English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Daniel Chapters

Daniel 2 Verses

1 நேபுகாத்நேச்சாரின் ஆட்சியின் இரண்டாவது ஆண்டில் அவனுக்குச் சில கனவுகள் வந்தன. அக்கனவுகள் அவனை மிகவும் துன்புறுத்தின. அவனால் தூங்கமுடியவில்லை.
2 எனவே அரசன், தனது அறிஞர்களைத் தன்னிடம் அழைத்தான். அவர்கள் தங்கள் மந்திர, தந்திரங்களைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நட்சத்திரங்களைக் கவனித்தனர். அவர்கள் கனவுகளின் பலனைச் சொல்லவும் எதிர்காலத்தில் நடக்கக்கூடியதைத் கூறவுமே இவ்வாறு செய்தனர். தனது கனவைப் பற்றி தனக்குச் சொல்லவேண்டும் என்று அரசன் அவர்களிடம் கேட்டான். எனவே அவர்கள் வந்து அரசனின் முன்னால் நின்றார்கள்.
3 அரசன் அவர்களிடம், “நான் ஒரு கனவு கண்டேன். அது என்னைத் தொல்லைப்படுத்துகிறது. நான் கனவின் பொருளை அறிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றான்.
4 பிறகு கல்தேயர்கள் அரசனுக்குப் பதில் சொன்னார்கள். அவர்கள் அராமிக் மொழியில் பேசினார்கள். அவர்கள் அரசே, “நீர் என்றென்றும் வாழ்க. நாங்கள் உமது வேலைக்காரர்கள். தயவுசெய்து உமது கனவைக் கூறும். பிறகு அதன் அர்த்தம் என்னவென்று நாங்கள் கூறுவோம்” என்று சொன்னார்கள்.
5 பிறகு அரசன் நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “இல்லை, நீங்கள் எனது கனவைச் சொல்ல வேண்டும். பிறகு அதன் பொருள் என்னவென்றும் செல்லவேண்டும். நீங்கள் இவற்றைச் சொல்லாவிடால் உங்களைத் துண்டுதுண்டாக வெட்டிப் போடும்படிக் கட்டளையிடுவேன். அதோடு உங்கள் வீடுகள் குப்பைமேடுகளாக அழிக்கும்படிக் கட்டளையிடுவேன்.
6 ஆனால் நீங்கள் எனது கனவையும், அதன் பொருளையும் சொல்லிவிட்டால் நான் உங்களுக்கு பரிசுகளையும், அன்பளிப்புகளையும், மரியாதையும் தருவேன். எனவே என் கனவையும், அதன் பொருளையும் கூறுங்கள்” என்றான்.
7 மீண்டும் அந்த ஞானிகள் அரசனிடம், “தயவு செய்து கனவை எங்களுக்குச் சொல்லும். பிறகு நாங்கள் அதன் பொருளைக் கூறுகிறோம்” என்றனர்.
8 பிறகு அரசனான நேபுகாத்நேச்சார், “நீங்கள் காலதாமதம் செய்யப்பார்க்கின்றீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. நான் என்ன சொன்னேன் என்பதின் கருத்தை நீங்கள் அறிவீர்கள்.
9 எனது கனவைப்பற்றிச் சொல்லாவிட்டால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள்! எனவே நீங்கள் அனைவரும் என்னிடம் பொய் சொல்ல உடன்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் காலதாமதம் செய்கின்றீர்கள். நீங்கள் நான் செய்ய விரும்புவதை மறந்துவிடுவேன் என்று நம்புகிறீர்கள். இப்பொழுது எனது கனவைக் கூறுங்கள். உங்களால் எனது கனவைக் கூறமுடியுமானால் அதன் பொருளையும் கூறமுடியும் என்று நான் அறிவேன்” என்றான்.
10 கல்தேயர்கள் அரசனுக்குப் பதிலாக, “அரசர் கேட்பவற்றைச் சொல்லக்கூடிய மனிதன் பூமியில் எவனுமில்லை. இதுவரை எந்த அரசரும் இப்படிப்பட்ட ஒன்றை ஒரு மந்திரவாதியிடமோ, ஒரு ஜோசியனிடமோ, ஒரு கல்தேயனிடமோ, கேட்டதில்லை. மிகச் சிறந்தவனும், வலிமைபொருந்தியவனுமான எந்த அரசனும் இதுவரை இவ்வாறு அறிவாளிகளிடம் கேட்டதில்லை.
11 அரசர் மிகக் கடினமான ஒன்றைச் செய்யும்படிக் கேட்கிறீர். தெய்வங்களால் மட்டுமே அரசரது கனவையும், அக்கனவின் பொருளையும் கூறமுடியும். ஆனால் தெய்வங்கள் மனிதர்களோடு வாழ்வதில்லை”என்றனர்.
12 அரசன் இதனைக் கேட்டபோது மிகவும் கோபமடைந்தான். எனவே அவன் பாபிலோனில் உள்ள எல்லா ஞானிகளையும் கொலை செய்யும்படிக் கட்டளையிட்டான்.
13 அரசனான நேபுகாத்நேச்சாரின் கட்டளை அறிவிக்கப்பட்டது. எல்லா ஞானிகளும் கொல்லப்படவிருந்தனர். அரசனது ஆட்கள் தானியேலையும் அவனது நண்பர்களையும் கொலை செய்வதற்காகத் தேடினார்கள்.
14 அரசனது காவலர்களுக்கு ஆரியோகு தலைவனாக இருந்தான். அவன் பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்வதற்குப் போனான். ஆனால் தானியேல் அவனிடம் புத்திசாலித்தனமாகவும், சாதுர்யமாகவும் பேசினான்.
15 தானியேல் ஆரியோகுவிடம்: “அரசர் எதற்காக, இத்தகைய பயங்கரத் தண்டனையைக் கொடுத்தார்” என்று கேட்டான். பிறகு ஆரியோகு அரசனது கனவைப் பற்றிய முழு செய்தியையும் சொன்னான். உடனே தானியேல் புரிந்துகொண்டான்.
16 தானியேல் இச்செய்தியை அறிந்ததும் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் சென்றான். தானியேல் அரசனிடம் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கும்படி கேட்டான். பிறகு அவனால் அரசனது கனவையும் அதன் பொருளையும் சொல்ல முடியும் என்றான்.
17 பின்னர் தானியேல் தனது வீட்டிற்குப் போனான். அவன் தனது நண்பர்களான அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரிடம் எல்லாவற்றையும் சொன்னான்.
18 தானியேல் அவனது நண்பர்களிடம் பரலோகத் தேவனிடம் ஜெபிக்குமாறு வேண்டினான். தானியேல் அவர்களிடம் இந்த இரகசியத்தை அறிந்துகொள்ள உதவ கருணைகாட்டுமாறு தேவனிடம் விண்ணப்பிக்கும்படி வேண்டினான். இதனால் பாபிலோனிலுள்ள ஞானிகளோடு தானியேலும், அவனது நண்பர்களும் கொல்லப்படாமல் இருப்பார்கள்.
19 இரவில், தேவன் தானியேலுக்குத் தரிசனத்தின் மூலம் இரகசியத்தை விளக்கினார். பின்னர் தானியேல் பரலோகத்தின் தேவனைப் புகழ்ந்து போற்றினான்.
20 தானியேல், “என்றென்றும் தேவனுடைய நாமத்தைப் போற்றுங்கள். அதிகாரமும் ஞானமும் அவரோடுள்ளன.
21 அவர் காலத்தையும் பருவத்தையும் மாற்றுகிறார். அவர் அரசர்களை மாற்றுகிறார். அவர் அரசர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறார். அதோடு அரசர்களின் அதிகாரத்தை எடுத்தும்விடுகிறார். அவர் ஜனங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். எனவே அவர்கள் ஞானம் பெறுகின்றனர். அவர் ஜனங்கள் பலவற்றைக் கற்று ஞானிகளாக அனுமதிக்கிறார்.
22 அவர் புரிந்துகொள்வதற்குக் கடினமான இரகசியங்களைத் தெரிந்திருக்கிறார். அவரிடம் ஒளி வாழ்கிறது. எனவே அவருக்கு இருட்டிலும் இரகசியமான இடத்திலும் இருப்பது தெரிகிறது.
23 என் முற்பிதாக்களின் தேவனே நான் நன்றி சொல்லி உம்மைப் போற்றுகிறேன். நீர் எனக்கு ஞானமும் பலமும் கொடுத்தீர். நாங்கள் கேட்டவற்றை நீர் சொன்னீர். நீர் அரசனது கனவைப் பற்றி எங்களுக்குச் சொன்னீர்” என்றான்.
24 பின்னர் தானியேல், ஆரியோகுவிடம் சென்றான். அரசனான நேபுகாத்நேச்சார் பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்ல ஆரியோகுவைத் தேர்ந்தெடுத்திருந்தான். தானியேல் ஆரியோகிடம், “பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்லவேண்டாம். என்னை அரசனிடம் கொண்டுபோங்கள். நான் அவரிடம் அவரது கனவையும் அதன் பொருளையும் கூறுவேன்” என்றான்.
25 எனவே ஆரியோகு தானியேலை மிக விரைவாக அரசனிடம் அழைத்துச் சென்றான். ஆரியோகு அரசனிடம், “நான் யூதாவிலுள்ள கைதிகளில் ஒருவனைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவன் அரசனிடம் அவரது கனவைப்பற்றிச் சொல்லமுடியும்” என்றான்.
26 அரசன் தானியேலிடம் (பெல்தெஷாத்சார்), “உன்னால் எனது கனவையும் அதன் பொருளையும் பற்றி சொல்லமுடியுமா?” என்று கேட்டான்.
27 தானியேல்: “அரசரான நேபுகாத்நேச்சாரே, எந்த ஞானிகளாலும், எந்த ஜோசியர்களாலும், எந்த கல்தேயர்களாலும் அரசனின் இரகசியம் குறித்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது.
28 ஆனால் பரலோகத்தில் இரகசியங்களைப் பற்றிச் சொல்ல ஒரு தேவன் இருக்கிறார். தேவன் அரசரான நேபுகாத்நேச்சாருக்கு வருங்காலத்தில் என்ன நடைபெறும் என்பதைக் காட்ட கனவுகளைக் கொடுத்தார். இதுதான் உமது கனவு. உமது படுக்கையில் படுத்துக்கொண்டு நீர் பார்த்தவை இவைதான்.
29 அரசரே, நீர் உமது படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தீர். நீர் வருங்காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கத் தொடங்கினீர். எதிர்காலத்தைக் குறித்த இரகசியங்களைத் தேவன் ஜனங்களுக்குச் சொல்லமுடியும். அவர் உமக்கு வருங்காலத்தில் என்ன நிகழும் என்பதைக் காட்டினார்.
30 தேவன் என்னிடம் இந்த இரகசியத்தைச் சொன்னார். ஏன்? நான் மற்றவர்களைவிட ஞானம் கொண்டவன் என்பதற்காக அல்ல. அரசரான நீர் அந்த கனவின் பொருளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தேவன் என்னிடம் சொன்னார். அதே வழியில், உம் மனதில் ஓடிய நினைவுகளையும் நீர் புரிந்துகொள்வீர்.
31 “அரசரே, உமது கனவில் உமக்கு முன்னால் ஒரு பெரிய சிலையைக் கண்டீர். அச்சிலை மிகப் பெரியதும், பளபளப்பானதும், மனதைக் கிளர்ச்சி யூட்டக் கூடியதாகவும் இருந்தது. அது ஒருவனின் கண்களை வியப்பால் விரியச்செய்யத்தக்கது.
32 அச்சிலையின் தலையானது சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. அச்சிலையின் மார்பும், கைகளும் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தன. அச்சிலையின் வயிறும், கால்களின் மேல்பகுதியும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன.
33 அச்சிலையின் கால்களின் கீழ்ப்பகுதி இரும்பால் செய்யப்பட்டிருந்தது. அச்சிலையின் பாதங்கள் கொஞ்சம் இரும்பாலும், கொஞ்சம் களிமண்ணாலும் செய்யப்பட்டிருந்தது.
34 நீர் அந்தச் சிலையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீர் ஒரு பாறையைப் பார்த்தீர். கைகளால் பெயர்க்கப்படாத அக்கல் பெயர்ந்து உருண்டு வந்தது. அக்கல் காற்று வழியாக உருண்டுவந்து இரும்பாலும் களிமண்ணாலும் ஆன அச்சிலையின் பாதங்ககளில் மோதி அதின் பாதங்களை நொறுக்கியது.
35 பிறகு அந்த இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, தங்கம் எல்லாம் ஒரே நேரத்தில் துண்டுத் துண்டாக நொறுங்கியது. அவை, கோடைக் காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப் போன்று இருந்தன. அவற்றில், எதுவும் மிச்சமில்லாமல் அவை காற்றினால் அடித்துக் கொண்டு போகப்பட்டது. அங்கு ஒரு சிலை இருந்தது என்று எவராலும் சொல்லமுடியாதபடி இருந்தது. பிறகு சிலையைத் தாக்கிய அக்கல்பெரிய மலையாகி அந்தப் பூமி முழுவதையும் நிரப்பியது.
36 “இதுவே உமது கனவு. இப்பொழுது அரசரிடம் அதன் பொருள் என்னவென்று நான் கூறுவேன்.
37 அரசரே, நீர் மிக முக்கியமான அரசராக இருக்கிறீர். பரலோத்தின் தேவன் உமக்கு இராஜ்யம், அதிகாரம், பலம், மகிமை எல்லாம் கொடுத்திருக்கிறார்.
38 தேவன் உமக்குக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறார். உமக்கு மனிதர்களையும், மிருகங்களையும், பறவைகளையும், ஆளும் வல்லமையையும் கொடுத்திருக்கிறார். அவை எங்கே வாழ்ந்தாலும் அவற்றை ஆளும்படி உம்மை தேவன் செய்திருக்கிறார். அரசரான நேபுகாத்நேச்சாரே, நீர்தான் அந்தத் தங்கத்தாலான சிலையின் தலையைப் போன்றவர்.
39 “உமக்குப் பிறகு இன்னொரு இராஜ்யம் வரும். அது வெள்ளியைப் போன்றது. ஆனால் அந்த இராஜ்யம் உமது இராஜ்யத்தைப்போன்று அவ்வளவு உயர்வுடையதாக இராது. அதன் பின்னர் மூன்றாவது இராஜ்யமானது பூமி முழுவதையும் ஆளுகைச் செய்யும். அது வெண்கலப் பகுதி.
40 பிறகு நான்காவது இராஜ்யம் வரும். அது இரும்பைப்போன்று வலிமை உடையதாக இருக்கும். இரும்பானது எவ்வாறு உடைத்து தூள்தூளாக்குமோ அது போன்று நான்காவது இராஜ்யமும் மற்ற இராஜ்யங்களை நொறுக்கிப்போடும்.
41 “சிலையின் பாதங்கள் கொஞ்சம் இரும்பாலும், கொஞ்சம் களிமண்ணாலும் செய்யப்பட்டிருந்ததை நீர் பார்த்தீர். அதன் பொருள் அந்த நான்காவது இராஜ்யம் பிரிக்கப்பட்டதாயிருக்கும். அதில் இரும்பும், களிமண்ணும் கலந்திருப்பதால் இரும்பின் உறுதி கொஞ்சம் இருக்கும்.
42 சிலையின் கால்விரல்கள் பாதி இரும்பாகவும், பாதி களிமண்ணாகவும் இருந்தது. எனவே நான்காவது இராஜ்யமும் இரும்பைப்போல கொஞ்சம் பலமுள்ளதாகவும், களிமண்ணைப்போல கொஞ்சம் பலவீனமுள்ளதாகவும் உடையதாக இருக்கும்.
43 இரும்பு களிமண்ணோடு கலந்திருந்ததை நீர் பார்த்தீர். ஆனால் இரும்பும், களிமண்ணும் முழுமையாகக் கலக்காது. இதுபோல, நான்காவது இராஜ்யத்தில் ஜனங்கள் கலவையாக இருப்பார்கள். அந்த ஜனங்கள் ஒரே ஜனங்களாக இணையமாட்டார்கள்.
44 “நான்காவது இராஜ்யத்தில் அரசர்கள் இருக்கும்போது, பரலோகத்தின் தேவன் வேறொரு இராஜ்யத்தை உருவாக்குவார். இந்த இராஜ்யம் என்றென்றும் இருக்கும். இது அழிக்கப்படாது. இந்த இராஜ்யம் இன்னொரு ஜனங்கள் கூட்டத்திற்குக் கொடுக்கப்படுவதில்லை. இந்த இராஜ்யம் மற்ற இராஜ்யங்களை நொறுக்கும். இது அந்த இராஜ்யங்களை ஒரு முடிவிற்குக் கொண்டுவரும். ஆனால் இந்த இராஜ்யம் என்றென்றும் தொடர்ந்திருக்கும்.
45 “அரசரான நேபுகாத்நேச்சாரே, ஒரு மலையிலிருந்து ஒரு கல் எவராலும் பெயர்க்கப்படாமல் பெயர்ந்து வந்ததை நீர் பார்த்தீர். அக்கல் இரும்பு, வெண்கலம், களிமண், வெள்ளி, தங்கம் ஆகியவற்றைத் தூள்தூளாக்கியது. இதேபோல் தேவன் வருங்காலத்தில் என்ன நிகழும் என்று உமக்குக் காட்டினார். அந்தக் கனவு உண்மையானது. நீர் இந்த விளக்கத்தை நம்பலாம்” என்றான்.
46 அப்போது அரசனான நேபுகாத்நேச்சார் தானியேலின் முன் தரையில் விழுந்து வணங்கினான். அரசன் தானியேலைப் போற்றினான். அரசன் தானியேலைப் பெருமைப்படுத்துவதற்குக் காணிக்கை கொடுக்கவும், தூபம் காட்டவும் கட்டளையிட்டான்.
47 பிறகு அரசன் தானியேலிடம், “உனது தேவன் உண்மையிலேயே அதிமுக்கியமானவரும், வல்லமை உடையவருமானவர் என்பதை அறிவேன். அவர் அனைத்து அரசர்களுக்கும் கர்த்தராக இருக்கிறார். ஜனங்கள் அறியாதவற்றை அவர்களுக்கு அவர் கூறுகிறார். இது உண்மை என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் நீ இந்த இரகசியத்தை என்னிடம் சொல்லும் தகுதி பெற்றிருக்கிறாய்” என்றான்.
48 பிறகு அரசன் தானியேலுக்கு தனது இராஜ்யத்தில் மிக முக்கியமான ஒரு பதவியைக் கொடுத்தான். அதோடு அரசன் தானியேலுக்கு விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுத்தான். நேபுகாத்நேச்சார் தானியேலைப் பாபிலோன் மாகாணத்தின் ஆளுநராகவும் உயர்த்தினான். அதோடு அரசன் தானியேலைப் பாபிலோன் தேசத்தின் ஞானிகளுக்கெல்லாம் அதிகாரியாகவும் ஆக்கினான்.
49 தானியேல் அரசனிடம் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும் அதிகாரிகளாக்கும்படி வேண்டினான். தானியேல் வேண்டியபடியே அரசன் செய்தான். தானியேலும் அரசன் அருகிலே இருக்கும் முக்கியமானவர்களில் ஒருவனானான்.
×

Alert

×