Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

Books

1 Samuel Chapters

1 Samuel 26 Verses

Bible Versions

Books

1 Samuel Chapters

1 Samuel 26 Verses

1 சீப் ஜனங்கள் சவுலைப் பார்க்க கிபியாவிற்குச் சென்றார்கள். அவர்கள் சவுலிடம், "தாவீது ஆகிலா மேட்டில் ஒளிந்திருக்கிறான். அந்த இடம் எஷிமோனை அடுத்துள்ளது" என்று சொன்னார்கள்.
2 சவுல் சீப் பாலைவனத்திற்கு இறங்கிப் போனான். சவுல் இஸ்ரவேல் முழுவதிலும் இருந்து 3,000 வீரர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்கள் பாலைவனத்தில் தாவீதைத் தேடினார்கள்.
3 சவுல் ஆகிலா மேட்டில் தன் முகாமை அமைத்திருந்தான். இது எஷிமோனிலிருந்து வரும் சாலைக்கு அருகில் இருந்தது. தாவீது அதே பாலைவனத்தில்தான் தங்கியிருந்தான் சவுல் தன்னைத் தேடி வந்திருப்பதை தாவீது அறிந்துகொண்டான்.
4 அவன் ஒற்றர்களை அனுப்பி சவுல் ஆகிலாவிற்கு வந்துவிட்டதையும் தெரிந்துகொண்டான்.
5 பிறகு தாவீது சவுலின் முகாமிற்குச் சென்றான். அங்கே சவுலும் அப்னேரும் தூங்குவதைக் கண்டான். (அப்னேர் சவுலின் படைத்தலைவனான நேரின் மகன்) சவுல் முகாமின் மையத்தில் தூங்கிக்கொண்டிருந்தான். அவனைச் சுற்றிலும் படைவீரர்கள் இருந்தனர்.
6 ஏத்தியனாகிய அகிமெலேக்கிடமும், செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயிடமும் தாவீது பேசினான். "நான் சவுலின் முகாமிற்குப் போகிறேன். என்னோடு யார் வருகிறீர்கள்?" என்று கேட்டான். அபிசாயோ, "நான் உங்களுடன் வருகிறேன்" என்ற பதிலுரைத்தான்.
7 இரவில் அவர்கள் அங்குச் சென்றார்கள். முகாமின் மையத்தில் சவுல் தூங்க, அவனது தலைமாட்டில் அவனது ஈட்டி தரையில் குத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்னேரும் மற்ற வீரர்களும் சவுலைச் சுற்றிலும் தூங்கிக்கொண்டிருந்தனர்.
8 அபிசாய் தாவீதிடம், "உங்கள் எதிரியைத் தோல்வியுறச் செய்ய தேவன் இன்று வாய்ப்பு அளித்துள்ளார். தரையோடு இவனை ஈட்டியால் ஒரே குத்தாக குத்திவிடட்டுமா? ஒரே தடவையில் அதைச் சாதிக்க என்னால் முடியும்!" என்றான்.
9 ஆனால் தாவீது அபிசாயிடம், "சவுலைக் கொல்லவேண்டாம்! கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்கு யார் கேடு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்!
10 ஜீவிக்கின்ற கர்த்தர் தாமே இவரைத் தண்டிப்பார். இவர் இயற்கையாகவும் மரிக்கலாம், அல்லது போரில் கொல்லப்படலாம்.
11 ஆனால், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்கு என்னால் மரணம் வரும்படி கர்த்தர் செய்யக் கூடாது! இப்போது ஈட்டியையும் தண்ணீர் செம்பையும் எடுத்துக்கொண்டுபோவோம்" என்றான்.
12 சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக் கொண்டு தாவீது கிளம்பினான். பிறகு தாவீதும், அபிசாயும் முகாமை விட்டு வெளியேறினார்கள். நடந்தது என்னதென்று யாருக்கும் தெரியவில்லை! யாரும் இதைப் பார்க்கவுமில்லை, எழும்பவுமில்லை. கர்த்தரால் சவுலும் மற்ற வீரர்களும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். அவமானப் படுத்துகிறான்
13 பள்ளத்தாக்கின் மறு பக்கத்திற்கு தாவீது கடந்து போனான். மலையின் உச்சியில் நின்ற கொண்டான்.
14 அப்னேரிடமும், சவுலின் வீரர்களிடமும் சத்தமான குரலில், "அப்னேர்! எனக்குப் பதில் சொல்" என்றான். அப்னேரும், "நீ யார்? ஏன் அரசனை அழைக்கிறாய்?" என்று கேட்டான்.
15 தாவீது, "நீ ஒரு மனிதன் தானே? இஸ்ரவேலில் உள்ள பிற மனிதர்களைவிட நீ சிறந்தவன் அல்லவா? நான் சொல்வது சரி என்றால் பின் ஏன் உன் அரசனைக் காக்கவில்லை? உன் அரசனைக் கொல்ல ஒரு சாதாரண மனிதன் உன் கூடாரத்திற்கு வந்தான்.
16 நீ பெரிய தவறுச் செய்துவிட்டாய்! நீயும் உன் ஆட்களும் மரித்திருக்க வேண்டும். கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனைப் பாதுகாக்கத் தவறிவிட்டீர்கள். உன் அரசனின் தலைமாட்டில் உள்ள ஈட்டியும் தண்ணீர் செம்பும் எங்கே என்று பாருங்கள்?" என்றான்.
17 சவுல் தாவீதின் சத்தத்தை அறிந்துகொண்டான். "என் மகனே! தாவீது, இது உனது குரலா?" என்று கேட்டான். அதற்கு தாவீது, "ஆமாம், என் அரசனாகிய எஜமானே, என் குரலேதான்" என்றான்.
18 தாவீது மேலும், "ஐயா என்னை ஏன் தேடுகிறீர்கள்? நான் என்ன தவறு செய்தேன்? நான் என்ன குற்றவாளியா?
19 எனது எஜமானனாகிய அரசனே! நான் சொல்வதைக் கவனியும்! என் மீது உமக்கு கோபம் வரும்படி, கர்த்தர் செய்திருந்தால் அதற்கு தகுந்த காணிக்கையை அவர் ஏற்றுக்கொள்வாராக, மனிதர்கள் செய்திருந்தால், அதற்கு கர்த்தர் அவர்களுக்குத் தண்டனை அளிக்கட்டும். கர்த்தர் எனக்குக் கொடுத்த நாட்டைவிட்டுப் போகும்படி மனிதர்கள் செய்துவிட்டார்களே. ‘போய் அந்நியரோடு வாழு, அவர்களின் தெய்வங்களுக்கு சேவைசெய்’ என்று மனிதர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
20 இப்போது கர்த்தருடைய சந்நிதிவிட்டு வெகு தூரத்தில் நான் மரிக்கும்படி நீர் செய்யவேண்டாம். மலையில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோன்று இஸ்ரவேலின் அரசன் ஒரு தெள்ளுப்பூச்சியை வேட்டையாட வந்தாரோ?" என்று கேட்டான்.
21 பிறகு சவுல், "நான் பாவம் செய்துவிட்டேன். திரும்பி வா மகனே, என் உயிர் உனக்கு முக்கியமானது என்பதை எனக்குக் காட்டிவிட்டாய். இனிமேல் உனக்குக் கேடுசெய்ய முயலமாட்டேன். நான் அறிவீனமாக நடந்துகொண்டேன். நான் பெருந்தவறு செய்துவிட்டேன்" என்றான்.
22 தாவீதோ, "இதோ, அரசனின் ஈட்டி என்னிடம் உள்ளது யாராவது ஒரு இளைஞன் வந்து பெற்றுக்கொள்ளட்டும்.
23 கர்த்தர் ஒவ்வொரு மனிதருக்கும், அவரவரின் செயலுக்குதக்க பலன் அளிக்கிறார். நீதியான காரியங்களை செய்பவர்களுக்கு நன்மை தருகிறார். தீமை செய்பவர்களுக்கு தண்டனையை தருகிறார். கர்த்தர் எனக்கு இன்று உங்களைத் தோற்கடிக்க வாய்பளித்தார். ஆனால் நான் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்கு கேடு செய்யவில்லை.
24 இன்று உங்கள் வாழ்க்கை எனக்கு முக்கியமானது என்பதைக் காட்டினேன்! அதேபோல் கர்த்தரும் என் வாழ்க்கை அவருக்கு முக்கியமானது என்று காட்டுவார்! கர்த்தர் என்னை அனைத்து துன்பங்களில் இருந்தும் காப்பார்" என்றான்.
25 பின் சவுல் தாவீதிடம், "தேவன் உன்னை ஆசீர்வதிப்பார், என் மகனே, நீ பெரியக் காரியங்களைச் செய்து, வாழ்வில் பெரும் வெற்றியைப் பெறுவாய்" என்றான். தாவீது தன் வழியே போனான். சவுல் தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான்.

1-Samuel 26:1 Tamil Language Bible Words basic statistical display

COMING SOON ...

×

Alert

×