சகோதர, சகோதரிகளே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வருவது பற்றிச் சில காரியங்கள் சொல்ல வேண்டியது உள்ளன. நாம் எப்போது அவரோடு ஒன்று சேருவோம் என்பது பற்றிப் பேச நாங்கள் விரும்புகிறோம்.
கர்த்தர் வரும் நாள் ஏற்கெனவே வந்துவிட்டதென கேள்விப்பட்டால், மனக் கலக்கமோ, பயமோ அடைந்து விடாதீர்கள். சிலர் இதனைத் தீர்க்கதரிசனமாகவோ, செய்தியாகவோ சொல்லலாம், அல்லது ஒருவன் எங்களிடத்தில் இருந்து கூட ஒரு கடிதம் வந்ததாகக் கூறி உங்களை ஏமாற்றப் பார்க்கலாம்.
எவரும் உங்களை எவ்விதத்திலும் முட்டாள் ஆக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் விசுவாச மறுதலிப்பும், அழிவின் மகனாகிய பாவமனிதனும் தோன்றும் வரை அந்த நாள் வராது. பாவமனிதன் நரகத்துக்கு உரியவன்.
அவன் தேவனுக்கும் மனிதர்களின் வழிபாடுகளுக்கும் எதிரானவன். அவன் தேவனுடைய ஆலயத்திற்கும் சென்று அங்கே உட்காருவான். பிறகு, தன்னை தேவனைவிட உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்வான்.
பாவத்தின் இரகசிய சக்தி ஏற்கெனவே உலகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் அவனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை உடையவர் ஒருவரே! அவன் முழுமையாகத் தன் வழியில் இருந்து விலக்கப்படும்வரை அவனைத் தடுத்து நிறுத்துவார் அவர்.
பிறகு அந்தப் பாவ மனிதன் வெளிப்படுவான். கர்த்தராகிய இயேசு தன் வாயில் இருந்து வரும் சுவாசத்தினால் அவனைக் கொல்வார். அவர் தன் பெருமைமிகு வருகையின் மூலமே அந்தப் பாவமனிதனை அழிப்பார்.
பாவ மனிதன் எல்லாவிதமான பாவங்களையும் செய்து ஆன்மீக அளவில் தான் வஞ்சிக்கும் மக்களை ஏமாற்ற பல தந்திரங்கள் செய்வான். உண்மையை நேசிக்க மறுத்ததால் அம்மக்கள் ஆன்மீக அளவில் தொலைந்துபோனவர்கள் ஆகிறார்கள். (உண்மையை நேசித்திருந்தால் அவர்கள் இரட்சிக்கப்பட்டிருப்பார்கள்.)
சகோதர, சகோதரிகளே! கர்த்தர் உங்களிடம் அன்புடன் இருக்கிறார். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே தேவன் ஆரம்பத்திலேயே உங்களைத் தேர்ந்தெடுத்தார். ஆகவே, உங்களுக்காக எப்பொழுதும் நாங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற பரிசுத்த ஆவியானவராலும், உண்மையின் மீது நீங்கள் வைக்கும் விசுவாசத்தாலும் இரட்சிக்கப்படுகிறீர்கள்.
அந்த இரட்சிப்பை அடைய உங்களை தேவன் அழைத்தார். நாங்கள் பரப்புகிற நற்செய்தியைப் பயன்படுத்தி நீங்கள் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும் பொருட்டு தேவன் உங்களை அழைத்தார்.
சகோதர சகோதரிகளே! ஆகையால் உறுதியாய் நில்லுங்கள். எங்கள் போதனைகளில் தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். அவற்றை நாங்கள் பிரசங்கங்கள் மூலமும், நிருபங்களின் மூலமும் உங்களுக்குப் போதித்திருக்கிறோம்.
(16-17) நம்மை நேசித்தும், நமக்கு நல்ல விசுவாசத்தைக் கொடுத்தும், எக்காலத்திலும் தொடர்கிற ஆறுதலை வழங்கியும் வருகிற இயேசு கிறிஸ்துவாகிய கர்த்தரும், நம் பிதாவாகிய தேவனும் தொடர்ந்து உங்களை ஆறுதல்படுத்தவும், நீங்கள் சொல்கிற, மற்றும் செய்கிற ஒவ்வொரு நற்செயலிலும் உங்களை வலிமையுறச் செய்யவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.