துக் கொண்டனர். ஒருவன் தான் சாப்பிடக் கூடிய அளவு உணவை எடுத்துக்கொண்டான். வெயில் ஏறினதும் உணவு உருகி மறைந்துபோனது.
22 வெள்ளியன்று, ஜனங்கள் இரண்டு மடங்கு உணவைச் சேர்த்தார்கள். ஒவ்வொருவருக்கும் 16 கிண்ண அளவு உணவைச் சேர்த்தார்கள். எனவே ஜனங்களின் தலைவர்கள் மோசேயிடம் வந்து இதனை அறிவித்தனர்.
23 மோசே அவர்களை நோக்கி, "இவ்வாறு தான் நடக்கும் என்று கர்த்தர் கூறியிருக்கிறார். நாளை கர்த்தரை மகிமைப்படுத்தும் விசேஷ நாளாகிய ஓய்வுநாள் என்பதால் இவ்வாறு நிகழ்ந்தது. இன்றைக்குத் தேவையான எல்லா உணவையும் சமையுங்கள். மீதமாகும் உணவை நாளை காலைக்காக எடுத்து வையுங்கள்" என்றான்.
24 எனவே மீதமான உணவை ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்து அடுத்த நாளுக்காகப் பத்திரப்படுத்தினார்கள். அன்று அந்த உணவு கெட்டுப்போகவில்லை, புழுக்களும் அந்த உணவை அணுகவில்லை.
25 சனிக்கிழமையன்று மோசே ஜனங்களை நோக்கி, "இன்று ஓய்வுநாள், இது கர்த்தருக்கு மரியாதை செலுத்தும் விசேஷ நாள். எனவே உங்களில் ஒருவனும் வெளியே போகக்கூடாது. நேற்று சேர்த்து வைத்த உணவையே உண்ணுங்கள்.
26 ஆறு நாட்கள் நீங்கள் உணவைச் சேகரிக்கவேண்டும், ஆனால் வாரத்தின் ஏழாவதுநாள் ஓய்வுக்குரிய நாள். எனவே பூமியில் விசேஷ உணவு எதுவுமிராது" என்றான்.
27 சனிக்கிழமையன்று சில ஜனங்கள் உணவைச் சேகரிக்கச் சென்றார்கள், ஆனால் அவர்களுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை.
28 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, "எனது கட்டளைகளுக்கும் போதனைகளுக்கும் கீழ்ப்படிய எத்தனை காலம் இந்த ஜனங்கள் மறுப்பார்கள்?
29 பார், உங்களுக்கு ஓய்ந்திருக்கும் நாளாக கர்த்தர் ஓய்வு நாளை உண்டாக்கினார். எனவே வெள்ளியன்று இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவைக் கர்த்தர் கொடுப்பார், பின் ஓய்வு நாளில் உங்களில் ஒவ்வொருவனும் ஓய்வெடுக்கவேண்டும். நீங்கள் இருக்குமிடத்திலேயே தங்கியிருங்கள்" என்றார்.
30 எனவே ஜனங்கள் ஓய்வுநாளில் ஓய்வெடுத்துக் கொண்டார்கள்.
31 அந்த விசேஷ உணவை ஜனங்கள் "மன்னா" என்று அழைத்தார்கள். இந்த மன்னா தோற்றத்தில் சிறிய வெண்மையான கொத்து மல்லி விதைகளைப் போன்றிருந்தன. அவை ருசியில் தேனில் தோய்க்கப்பட்ட மெல்லிய வார்ப்புரொட்டி போன்று இருந்தன.
32 மோசே, "கர்த்தர் உங்கள் சந்ததியினருக்காக ‘இந்த உணவில் எட்டு கிண்ணம் எடுத்து வையுங்கள். அப்போது, உங்களை எகிப்திலிருந்து அழைத்து செல்கையில் வனாந்திரத்தில் நான் உங்களுக்கு கொடுத்த உணவை உங்கள் தலைமுறையினர் பார்க்க முடியும்’ என்றார்" என்று சொன்னான்.
33 எனவே மோசே ஆரோனை நோக்கி, "ஒரு சிறிய ஜாடியை எடுத்து அதை 8 கிண்ணம் மன்னாவால் நிரப்பு. கர்த்தருக்கு முன் வைக்கும்படியாக அதைப் பத்திரப்படுத்து. அதை நமது சந்ததியினருக்காகவும் பாதுகாத்து வை" என்றான்.
34 (கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டவாறே ஆரோன் செய்தான். உடன்படிக்கைப் பெட்டியின் முன்னால் அந்த ஜாடியை ஆரோன் வைத்தான்.)
35 ஜனங்கள் 40 ஆண்டுகள் மன்னாவைச் சாப்பிட்டார்கள். ஓய்வுக்குரிய நாடாகிய, கானான் தேசத்தின் எல்லையை வந்தடையும் மட்டும் அவர்கள் மன்னாவைச் சாப்பிட்டார்கள்.
36 (மன்னாவை அளப்பதற்காக அவர்கள் பயன்படுத்தியது ஒரு ஓமர். எட்டுக் கிண்ணங்கள் அளவு கொண்டது ஒரு ஓமர் ஆகும்.)

Exodus 16:2 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×