Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

2 Samuel Chapters

2 Samuel 6 Verses

Bible Versions

Books

2 Samuel Chapters

2 Samuel 6 Verses

1 இஸ்ரவேலின் மிகச்சிறந்த வீரர்களையெல்லாம் தாவீது ஒன்றாகக் கூட்டினான். மொத்தம் 30,000 பேர் இருந்தனர்.
2 தாவீதும் அவனது ஆட்களும் யூதாவிலுள்ள பாலாவிற்குச் சென்றனர். அவர்கள் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி ஜனங்கள் பரிசுத்தப் பெட்டியருகே வருவார்கள். பரிசுத்தப் பெட்டியானது கர்த்தருடைய சிங்காசனமாக இருந்தது. கேரூபின்களின் உருவங்கள் பரிசுத்தப் பெட்டியின் மேலே இருந்தன. கேருபீன்கள் மேல் கர்த்தர் ராஜாவாக வீற்றிருக்கிறார்.
3 மேட்டிலிருந்த அபினதாபின் வீட்டிற்கு வெளியே அவர்கள் பரிசுத்த பெட்டியைக் கொண்டு வந்தார்கள். பின்பு தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை ஒரு புதிய வண்டியில் ஏற்றினார்கள். அந்த வண்டியை அபினதாபின் மகன்களாகிய ஊசாவும் அகியோவும் ஓட்டினார்கள்.
4 மேட்டிலிருந்த அபினதாபின் வீட்டிலிருந்து அவர்கள் பரிசுத்தப் பெட்டியைச் சுமந்துவந்தனர். தேவனுடைய பரிசுத்தப் பெட்டியோடு ஊசா வண்டியின் மீது அமர்ந்திருந்தான். பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக அகியோ நடந்துக்கொண்டிருந்தான்.
5 கர்த்தருக்கு முன் தாவீதும் இஸ்ரவேலரும் நடனமாடினார்கள். இரட்டைவால் வீணை, சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, தாளம் ஆகிய மருதகட்டையில் செய்த இசைக்கருவிகளை இசைத்தப்படி சென்றனர்.
6 நாகோனுக்குச் சொந்தமான போரடிக்கும் களத்தை அடைந்தபோது வண்டியில் பூட்டப்பட்ட பசுக்கள் இடறின. எனவே தேவனுடைய பரிசுத்த பெட்டி வண்டிக்கு வெளியே விழலாயிற்று. ஊசா பரிசுத்த பெட்டியை பிடித்தான்.
7 ஆனால் கர்த்தர் ஊசாவின் மீது கோபங்கொண்டு அவனைக் கொன்றார். ஊசா பரிசுத்த பெட்டியைத் தொட்டபோது அவன் தேவனுக்கு மரியாதை கொடுக்காமல் செயல்பட்டான். ஆகவே தேவனுடைய பரிசுத்தப் பெட்டியருகில் ஊசா அங்கே மரித்தான்.
8 கர்த்தர் ஊசாவைக் கொன்றதால் தாவீது கலக்கமுற்றான். தாவீது அந்த இடத்தை "பேரேஸ் ஊசா" என்று அழைத்தான். இன்றும் அந்த இடம் பேரேஸ் ஊசா என்றே அழைக்கப்படுகிறது.
9 தாவீது அந்த நாளில் கர்த்தரிடம் பயப்பட்டான். தாவீது, "நான் இங்கு இப்போது தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எவ்வாறு கொண்டுவர முடியும்?" என்றான்.
10 ஆகையால் தாவீதின் நகரத்திற்குள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைக் கொண்டு வரவில்லை. காத் ஊரானாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் தாவீது பரிசுத்தப் பெட்டியை வைத்தான். போரடிக்கும் களத்திலிருந்து ஓபேத் ஏதோமின் வீடுவரைக்கும் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை தாவீது சுமந்து வந்தான்.
11 ஓபேத் ஏதோமின் வீட்டில் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி மூன்று மாதங்கள் இருந்தது. ஓபேத் ஏதோமையும் அவனது குடும்பத்தாரையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.
12 பின்னர், ஜனங்கள் தாவீதிடம், "ஓபேத் ஏதோமின் குடும்பத்தையும் அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றையும், தேவனுடைய பரிசுத்தப் பெட்டி அங்கிருந்ததால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்" என்றார்கள். தாவீது போய் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை ஓபேத் ஏதோம் வீட்டிலிருந்து கொண்டு வந்தான். அதனை தாவீதின் நகரத்திற்கு கொண்டு போனான். தாவீது மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தான்.
13 கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து சென்றவர்கள் ஆறு அடி எடுத்து வைத்ததும் நின்றார்கள். தாவீது ஒரு காளையையும் கொழுத்த கன்று குட்டியையும் பலியிட்டான்.
14 பின்பு தாவீது கர்த்தருக்கு முன்பாகத் தன் முழு பலத்தோடு நடனமாடினான். தாவீது மெல்லிய பஞ்சாலாகிய ஏபோத்தை அணிந்திருந்தான்.
15 தாவீதும் இஸ்ரவேலரும் களிப்படைந்தனர். அவர்கள் ஆரவாரம் செய்து எக்காளம் ஊதியபடி கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை நகரத்திற்குள் கொண்டு வந்தார்கள்.
16 சவுலின் மகள் மீகாள் ஜன்னல் வழியாய் இதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி நகரத்திற்குள் கொண்டு வரப்பட்டபோது, கர்த்தருக்கு முன்பாக தாவீது பாடி நடனம் ஆடிக்கொண்டிருந்தான். மீகாள் தாவீதைப் பார்த்து தன் மனதிற்குள் அவனை இகழ்ந்தாள். அவன் தன்னைத் தானே தரக்குறை வாக்கிக்கொள்கிறான் என்று அவள் நினைத்தாள்.
17 தாவீது பரிசுத்தப் பெட்டிக்காக ஒரு கூடாரம் அமைத்தான். இஸ்ரவேலர் கூடாரத்தினுள்ளே கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை அதற்குரிய இடத்தில் வைத்தார்கள். பின்பு தாவீது தகனபலியையும் சமாதான பலியையும் கர்த்தருக்கு முன்பாகச் செலுத்தினான்.
18 தகன பலியையும் சமாதான பலியையும் செலுத்திய பிறகு தாவீது சர்வ வல்லைமையுள்ள கர்த்தருடைய நாமத்தில் ஜனங்களை ஆசீர்வதித்தான்.
19 தாவீது இஸ்ரவேலின் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் பங்காகிய ரொட்டியும், முந்திரிப்பழ அடையும், பேரீச்சம்பழ அடையும் கொடுத்தான். பின்பு எல்லோரும் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.
20 தாவீது தன் வீட்டை ஆசீர்வதிப்பதற்காகத் திரும்பிச் சென்றான். ஆனால் சவுலின் மகளாகிய மீகாள் அவனைச் சந்தித்து, "இஸ்ரவேலின் அரசன் தன்னைத்தான் இன்று மதிக்கவில்லை! பணிப்பெண்களின் முன்னே உமது ஆடைகளை நீக்கி வெட்கமின்றி ஆடுகின்ற மூடனைப்போல் நடந்துக்கொண்டீர்!" என்றாள்.
21 அதற்கு தாவீது மீகாளை நோக்கி, "உனது தந்தையையோ, அவரது குடும்பத்தின் எந்த மனிதனையோ தேர்ந்தெடுக்காமல் கர்த்தர், என்னைத் தேர்ந்தெடுத்தார். அவரது ஜனங்களாகிய இஸ்ரவேலருக்குத் தலைவனாக கர்த்தர் என்னைத் தேர்ந்தெடுத்தார். எனவே நான் கர்த்தருக்கு முன்பாக தொடர்ந்து ஆடிப்பாடிக் கொண்டாடுவேன்!
22 இதைக்காட்டிலும் அவமரியாதையான செயல்களையும் நான் செய்யக்கூடும்! நீ என்னை மதியாமலிருந்தாலும் நீ குறிப்பிடும் பெண்கள் என்னை உயர்வாக மதிக்கிறார்கள்!" என்றான்.
23 சவுலின் மகளான மீகாள் தனது மரண நாள்வரை குழந்தை இல்லாமல் இருந்து மரித்தாள்.

2-Samuel 6:15 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×