அன்று தன் ஆயுதங்களைத் தூக்கி வந்த இளைஞனோடு சவுலின் மகனாகிய யோனத்தான், பேசினான், “பள்ளத்தாக்கின் இன்னொரு பக்கத்தில் உள்ள பெலிஸ்தர்களின் முகாமிற்கு போவோம்” என்றான். தந்தையிடம் சொல்லாமல் போனான்.
யோனத்தான் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்து வந்த இளம் உதவியாளனிடம், “வா, நாம் அந்நியரின் முகாமுக்குப் போவோம், அவர்களைத் தோற்கடிக்க ஒருவேளை கர்த்தர் நமக்கு உதவலாம்! கர்த்தரை யாராலும் தடுக்க முடியாது. நமது எண்ணிக்கை அதிகமோ அல்லது குறைவோ அது காரியமல்ல” என்றான்.
ஆனால் அவர்கள் ‘இங்கே வாருங்கள்’ என்றால் போவோம். ஏனென்றால் கர்த்தர் நாம் அவர்களைத் தோற்கடிக்க அனுமதிக்கிறார் என்பதற்கு இது தேவனுடைய அடையாளமாகும்” என்றான்.
பெலிஸ்தர் பார்வையில் படுமாறு யோனத்தானும், இளம் உதவியாளனும் நடந்தனர். அவர்களோ, “பார்! இஸ்ரவேலர்கள் துவாரங்களில் ஒளிந்திருந்து வெளியே வருகிறார்கள்” என்றனர்.
(13-14) யோனத்தான் தன் கைகளாலும், கால்களாலும் பற்றியபடி மலைமீது ஏறினான். உதவியாளன் பின்னால் ஏறினான். அவர்கள் இருவரும் பெலிஸ்தர்களைத் தாக்கி, முதலில் 20 பேரை கொன்றனர். முன்னால் வருகின்றவர்களை யோனத்தானும், பின்னால் வருகிறவரை உதவியாளனும் கொன்றனர்.
வயலிலும், கோட்டையிலும், முகாமிலும் உள்ள வீரர்கள் இவர்களைக் கண்டு பயந்தனர்! பூமி அதிர்ந்தது. இதைக் கண்டு மிகுந்த தைரியமுள்ள வீரர்களும் மென்மேலும் பயந்தனர்.
சவுல், “நம்மவர்களை எண்ணிக் கணக்கிடுங்கள். முகாமிற்கு வெளியே யார் போனது என்று தெரியவேண்டும்” என்றான். அவர்கள் ஆட்களின் தொகையைக் கணக்கிட்டனர். யோனத்தானும் அவனது உதவியாளனும் காணவில்லை.
எனவே, கர்த்தர் அன்று இஸ்ரவேலரை காப்பாற்றினார். அச்சண்டை பெத்தாவேனைக் கடந்தது. சவுலிடம் இப்போது 10,000 வீரர்களும் முழுபடையும் இருந்தனர். மலைநாட்டில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் இந்தப் போர் பரவியது.
அன்று சவுல் ஒரு பெரிய தவறு செய்தான். இஸ்ரவேலர் களைப்பாகவும் பசியோடும் இருந்தனர். அவர்களிடம், “மாலைக்கு முன் யாராவது உண்டாலோ, பகைவரை வெல்லுமுன் யாராவது உண்டாலோ தண்டிக்கப்படுவார்கள்!” என்று ஆணையிட்டிருந்தான். எனவே யாரும் அன்று உண்ணாமல் இருந்தனர்.
ஆனால் யோனத்தானுக்கு அவற்றைப்பற்றி எந்த விஷயமும் தெரியாது. உண்ணாமலிருக்க ஜனங்கள் நிர்பந்திக்கப்பட்டதைப்பற்றி அவன் எதுவும் அறிந்திருக்கவில்லை. யோனத்தானின் கையில் ஒரு கோல் இருந்தது. கோலின் ஒரு முனையைத்தேன் கூட்டில் நுழைத்து வெளியே எடுத்து, அத்தேனைப் பருகினான். பருகி முடிந்ததும் மிகவும் தெம்பாக இருப்பதாக உணர்ந்தான்.
ஒரு வீரன், “உமது தந்தை ஒரு சிறப்பான ஆணைச் செய்யும்படி எல்லா வீரர்களையும் நிர்பந்தித்திருக்கிறார். யாரேனும் ஒருவர் இன்றைய தினம் உண்டால் தண்டிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்! எவரும் உண்ணவில்லை அதனால் தான் எல்லாரும் சோர்வாக உள்ளனர்” என்றான்.
ஒருவன் சவுலிடம், “பாருங்கள்! ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டனர். அவர்கள் இறைச்சியை அதில் இரத்தம் இருக்கும்போது தின்று கொண்டிருக்கின்றனர்!” என்றான். சவுலோ, “நீங்கள் பாவம் செய்திருக்கிறீர்கள்! இப்போது இங்கே பெரிய கல்லை உருட்டிக் கொண்டு வாருங்கள்” என்றான்.
மேலும், “ஜனங்களிடம் போங்கள், இரத்தத்தோடு இருப்பதைச் சாப்பிடுவதால் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டீர்கள். தங்கள் மாட்டையும் ஆட்டையும் என் முன் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லுங்கள். இங்குதான் அவர்கள் ஆடுகளையும், மாடுகளையும் கொல்லவேண்டும். கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்யவேண்டாம். இரத்தம் உறைந்திருக்கிற இறைச்சியை உண்ணவேண்டாம்” என்றான். அன்று இரவு ஒவ்வொருவனும் தங்கள் மிருகங்களைக் கொண்டு வந்து அங்கே கொன்றனர்.
சவுல், “இன்று இரவு பெலிஸ்தர்களுக்கும் பின்னால்போய் அவர்களைக் கொன்று அவர்களுடையதை எடுத்து வருவோம்!” என்று சொன்னான். படையினர், “உங்களுக்குச் சரி என்று படுவதைச் செய்யுங்கள்” என்று சொன்னார்கள். ஆனால் ஆசாரியனோ, “தேவனைக் கேட்போம்” என்றான்.
அப்பொழுது சவுல், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, உமது தொண்டனுக்கு இன்று ஏன் பதில் சொல்லவில்லை? நானோ அல்லது என் மகனோ பாவம் செய்திருந்தால், ஊரீம்மைத் தாரும். உம்முடைய இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்திருந்தால் தும்மீம்மைத் தாரும்” என்று ஜெபித்தான். சவுலும் யோனத்தானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜனங்கள் தப்பினார்கள்.
சவுல் மகனிடம், “சொல் என்ன பாவம் செய்தாய்?” என்று கேட்டான். அதற்கு யோனத்தான், “நான் என் கோலின் நுனியில் இருந்த கொஞ்சம் தேனை சுவைத்தேன். அதற்காக நான் மரிக்க வேண்டுமா?” என்று கேட்டான்.
ஆனால் வீரர்களோ, “இன்று யோனத்தான் இஸ்ரவேலருக்குப் பெரிய வெற்றியைத் தந்தான். அவன் மரிக்கக்கூடாது! ஜீவனுள்ள தேவனுடைய நாமத்தில் நாங்களும் சத்தியம் செய்கிறோம். யோனத்தானின் தலையிலிருந்து யாரும் ஒரு மயிரையேனும் அகற்ற முடியாது! தேவன் இன்று அவனுக்குப் பெலிஸ்தர்களை வெல்ல உதவினார்!” என்றனர். எனவே யோனத்தானை ஜனங்கள் காப்பாற்றினார்கள். அவன் கொல்லப்படவில்லை.
சவுல் தன் ஆயுள் முழுவதும் பெலிஸ்தரோடு போரிட்டான். தைரியமும் வீரமும் உள்ள யாரைப் பார்த்தாலும் அவனை அழைத்து வீரர்களின் சேனையில் சேர்ந்துவிடுவான். அவர்கள் அரசனுக்கு அருகாமையில் இருந்து அரசனை காப்பாற்றுவர்.