பூமியில் வாழ்வதற்குக் கிடைத்த கூடாரம் போன்ற நம் சரீரம் அழியக் கூடியது என்பதை நாம் அறிவோம். ஆனால் அது நிகழும்போது தேவன் நாம் வாழ்வதற்கென்று ஓர் இடம் வைத்துள்ளார். அது மனிதர்களால் அமைக்கப்பட்ட இடமல்ல. அது பரலோகத்தில் உள்ள வீடு. அது என்றென்றும் நிலைத்திருப்பது.
நம் கூடாரம் போன்ற இந்த சரீரத்தில் வாழும்வரை பாரமுள்ளவர்களாய்த் துன்பப்படுகிறோம். இந்த சரீரத்தை விட்டுவிட வேண்டுமென்று நான் கூறவில்லை. ஆனால் நாம் பரலோக வீட்டால் போர்த்தப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். பிறகு அழிவடையும் இந்த சரீரம் உயிருடன் நிறைந்திருக்கும்.
தேவனைத் திருப்திப்படுத்துவதே வாழ்க்கையில் நமது ஒரே குறிக்கோள். இங்கே இந்த சரீரத்தில் வாழ்ந்தாலும் அங்கே கர்த்தரோடு இருந்தாலும் தேவனைத் திருப்திப்படுத்தவே விரும்புகிறோம்.
நியாயந்தீர்க்கப்படுவதற்காக நாம் அனைவரும் கிறிஸ்துவின் முன்பு நிற்க வேண்டும். ஒவ்வொருவனும் அவனவனுக்குரியதைப் பெறுவான். உலகில் சரீரத்துடன் பூமியில் வசிக்கும்போது அவனவன் செய்த நன்மை அல்லது தீமைகளுக்குத் தகுந்தபடியே தீர்ப்பளிக்கப்படுவான்.
கர்த்தருக்குப் பயப்படுவது என்றால் என்ன பொருள் என நாம் அறிவோம். எனவே மக்கள் உண்மையை ஏற்றுக்கொள்ளும்படி உதவ நாங்கள் முயற்சி செய்கிறோம். உண்மையில் நாங்கள் யார் என்பது தேவனுக்குத் தெரியும். எங்களைப் பற்றி உங்கள் இதயங்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன்.
நாங்கள் மீண்டும் உங்களுக்கு எங்களை நிரூபித்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை. ஆனால் எங்களைப் பற்றி நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். எங்களைக் குறித்து நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்வதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறோம். இப்போது வெளிப்படையாய்த் தெரியும் சில காரணங்களுக்காகத் தம்மைத்தாமே பாராட்டிக்கொள்ளும் சிலருக்குத் தெரிவிக்க உங்களிடம் ஒரு பதில் உள்ளது. ஒரு மனிதனின் இதயத்துக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிக் கவலை இல்லாதவர்கள் அவர்கள்.
கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டிவிடுகிறது. ஏனென்றால் ஒவ்வொருவருக்குமாக அவர் இறந்தார் என்பது, அனைவருமே இறந்துவிட்டதையே குறிக்கும் என்று நமக்குத் தெரியும்.
கிறிஸ்து மக்கள் அனைவருக்காகவும் இறந்து போனதால், உயிரோடு இருக்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென்று இராமல், தங்களுக்காக மரித்து எழுந்த கிறிஸ்துவுக்காக உயிர் வாழவேண்டும்.
எனவே, இந்த நேரத்திலிருந்து, நாங்கள் ஒருவரையும் மற்ற உலக மக்களைப் போன்று சரீரத்தில் அறியமாட்டோம். முன்பு நாங்களும் மற்றவர்களைப் போன்றே கிறிஸ்துவை சரீரத்தில் அறிந்திருந்தோம். இனிமேல் அவ்வாறு எண்ணவில்லை.
இவை அனைத்தும் தேவனிடமிருந்து வந்தன. கிறிஸ்துவின் மூலம் தேவன் அவருக்கும் நமக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கினார். மக்களை சமாதானத்திற்குள் கொண்டு வந்து சேர்க்கும் பணியை எங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.
தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தார். அவருக்கும் உலகத்துக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கினார் என்று சொல்கிறேன். கிறிஸ்துவுக்குள், தம் பாவங்கள் குறித்து குற்ற உணர்ச்சி கொண்ட மக்களை தேவன் குற்றவாளிகளாக நிறுத்துவதில்லை. இச்சமாதானச் செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு எங்களுக்குக் கொடுத்தார்.
எனவே, கிறிஸ்துவுக்காகப் பேச நாங்கள் அனுப்பப்பட்டிருக்கிறோம். எங்கள் மூலம் தேவன் உங்களை அழைக்கிறார். நாங்கள் கிறிஸ்துவுக்காகப் பேசுகிறோம். நீங்கள் அனைவரும் தேவனோடு சமாதானமாக இருக்க வேண்டுகிறோம்.
கிறிஸ்துவிடம் பாவம் இல்லை. ஆனால் தேவன் நமக்காக அவரைப் பாவம் ஆக்கினார். நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுக்கு ஏற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக தேவன் இதைச் செய்தார்.