அங்கே கூடியிருந்த அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமும் தாவீது, “என் மகன் சாலொமோனை தேவன் தேர்ந்தெடுத்துள்ளார். அவன் இளைஞன். இந்த வேலையைச் செய்து முடிக்கும் தேவைகளைப் பற்றிய அறிவு இல்லாதவன். ஆனால் இந்த வேலையோ மிகவும் முக்கியமானது. இது ஜனங்களுக்கான வீடு அன்று. இது தேவனாகிய கர்த்தருக்கான வீடு.
எனது தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான திட்டங்களை என்னால் முடிந்தவரை செய்துள்ளேன். நான் தங்கப் பொருட்கள் செய்வதற்கான தங்கத்தைக் கொடுத்துள்ளேன். வெள்ளிப் பொருட்களைச் செய்வதற்கான வெள்ளியையும் நான் கொடுத்துள்ளேன். வெண்கலப் பொருட்களைச் செய்வதற்கான வெண்கலத்தையும் நான் கொடுத்துள்ளேன். இரும்பு பொருட்களைச் செய்வதற்கான இரும்பையும் நான் கொடுத்துள்ளேன். மரப் பொருட்கள் செய்வதற்கான மரத்தையும் நான் கொடுத்துள்ளேன். பதிப்பதற்குத் தகுந்த ஒளிமிக்க கற்களையும், பலவண்ண கற்களையும், வெண்கற்பாளங்களையும், விலையுயர்ந்த சகல வித இரத்தினங்களையும், கோமேதகம் போன்ற கற்களையும் நான் கொடுத்துள்ளேன். இது போல் பலவிதமான பொருட்களைக் கர்த்தருடைய ஆலயத்திற்காக நான் கொடுத்திருக்கிறேன்.
எனக்குச் சொந்தமான பொன்னையும், வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளேன். இதனை நான் எதற்காகச் செய்தேன் என்றால் என் தேவனுடைய ஆலயம் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன். அதனால் அனைத்து பொருட்களையும் பரிசுத்த ஆலயத்திற்கு கொடுத்துவிட்டேன்.
110 டன் சுத்தமான பொன்னை நான் ஓபிரிலிருந்து கொடுத்தேன். 260 டன் சுத்தமான வெள்ளியையும் நான் கொடுத்திருக்கிறேன். இவ்வெள்ளி ஆலயச் சுவர்களை மூடிட பயன்படும்.
தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆன பொருட்களுக்குத் தேவையான தங்கத்தையும், வெள்ளியையும் கொடுத்திருக்கிறேன். இந்த பொன்னினாலும் வெள்ளியாலும் திறமையுடையவர்கள் ஆலயத்திற்குத் தேவையான பல்வேறு வகை பொருட்களைச் செய்யலாம். இப்போது இஸ்ரவேலர்களில் எத்தனை பேர் ஆலயப் பணிக்காக, உங்களைக் கர்த்தருக்கு கொடுக்கத் தயாராக இருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
குடும்பத் தலைவர்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களும், ஆயிரம் பேருக்கான அதிபதிகளும், நூறுபேருக்கான அதிபதிகளும், அரசனின் மந்திரிகளான தலைவர்களும் ஒப்புக் கொண்டு தங்களது மதிப்பு வாய்ந்த பொருட்களைக் கொடுக்க முன்வந்தனர்.
பிறகு தாவீது அனைத்து ஜனங்களின் முன்பாக கர்த்தரை துதித்தான். தாவீது: “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, எங்கள் தந்தையே, எல்லா காலங்களிலும் உமக்கு துதி உண்டாவதாக!
செல்வமும், மகத்துவமும் உம்மிடம் இருந்து வரும். நீர் எல்லாவற்றையும் ஆளுகிறீர். உமது கையில் வல்லமையும் அதிகாரமும் உள்ளது! எவரையும் வல்லமையும், அதிகாரமும் உள்ளவனாக்கும் வல்லமையும் உமது கையில் உள்ளது!
இந்தப் பொருட்கள் அனைத்தும் என்னிடமும், என் ஜனங்களிடமும் இருந்து வந்ததல்ல! அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தன. நாங்கள் அவற்றை உமக்குத் திருப்பித் தருகிறோம்.
நாங்கள் எங்கள் முற்பிதாக்களைப் போன்று உலகமெங்கும் பயணம் செய்துகொண்டு பரதேசிகளாக இருக்கிறோம். இவ்வுலகில் எங்கள் வாழ்வு கடந்து செல்லும் நிழல் போன்றுள்ளது. இதனை நிறுத்த முடியவில்லை.
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் இவ்வளவு பொருட்களையும் ஆலயத்திற்காக சேகரித்துள்ளோம். உமது பெயரைப் பெருமைப்படுத்த ஆலயம் கட்டுகிறோம். ஆனால் அனைத்தும் உம்மிடம் இருந்து வந்தன. எல்லாம் உமக்குரியன.
எனது தேவனே, நீர் ஜனங்களை சோதிப்பதை நான் அறிவேன். ஜனங்கள் நன்மை செய்தால் நீர் மகிழ்ச்சி அடைவீர். நான் மகிழ்ச்சியோடு சுத்தமான, நேர்மையான மனதோடு இவற்றைத் தருவேன். நான் உமது ஜனங்கள் கூட்டியுள்ளதை பார்த்தேன். இப்பொருட்களை உமக்குக் கொடுப்பதில், அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
கர்த்தாவே, எங்கள் முற்பிதாக்களான, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் ஆகியோரின் தேவன், சரியானவற்றைத் திட்டமிடுவதில் உம் ஜனங்களுக்கு தயவுசெய்து உதவும்! உம்மிடம் உண்மையாகவும், தாழ்மையாகவும் இருக்க உதவும்.
என் மகன் சாலொமோன் உமக்கு உண்மையாக இருக்கவும், உமது ஆணைகளுக்கும், சட்டங்களுக்கும், விதிகளுக்கும் கூட கீழ்ப்படிய உதவும். இவற்றைச் செய்ய சாலொமோனுக்கு உதவும். நான் திட்டமிட்டபடி இத்தலைநகரைக் கட்ட அவனுக்கு உதவும்” என்றான்.
பிறகு தாவீது அனைத்து குழு ஜனங்களிடமும், இப்போது உங்கள், “தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்” என்றான். எனவே அனைத்து ஜனங்களும் துதித்தனர். தரையில் குனிந்து கர்த்தரையும் அரசனையும் வணங்கினார்கள்.
அன்று ஜனங்கள் மகிழ்ச்சியோடு கர்த்தருடன் உண்பதும் குடிப்பதுவுமாய் இருந்தனர். அவர்கள் தாவீதின் மகனான சாலொமோனை இரண்டாம் முறையாக அரசனாக்கினார்கள். அவர்கள் சாலொமோனை அரசனாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும், அபிஷேகம் செய்தனர். கர்த்தர் இருக்கிற இடத்திலேயே அவர்கள் இதைச் செய்தார்கள்.
பிறகு சாலொமோன் கர்த்தருடைய சிங்காசனத்தின் மேல் அமர்ந்தான். அவன் தனது தந்தையின் இடத்தை எடுத்துக்கொண்டான். அவன் வெற்றியுள்ளவனாயிருந்தான். இஸ்ரவேலர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தனர்.
கர்த்தர் சாலொமோனை மிகப் பெரியவனாக்கினார். கர்த்தர் சாலொமோனைப் பெரியவராக்கிவிட்டார் என்பதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தெரிந்துக்கொண்டனர். ஒரு அரசனுக்குரிய பெருமையைக் கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார். வேறு எந்த அரசனுக்கும் இஸ்ரவேலில் இவ்வளவு ராஜரீக மகத்துவம் கிடைத்ததில்லை.
(26-27) ஈசாயின் மகனான தாவீது 40 ஆண்டுகள் இஸ்ரவேல் முழுவதற்கும் அரசனாக இருந்தான். எப்ரோன் நகரில் தாவீது 7 ஆண்டுகளுக்கு அரசனாக இருந்தான். பிறகு தாவீது எருசலேம் நகரில் 33 ஆண்டுகள் அரசனாக இருந்தான்.
தாவீது முதுமையடைந்ததும் மரித்தான். தாவீது ஒரு நீண்ட நல்ல வாழ்க்கையை வாழ்ந்தான். தாவீது பல செல் வங்களையும் பெருமைகளையும் பெற்றான். அவனுக்குப் பிறகு அவனது மகனான சாலொமோன் புதிய அரசன் ஆனான்.
தொடக்க முதல், இறுதிவரை தாவீது செய்தவற்றையெல்லாம் தீர்க்கதரிசியான நாத்தனும், ஞானதிருஷ்டிக்காரனான சாமுவேலும், ஞானதிருஷ்டிக்காரனான காத்தும் தங்கள் புத்தகங்களில் எழுதியுள்ளனர்.
தாவீது இஸ்ரவேலின் அரசனாகச் செய்தவற்றையெல்லாம் அந்த எழுத்துக்கள் கூறுகின்றன. அவை தாவீதின் வலிமையையும், அவனுக்கு நேர்ந்தவற்றையும் கூறுகின்றன. அவை இஸ்ரவேலுக்கும் அதைச் சுற்றியுள்ள அரசுகளுக்கும் ஏற்பட்டவற்றையும் கூறும்.