நீங்கள் தேவனைத் தொழுதுகொள்ளப் போகும்போது கவனமாக இருங்கள். அறிவற்ற ஜனங்களைப் போன்று நீங்கள் தேவனுக்குப் பலிகளைக் கொடுப்பதைவிட அவர் கூறுவதைக் கவனிப்பது நல்லது அறிவற்றவர்கள் தொடர்ந்து தீமைகளைச் செய்வார்கள். அவர்கள் அதைப்பற்றி தெரியாதவர்களாக இருப்பார்கள்.
தேவனிடம் பொருத்தனை செய்யும்போது கவனமாக இருங்கள். தேவனிடம் சொல்லும் செய்திகளைப்பற்றியும் கவனமாக இருங்கள். நீங்கள் சிந்திக்காமல் பேச உங்கள் உணர்ச்சிகள் காரணமாகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். தேவன் பரலோகத்தில் இருக்கிறார். நீங்கள் பூமியில் இருக்கிறீர்கள். எனவே தேவனிடம் சிலவற்றை பேசுகின்ற அவசியமே உள்ளது. இந்த வார்த்தை உண்மையானது.
நீ தேவனுக்கு பொருத்தனை செய்தால் அதனைக் காப்பாற்று. நீ பொருத்தனை செய்ததை நிறைவேற்ற தாமதிக்காதே. முட்டாள்களின்மேல் தேவன் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார். தேவனுக்குக் கொடுப்பதாக வாக்களித்தவற்றை அவருக்கு கொடுத்துவிடு.
எனவே உனக்குப் பாவம் ஏற்படும்படி நீ வார்த்தைகளைப் பயன்படுத்தாதே. “நான் சொன்னதை அந்த அர்த்தத்துடன் சொல்லவில்லை” என்று ஆசாரியனிடம் சொல்லாதே. இவ்வாறு நீ செய்தால், தேவன் உன் வார்த்தைகளால் கோபங்கொண்டு, நீ செய்த வேலைகளை எல்லாம் அழித்துவிடுவார்.
சில நாடுகளில் ஏழைகள் கடினமாக உழைக்கும்படிக் கட்டாயப்படுத்தப்படுவதை நீ காணலாம். இது ஏழைகளுக்குச் செய்யும் நேர்மையல்ல. இது ஏழை ஜனங்களின் உரிமைகளுக்கு எதிரானது, ஆனால் ஆச்சரியப்படாதே. ஜனங்களைக் கட்டாயப்படுத்தி வேலைவாங்குகிற அரசனைக் கட்டாயப்படுத்த ஒரு அரசன் இருப்பான். இவர்கள் இருவரையும் கட்டாயப்படுத்த இன்னொரு அரசன் இருப்பான்.
செல்வத்தையே விரும்புகிற ஒருவன் தன்னிடமுள்ள செல்வத்தால் மட்டும் திருப்தி அடையமாட்டான். அவன் மேலும் மேலும் செல்வத்தைப் பெற்றாலும் திருப்தி அடையமாட்டான். இதுவும் அர்த்தமற்றது.
ஒருவன், மிகுதியான செல்வத்தைப் பெறும்போது அதைச் செலவுசெய்ய உதவும் மிகுதியான “நண்பர்”களைப் பெறுகிறான். எனவே அந்த செல் வந்தன் உண்மையில் ஆதாயமடைவது ஒன்றுமில்லை. அவன் தன் செல்வத்தைப் பார்க்க மட்டுமே முடியும்.
ஒருவன், பகல் முழுவதும் கடுமையாக உழைத்தால் இரவில் சமாதானமாகத் தூங்குகிறான். அவனுக்கு உண்பதற்கு மிகுதியாக உள்ளதா குறைவாக உள்ளதா என்பதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் செல்வந்தன் தன் செல்வத்தைப்பற்றிக் கவலைபட்டுக்கொண்டு தூங்காமல் இருக்கிறான்.
ஒருவன் தன் தாயின் உடலிலிருந்து வெளியே வரும்போது எதுவும் இல்லாமலேயே வருகிறான். அவன் மரிக்கும்போதும் எதுவும் இல்லாமலேயே போகிறான். பொருட்களைப் பெறுவதற்காகக் கடுமையாக உழைக்கிறான். ஆனால் மரிக்கும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லை.
உண்டு, குடித்து, இவ்வுலகில் வாழும் குறுகிய வாழ்வில் தான் செய்யும் வேலையில் இன்பம் காண்பதுதான் ஒருவன் செய்யும் சிறப்பான செயல்கள் என்று நான் எண்ணுகிறேன். அவனுக்கு இருப்பதெல்லாம் தேவன் கொடுத்த குறுகிய வாழ்க்கை மட்டுமே. அவனுக்கு வேறெதுவும் இல்லை.
தேவன், ஒருவனுக்குச் செல்வத்தையும் சொத்துக்களையும் அவற்றை அனுபவிப்பதற்கான உரிமையையும் கொடுத்திருக்கும்போது அவன் அவற்றை அனுபவித்து மகிழவேண்டும். இதனை ஏற்றுக்கொண்டு அவன் தனது வேலையில் இன்பம் காண வேண்டும். இது தேவனால் கொடுக்கப்பட்ட பரிசு.
ஒருவனால் நீண்டகாலம் வாழமுடியாது. எனவே அவன் இதனை வாழ்வு முழுவதும் நினைவில் வைத்திருக்கவேண்டும். ஒருவன் செய்ய விரும்புகிற வேலைகளில் தேவன் அவனைச் சுறுசுறுப்பாக வைத்துள்ளார்.