இஸ்ரவேல் மீது மீண்டும் கர்த்தர் கோபம் அடைந்தார். இஸ்ரவேலருக்கு எதிராகக் திரும்பும்படி கர்த்தர் தாவீதை மாற்றினார். தாவீது, “இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுங்கள்” என்றான்.
தாவீது அரசன் படைத் தலைவனாகிய யோவாபை நோக்கி, “தாணிலிருந்து பெயெர் செபா வரைக்கும் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களிடமும் நீ போய் ஜனங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடு. அப்போது நான் மொத்த ஜனங்கள் தொகையைப் பற்றித் தெரிந்துக்கொள்ள முடியும்” என்றான்.
ஆனால் யோவாப் அரசனிடம், “எத்தனை ஆட்கள் இருக்கிறார்கள் என்பது முக்கிய மன்று. உன் தேவனாகிய கர்த்தர், உங்களுக்கு நூறு மடங்கு ஆட்களைத் தருவார், உங்கள் கண்கள் அவ்வாறு நடப்பதைப் பார்க்கும்! ஆனால் ஏன் இதைச் செய்ய விரும்புகிறீர்?” என்று கேட்டான்.
தாவீது அரசன் உறுதியாக யோவாபுக்கும் படைத் தலைவர்களுக்கும் ஜனங்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளையிட்டார். எனவே யோவாபும் படைத் தலைவர்களும் இஸ்ரவேலின் ஜனங்கள் தொகையைக் கணக்கெடுக்க அரசனிடமிருந்து சென்றனர்.
அவர்கள் யோர்தான் நதியைக் கடந்தனர். அவர்கள் ஆரோவேரில் முகாமிட்டுத் தங்கினார்கள். நகரின் வலது புறத்தில் அவர்கள் முகாம் இருந்தது. (காத் பள்ளத்தாக்கின் நடுவில் நகரம் இருந்தது. யாசேருக்குப் போகும் வழியில் அந்த நகரம் இருந்தது.)
அவர்கள் தீரு என்னும் கோட்டைக்கு போனார்கள். அவர்கள் கானானியர் மற்றும் ஏவியரின் நகரங்களுக்கெல்லாம் சென்றார்கள். அவர்கள் யூதாவின் தெற்கிலுள்ள பெயெர்செபாவிற்குப் போனார்கள்.
ஒன்பது மாதங்களும் 20 நாட்களும் கழிந்த பிறகு அவர்கள் தேசம் முழுவதும் சுற்றிவந்திருந்தார்கள். 9 மாதங்கள் 20 நாட்களுக்குப் பிறகு அவர்கள் எருசலேமுக்கு வந்தனர்.
ஜனங்கள் தொகையைக் கணக்கெடுத்த பிறகு தாவீது வெட்கமடைந்தான். தாவீது கர்த்தரை நோக்கி, “நான் செய்த இக்காரியத்தில் பெரும் பாவம் செய்தேன்! கர்த்தாவே! என் பாவத்தை மன்னிக்கும்படி நான் கெஞ்சுகிறேன். நான் மிகவும் மூடனாகிவிட்டேன்” என்றான்.
கர்த்தர் காத்தை நோக்கி, “போய் தாவீதிடம் கூறு, ‘இதுவே கர்த்தர் கூறுவது: நான் மூன்று காரியங்களை முன் வைக்கிறேன். நான் உனக்குச் செய்வதற்கு ஏதேனும் ஒன்றைத் தெரிந்துக்கொள் என்கிறார்’ என்று சொல்” என்றார்.
காத் தாவீதிடம், போய் அவ்வாறே கூறினான். அவன் தாவீதிடம், “இம்மூன்று காரியங்களிலும் ஒன்றைத் தெரிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கும் இத்தேசத்திற்கும் ஏழு ஆண்டுகள் பஞ்சம் வரவேண்டுமா? மூன்று மாதங்கள் உங்கள் பகைவர்கள் உங்களைத் துரத்தவேண்டுமா? அல்லது மூன்று நாட்கள் உங்கள் தேசத்தாரை நோய் பாதிக்கட்டுமா? இதைக் குறித்து யோசித்துப் பாருங்கள், இவற்றில் எதை முடிவு செய்கிறீர்கள் என்பதை நான் என்னை அனுப்பிய கர்த்தருக்குக் கூற வேண்டும்” என்றான்.
தாவீது காத்தை நோக்கி “உண்மையிலேயே நான் துன்பத்துக்குள்ளானேன்! ஆனால் கர்த்தர் இரக்கமுள்ளவர். எனவே கர்த்தர் நம்மைத் தண்டிக்கட்டும். ஜனங்களிடமிருந்து எனக்குத் தண்டனை கிடைக்க வேண்டாம்” என்றான்.
எனவே கர்த்தர் இஸ்ரவேலில் நோயை அனுப்பினார். அது, காலையில் ஆரம்பித்துக் குறிப்பிட்ட காலம் மட்டும் நீடித்தது. தாணிலிருந்து பெயெர் செபாவரைக்கும் 70,000 பேர் மடிந்தனர்.
தேவ தூதன் எருசலேமை அழிக்கும்படி அதற்கு நேராக தன் கரங்களை உயர்த்தினான். ஆனால் நடந்த தீய காரியங்களுக்காக கர்த்தர் மனம் வருந்தினார். ஜனங்களை அழித்த தூதனைக் கர்த்தர் நோக்கி, “போதும்! உனது கரங்களைத் தாழ்த்து” என்றார். எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு அருகே கர்த்தருடைய தூதன் நின்றுக்கொண்டிருந்தான்.
ஜனங்களைக் கொன்ற தூதனை தாவீது பார்த்தான். தாவீது கர்த்தரிடம் பேசினான். தாவீது, “நான் பாவம் செய்தேன்! நான் தவறிழைத்தேன். இந்த ஜனங்கள் ஆடுகளைப் போன்று என்னைப் பின் பற்றினார்கள். அவர்கள் தவறேதும் செய்யவில்லை. என்னையும் எனது தந்தையின் குடும்பத்தையும் நீங்கள் தண்டியுங்கள்” என்றான்.
பின் அர்வனா, “எனது ஆண்டவனும் அரசருமாகிய நீங்கள் ஏன் என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டான். தாவீது அவனுக்கு, “உன்னிடமிருந்து போரடிக்கிற களத்தை வாங்குவதற்கு வந்தேன். அதில் கர்த்தருக்குப் பலிபீடம் அமைக்கமுடியும். அப்படி செய்து நோய் பரவாமல் தடுக்க முடியும்” என்றான்.
ஆனால் அரசன் அர்வனாவுக்கு, “நான் உனக்கு உண்மையைச் சொல்வேன், உன் நிலத்தை ஒரு விலை கொடுத்துப் பெறுவேன். ஆனால் எனது தேவனாகிய கர்த்தருக்கு இலவசமாக கிடைத்த எந்த தகன பலியையும் செலுத்தமாட்டேன்” எனக் கூறினான். ஆகையால் தாவீது போரடிக்கிற களத்தையும் பசுக்களையும் 50 சேக்கல் வெள்ளிக்கு வாங்கினான்.